ARTICLE AD BOX
அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப்பை சந்திக்கவுள்ளதாக இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு கூறினார்.
அமெரிக்க அதிபராக இரண்டாவது முறையாக டொனால்ட் டிரம்ப் பதவியேற்றதிலிருந்து, இதுவரையில் அயல்நாட்டுத் தலைவர்கள் யாருடனும் டிரம்ப் சந்திப்பு மேற்கொள்ளவில்லை. இந்த நிலையில், அதிபர் டொனால்ட் டிரம்ப்பின் முதல் அயல்நாட்டு சந்திப்பாளராகவுள்ளதாக இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு கூறினார். அதுமட்டுமின்றி, முக்கியமான முடிவுகள் குறித்து விவாதிப்பதற்காக சந்திப்பதாகவும் கூறினார்.
இதுகுறித்து, நெதன்யாகு கூறியதாவது, ``அதிபராகப் பதவியேற்ற பிறகு ஓர் அயல்நாட்டு தலைவருடனான டிரம்ப்பின் முதல் சந்திப்பு என்னுடன்தான். இது இஸ்ரேல் - அமெரிக்க கூட்டணியின் வலிமைக்கு ஒரு சான்று என்று நினைக்கிறேன். மேலும், இது எங்கள் தனிப்பட்ட நட்பின் வலிமைக்கும் சான்றாகும்.
போரில் நாங்கள் எடுத்த முடிவுகள் ஏற்கெனவே மத்திய கிழக்கின் முகத்தை மாற்றியுள்ளன. நமது முடிவுகளும் நமது வீரர்களின் தைரியமும் வரைபடத்தை மீண்டும் வரைந்துள்ளன. ஆனால் அதிபர் டிரம்ப்புடன் நெருக்கமாகப் பணியாற்றினால், அதை இன்னும் சிறப்பாக மாற்றியமைக்க முடியும் என்று நம்புகிறேன். பாதுகாப்பை வலுப்படுத்தவும், அமைதி வட்டத்தை விரிவுபடுத்தவும், பலத்தின் மூலம் குறிப்பிடத்தக்க அமைதி சகாப்தத்தை அடையவும் முடியும் என்று நம்புகிறேன்’’ என்று தெரிவித்தார்.
இஸ்ரேல் - ஹமாஸ் போர் நிறுத்தத்தைத் தொடர அழுத்தம் கொடுத்த அமெரிக்க அதிபர் டிரம்ப், கடந்த வாரம் இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவை சந்திக்க அழைப்பு விடுத்தார். இதனைத் தொடர்ந்து, அமெரிக்க அதிபர் டிரம்ப்பை, பிப்ரவரி 4 ஆம் தேதியில் இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு சந்திக்கவுள்ளதாக இஸ்ரேல் பிரதமர் அலுவலகம் தெரிவித்தது.
இதையும் படிக்க: அந்த 'மாசு'பட்டவர் யார் என்று இதுவரை தெரியவில்லை?: தமிழிசை கேள்வி