ARTICLE AD BOX
நடிகை விஜயலட்சுமி விவகாரத்தில், சென்னை உயர்நீதிமன்ற உத்தரவுக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் சீமான் மேல்முறையீடு செய்துள்ளார்.
நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், தன்னை திருமணம் செய்து கொள்வதாகக் கூறி உடலுறவு வைத்துக்கொண்டு பின்னர் ஏமாற்றியதாக வளசரவாக்கம் காவல் நிலையத்தில் நடிகை விஜயலட்சுமி புகார் செய்தார். அதன்பேரில் சீமான் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். இந்த வழக்கை ரத்து செய்யக்கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார்.
இந்த மனுவை கடந்த 17ஆம் தேதி விசாரித்த நீதிபதி, விஜயலட்சுமி தொடர்ந்த வழக்கை ரத்து செய்ய முடியாது என்றும், இந்த வழக்கை 12 வாரத்துக்குள் போலீசார் விசாரித்து முடிக்க வேண்டும் என்றும் உத்தரவிட்டனர்.
இதன் பேரில் வழக்கை தீவிரப்படுத்தியுள்ள வளசரவாக்கம் போலீசார் பெங்களூரில் உள்ள விஜயலட்சுமியிடம் விசாரணை நடத்தினர்.
மேலும், சீமானை விசாரணைக்கு ஆஜராகுமாறு போலீசார் சம்மன் அனுப்பியிருந்த நிலையில், அவர் ஆஜராகவில்லை. வழக்கு விசாரணைக்கு வேறு ஒருநாளில் ஆஜராவதாக வழக்கறிஞர்கள் மூலம் கடிதம் கொடுத்தனுப்பியுள்ளார் சீமான்.
இதற்கிடையே, சென்னை உயர்நீதிமன்ற உத்தரவுக்கு எதிராக சீமான் சார்பில் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்யப்பட்டு உள்ளது.
அந்த மனுவில், 'இந்த விவகாரத்தில் முன்வைக்கப்பட்ட வாதங்களையும், அனைத்து அம்சங்களையும் முறையாக கருத்தில் கொள்ளவில்லை. தன் மீதான வழக்கை ரத்து செய்ய மறுத்த உயர்நீதிமன்றத்தின் உத்தரவை ரத்துசெய்ய வேண்டும். இந்த மேல்முறையீட்டு மனுவை விசாரித்து தீர்ப்பு கூறும் வரையில், 12 வாரங்களுக்குள் புலன் விசாரணையை போலீசார் நடத்தி, குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ய உயர்நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவுக்கு இடைக்காலத் தடை விதிக்க வேண்டும்' என கூறப்பட்டு உள்ளது. இந்த மனு விரைவில் விசாரணைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.