ARTICLE AD BOX
இந்த உலகத்திலேயே எது மிகவும் விலை மதிப்பற்றது என்று வெற்றி பெற்ற சாதனையாளர்களிடம் சென்று கேட்டால், நேரத்தையே குறிப்பிடுவார்கள். நேரம் என்பது நம் வாழ்கையை முன்னேற்றுவதற்கான முதலீடாகும். அதை சரியாக பயன்படுத்தி வாழ்க்கையில் வெற்றிப் பெறவேண்டியது நமது கடமை. இதை தெளிவாக புரிந்துக் கொள்ள ஒரு குட்டிக் கதையைப் பார்ப்போம்.
ஒரு ஊரில் ஒரு அப்பா, மகன் வாழ்ந்து வந்தார்கள். அப்பா மிக பெரிய தொழிலதிபர் அவருக்கோ நேரம் என்பது முதலீடாகும். ஆனால், அவருடைய மகன் நேரத்தை வீணடித்துக் கொண்டேயிருந்தான். அவனுக்கு நேரத்தின் மதிப்பை எப்படியாவது புரியவைக்க வேண்டும் என்று அப்பா எண்ணினார்.
ஒருநாள் மகனை அழைத்துக்கொண்டு அருகில் இருந்த பூங்காவிற்கு சென்றார். அங்கே நிறைய பிச்சைக்காரர்கள் இருப்பது வழக்கம். அங்கே சென்ற அப்பா அங்கிருந்த மூன்று குறிப்பிட்ட பிச்சைக்காரர்களுக்கு மட்டும் ஒருகட்டு பணத்தை கொடுத்தார். இதை பார்த்த மகன், ‘நான் கேட்டால் ஒரு பைசா கூட தரமாட்டார். ஆனால், இவர்களுக்கு இவ்வளவு பணம் தருகிறார்’ என்று நினைத்துக் கொண்டான்.
இப்படியே நாட்கள் நகர்ந்தது ஒரு வருடம் ஆனது. இப்போது அப்பா மறுபடியும் மகனை அழைத்துக்கொண்டு அதே பூங்காவிற்கு சென்று பார்க்கிறார். அன்று பார்த்த மூன்று பிச்சைக்காரர்களில் ஒருவர் மட்டுமே அமர்ந்திருந்தார். அந்த பிச்சைக்காரரிடம் சென்ற தந்தை, ‘நான் போன வருடம் உங்களுக்கு பணம் கொடுத்தேனே நினைவிருக்கிறதா? அந்த பணத்தையெல்லாம் என்ன செய்தீர்கள். மறுடியும் இங்கேயே வந்து உட்கார்ந்திருக்கிறீர்களே?’ என்று கேட்டார்.
அதற்கு அந்த பிச்சைக்காரன், ‘நான் அந்த பணத்தை வைத்து இரண்டு மாதம் நன்றாக சாப்பிட்டேன். பிறகு பணம் தீர்ந்ததும், மறுபடியும் இங்கேயே வந்துவிட்டேன்’ என்று கூறினான். ‘உன்னுடன் இன்னும் இரண்டு பிச்சைக்காரர்கள் இருந்தார்களே அவர்கள் எங்கே?’ என்று கேட்டார். ‘அப்போது பிச்சைக்காரன் எதிரே இருக்கும் ஐஸ்கிரீம் கடையை காட்டி அந்த கடை நீங்கள் பணம் கொடுத்த ஒரு பிச்சைக்காரனுடையது’ என்று கூறினார். ‘இன்னொரு பிச்சைக்காரன் நீங்கள் கொடுத்த பணத்தை வைத்து சூதாட்டத்தில் ஏமாந்துவிட்டான்’ என்று சொல்லி முடித்தான்.
இப்போது அந்த அப்பா தன் மகனிடம் கூறினார், ‘நான் இந்த மூன்று பேருக்கும் ஒரே நாள் ஒரே அளவிளான பணத்தைதான் கொடுத்தேன். அதில் ஒருவன் பணத்தை வீணடித்துவிட்டு போன வருடம் எந்த நிலையில் பார்த்தோமோ அதே நிலையில்தான் இருக்கிறான். இன்னொருவன் அதே பணத்தால் சூதாட்டத்திற்கு அடிமையாகி தான் ஏற்கனவே இருந்த நிலையில் இருந்து மோசமாக இருக்கிறான். ஒரேயொருவன் மட்டுமே அந்த பணத்தை மிகச்சரியாக பயன்படுத்தி அனைவரும் பாராட்டும் அளவிற்கு உயர்ந்து இருக்கிறான்.
அதற்கு காரணம் நான் கொடுத்த பணத்தை அவன் முதலீடாக பார்த்தான். இந்த பணத்தை விடவும் நமக்கு கொடுக்கப்பட்டிருக்கும் நேரம் மதிப்பு வாய்ந்தது. நாம் நினைத்தால் நம் நேரத்தை வீணாக்கவும் முடியும் அல்லது அதையே முதலீடாக்கி ஒரு நல்ல எதிர்க்காலத்தை உருவாக்கிக் கொள்ளவும் முடியும்’ என்று கூறினார் அந்த அப்பா.
இந்தக் கதையில் சொன்னதுபோல, தன்னுடைய நேரத்தை சிறந்த முறையில் பயன்படுத்துகிறவனே வெற்றி பெறுகிறான். இதைப் புரிந்துக் கொண்டால், வாழ்க்கை மகிழ்ச்சியாக இருக்கும். முயற்சித்துப் பாருங்களேன்.