ARTICLE AD BOX
பணம் என்னடா பணம் பணம் குணம்தானே நிரந்தரம். உண்மைதான் பணம் இல்லையென்றாலும் நல்ல குணம் படைத்தவர்கள் நல் வாழ்வையே வாழ்கின்றனர். நல்ல குணம் காரணமாக அதைக்கொண்டு எப்படி வாழவேண்டும் என்பது நன்கு தெரிந்திருக்கும். பணம் இன்றி இந்த உலகத்தில் வாழ்வது கடினம் தான் என்றாலும் அது இல்லாமல் வாழவே முடியாது என்றில்லை அல்லவா? அவர்களும் இந்த உலகில் பிழைத்துக் கொண்டுதான் இருக்கிறார்கள்.
பிறரை நன்மதிப்புடன் நடத்தும் ஒருவர் பணத்தினை பற்றி எப்போதும் கவலைப்படாமல் பிறருக்காக மட்டுமே தனக்கு ஊதியமாக வரும் பணத்தினை செலவு செய்துவிட்டு தனக்காக மனிதர்களை சேர்த்து வைத்துக்கொண்டு வாழ்ந்து கொண்டுதான் இருக்கிறார்கள். இப்படிப்பட்ட மனிதநேயம் மிக்க நல்ல குணம் படைத்தவர்களை உலகம் போற்றிக் கொண்டுதான் உள்ளது.
நல்ல மனம் இருந்தால் போதும். நாம் வாழும் முறையினை நம் குணம் ஒன்றே தீர்மானிக்கிறது. அந்த குணமானது சூழலை பொறுத்து அமைகின்றது. அதை சிலர் நல்ல வழியில் மாற்றியமைக்கின்றனர். அவர்கள் பணத்தினை கொண்டிருந்தாலும் 'மனிதத்தினை' தேர்வு செய்கின்றார்கள். அவர்களும் அவர்களுக்கான பணத் தேவைகளை தீர்த்துக் கொள்வதுடன் மற்றவர்களுக்கும் உதவியாக இருக்கின்றனர்.
சிலர் பணத்தினை ஆள்கிறார்கள். ஆனால் பலரும் பணம் தன்னையே ஆள அனுமதிக்கின்றனர். பணம்தான் எல்லாவற்றையும் தீர்மானிக்கிறது என்பது அடிப்படையில் தவறான புரிதலாகும். பணம் தேவைதான். அது இல்லாமல் வாழமுடியாது. அதற்காக பணமே வாழ்க்கையாகி விடாது என்பதையும் புரிந்து கொள்ள வேண்டும். பணத்தை வைத்து நிம்மதி, சந்தோஷம் என எல்லாவற்றையும் வாங்கிவிட முடியாது. இந்த உலகத்தில் பணம்தான் வாழ்க்கையா என்றால் கிடையாது என்ற பதில்தான் கிடைக்கும்.
"நல்லார் ஒருவர் உளரேல் அவர் பொருட்டு
எல்லோர்க்கும் பெய்யும் மழை"
என்ற வள்ளுவரின் குறளே சான்று. மனித வாழ்வுக்கு இன்றிமையாத இயற்கை கொடையுள் மழையும் ஒன்று. அது பெய்வதே இதுபோல நல்ல குணம் நிறைந்த ஒருவர் இருப்பதால் தான் என்கிறார் வள்ளுவர்.
வாழ்க்கை சுகமாக அமையவேண்டும் என்றால் நற்செயல்கள் புரிந்திருக்க வேண்டும். எவ்வளவுதான் செல்வம் பெற்றிருந்தாலும் நல்ல நிகழ்வுகள் நடைபெற வேண்டுமென்றால் நல்ல குணங்களை பெற்றிருக்க வேண்டும். குணவான்கள் நிச்சயமாக எந்த சூழ்நிலையில் வாழ்ந்தாலும் மனநிறைவுடன், மனநிம்மதியுடன்தான் வாழ்வார்கள். எனவே வாழ்க்கையில் உயர்வான குணங்களை கடைபிடித்து மேன்மை பெருக வாழ்வதே சிறந்தது.
பணம் தேவையில்லை நல்ல மனம், குணம், படிப்பு, ஆரோக்கியம் இருந்தால் போதும் என்று சொல்லவில்லை. பணத்தைவிட குணம் மிகவும் முக்கியம் என்பதுதான் வாதம். பணத்தை தேடிச் சென்றாலும், பணத்திற்காக நம்மிடம் உள்ள உயர்ந்த குணத்தை, மனசாட்சியை, தன்மானத்தை, நல்ல உறவுகளை என்றும் இழக்காமல் மனித நேயத்துடன் வாழவேண்டும் என்பதை முக்கிய குறிக்கோளாக கொள்ளவேண்டும்.