நடுவராக மாறிய இந்திய கிரிக்கெட் வீரர்! கிரிக்கெட் தான் எல்லாமே!

1 day ago
ARTICLE AD BOX

இந்தியாவில் பல வீரர்கள் கிரிக்கெட் விளையாடுகின்றனர். ஆனால் அனைவரும் இந்திய அணிக்குத் தேர்வாவதில்லை. கிடைக்கின்ற சிறு வாய்ப்பைக் கூட கெட்டியாக பிடித்துக் கொண்டவர்கள் தான் நீண்ட நாட்களுக்கு கிரிக்கெட்டில் தடம் பதிக்கின்றனர். கிரிக்கெட்டில் சாதித்தவர்கள் பல பேர் என்றால், வாய்ப்பு கிடைக்காமல் போராடுபவர்கள் இன்னும் அதிகம். இதில் சிலர் அடுத்தது என்ன என்று வாழ்க்கையை நகர்த்தி விடுவார்கள். ஒரு சிலரோ கிரிக்கெட் தொடர்பான விஷயங்களிலேயே கவனத்தைச் செலுத்துவார்கள். அப்படி ஒரு வீரரைப் பற்றிய பதிவு தான் இது.

கிரிக்கெட்டில் சரியான வாய்ப்பு கிடைக்கவில்லை என்றாலும், மனம் தளராத ஒரு வீரர் கிரிக்கெட் விளையாட்டிற்கே கள நடுவராக வந்துள்ளார். அவர் தான் உத்தரப்பிரதேசத்தைச் சேர்ந்த தன்மய் ஸ்ரீவஸ்தவா. விராட் கோலி தலைமையிலான இந்திய அணி 2008 ஆம் ஆண்டு ஐசிசி U-19 உலகக்கோப்பையைக் கைப்பற்றியது. இந்தத் தொடரில் 262 ரன்களைக் குவித்து அசத்தினார் தன்மய் ஸ்ரீவஸ்தவா. மேலும் இத்தொடரின் இறுதிப்போட்டியிலும் இந்திய அணிக்காக அதிக ரன்களைக் குவித்த வீரரும் இவரே.

2007 இல் நடைபெற்ற ரஞ்சிக் கோப்பையில் உத்தரபிரதேச அணிக்காக களமிறங்கிய தன்மய் ஸ்ரீவஸ்தவா, இறுதிப்போட்டியில் டெல்லிக்கு எதிராக சதமடித்து அசத்தினார். 2007 முதல் 2009 வரையிலான காலகட்டத்தில் முதல் தரப் போட்டிகளில் சிறப்பாக பேட்டிங் செய்து ரன்களைக் குவித்தார். ஒட்டுமொத்தமாக 90 முதல் தரப் போட்டிகளில் விளையாடிய ஸ்ரீவஸ்தவா, 10 சதங்கள் மற்றும் 27 அரைசதங்களுடன் 4,918 ரன்களைக் குவித்துள்ளார்.

2008 மற்றும் 2009 இல் நடைபெற்ற ஐபிஎல் தொடரில் பஞ்சாப் அணிக்காக விளையாடிய தன்மய் ஸ்ரீவஸ்தவா, 3 போட்டிகளில் வெறும் 8 ரன்களை மட்டுமே எடுத்தார். அதற்குப் பின் இவருக்கு களத்தில் விளையாடுவதற்கான வாய்ப்பு மட்டும் கிடைக்கவே இல்லை. இதனையடுத்து ஐதராபாத் டெக்கான் சார்ஜர்ஸ் மற்றும் கொச்சி டஸ்கர்ஸ் கேரளா அணிகள் இவரை ஏலத்தில் எடுத்தாலும், களத்தில் விளையாடும் வாய்ப்பை வழங்கவில்லை.

போதிய வாய்ப்புகள் கிடைக்காத நிலையில் கடந்த 2020 இல் அனைத்து விதமான கிரிக்கெட்டிலும் இருந்து ஓய்வு பெற்றார் ஸ்ரீவஸ்தவா. அதன் பின்னும் இவர் கிரிக்கெட்டை விடக்கூடாது என நினைத்துள்ளார். 'வீரராக களத்திற்கு செல்ல முடியாவிட்டால் என்ன, நடுவராக செல்வேன்' என்று தனது பாதையை மாற்றி விட்டார். அதன்பிறகு நடுவருக்கான பயிற்சிகளைக் கற்றுக் கொண்டு, அதில் தேர்ச்சியும் பெற்றார்.

நடப்பாண்டு ஐபிஎல் தொடரில் கள நடுவராக களமிறங்குகிறார் தன்மய் ஸ்ரீவஸ்தவா. கிரிக்கெட்டானது ஒரு வீரராக இவருக்கு சரியான வாய்ப்புகளை வழங்கவில்லை. ஆனால் நடுவராகும் வாய்ப்பை வழங்கி விட்டது. இந்த வாய்ப்பைப் பயன்படுத்தி தனது பணியை சிறப்பாக ஆற்ற களத்திற்கு புறப்பட்டு விட்டார் ஸ்ரீவஸ்தவா.

கிரிக்கெட் வீரர் கூட ஒரு குறிப்பிட்ட வயது வரை தான் களத்தில் விளையாட முடியும். ஆனால் நடுவருக்கு அப்படி அல்ல. ஆகையால் பல ஆண்டுகள் ஸ்ரீவஸ்தவா களத்தில் நடுவராக பணியாற்றுவார் என்பதில் ஐயமில்லை. கிரிக்கெட் வீரராக இருந்து நடுவராக மாறிய ஒரே இந்திய வீரர் தன்மய் ஸ்ரீவஸ்தவா என்பது குறிப்பிடத்தக்கது.

Read Entire Article