ARTICLE AD BOX
ஓசூர்: நடிகை பாலியல் பலாத்கார புகாரில், போலீசாரின் சம்மனுக்கு நாளை (இன்று) ஆஜராக முடியாது என்று சீமான் தெரிவித்து உள்ளார். கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூரில் நாம் தமிழர் கட்சியின் நிர்வாகிகள் கலந்தாய்வு கூட்டம் நேற்று நடந்தது. இதில் ஒருங்கிணைப்பாளர் சீமான் கலந்துகொண்டார்.
பின்னர் அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:
தொகுதி மறு சீரமைப்பு, மும்மொழிகொள்கை, தமிழகத்திற்கு நிதி தராமல் வஞ்சிப்பது ஆகியவற்றை கண்டித்து நாம்தமிழர் கட்சி சார்பில் தன்னிச்சையாக போராட்டம் செய்வோம். ஒரே தேர்தல், ஒரே ரேஷன் கார்டு, ஒரே வரி, ஒரே கல்விக்கொள்கை, தொகுதி சீரமைப்பு என இதனால் நாடு வளர்ந்துவிடும் என்பது எல்லாம் வேடிக்கையாக உள்ளது.
தேர்தலில் எலக்ட்ரானிக் முறையை ஒழித்துவிட்டு சீட்டு முறையில் வாக்களிக்க வேண்டும். ஒரு நபர் இரு தொகுதிகளில் போட்டியிடுவதை தவிர்க்க வேண்டும். ஒரு பதவியில் உள்ளவர், மற்றொரு பதவிக்கு போட்டியிடுவதை தவிர்க்க வேண்டும். இடைத் தேர்தல் முறையை நீக்க வேண்டும். இரண்டாவதாக வந்தவரை வெற்றி பெற்றதாக அறிவித்து, மீதமுள்ள காலங்களில் மக்களுக்கு சேவை செய்ய வேண்டும். இது போன்ற சீர்திருத்தங்களை செய்ய வேண்டும். மத்தியில் ஆளும் எந்த தேசிய கட்சியாக இருந்தாலும், தமிழகத்தில் உள்ள வளங்களை சுரண்டிவிட்டு நிதி தரமறுகின்றனர். உரிமை என்று வரும் போது, முற்றிலும் மறுத்து விடுகின்றனர்.
தமிழகத்திற்கு நிதி வழங்கவில்லை என புலம்புவதை விட, வரி செலுத்த மாட்டோம் என கூற வேண்டும். இதனைத் தான் தவெக தலைவர் விஜய் சிறுபிள்ளைத்தனமாக உள்ளது என கூறி உள்ளார். நடிகை விஜயலட்சுமி விவகாரத்தில். என்னை கைது செய்ய அவசியம் என்ன? நான் வருவதாக கூறி விட்டேன். நான் வருவேன் என்ற பிறகும், ஏன் இப்படி செய்ய வேண்டும். என்னை அசிங்கப்படுத்த நினைக்கிறார்கள்.
சம்பந்தப்பட்ட பெண்ணையும், என்னையும் ஒரே இடத்தில் அமர வைத்து விசாரிக்கட்டும். நாளை தர்மபுரியில் கலந்தாய்வு கூட்டம் உள்ளது. அதில் கலந்துகொள்கிறேன். சென்னையில் நாளை (இன்று) 11 மணிக்கு விசாரணைக்கு ஆஜராக மாட்டேன். என்னை என்ன செய்ய நினைக்கிறீர்கள். இதற்கு அஞ்சி பயப்பட மாட்டேன். நான் வருவேன். வந்தே ஆக வேண்டுமென்றால் வர முடியாது. இவ்வாறு சீமான் கூறினார்.
The post நடிகை பாலியல் பலாத்கார புகார்; விசாரணைக்கு என்னால் இன்று ஆஜராக முடியாது: சீமான் பேட்டி appeared first on Dinakaran.