ARTICLE AD BOX
நடிகராக ஆகும் ஷங்கர் மகன்.. விஜய்யை இயக்கிய டைரக்டர் படத்தில் அறிமுகம்.. யாரு அது தெரியுமா?
சென்னை: பிரமாண்ட இயக்குநர் ஷங்கருக்கு கடந்த சில ஆண்டுகளாக சினிமா வாழ்க்கையில் சொதப்பலான விஷயங்கள்தான் நடைபெற்றுக் கொண்டுள்ளது. காரணம் கடந்த ஆண்டு வெளியான இந்தியன் 2 படுதோல்வி படமாக மாறியது. இந்த ஆண்டு வெளியான கேம் சேஞ்சர் அதைவிட அடி வாங்கியது. இது மட்டும் இல்லாமல், எந்திரன் படத்தின் கதை திருட்டு குறித்த வழக்கில் சொத்துகள் முடக்கம் என அடுத்தடுத்து அடி வாங்கிக் கொண்டு உள்ளார்.
இப்படி இருக்கும்போது, இவரது சொந்த வாழ்க்கையில் சில நிம்மதியான விஷயங்கள் நடைபெற்றுக் கொண்டுள்ளது. அதில் ஒரு விஷயம் அவரது இரண்டு மகள்களில் இளைய மகளான அதிதி ஷங்கர் நடிகையாக அறிமுகமாகி வெற்றிப் படங்களைக் கொடுத்து வருகிறார். விருமன் படத்தின் மூலம் அறிமுகமான இவர், அதன் பின்னர் மாவீரன், நேசிப்பாயா என மக்கள் மத்தியில் பாராட்டுகள் குவிந்த படங்களில் நடித்து வருகிறார். நேசிப்பாயா படத்திற்கு கிடைத்த வரவேற்பால் தெலுங்கில் புதிய படத்தில் கமிட் ஆகி நடித்து வருகிறார். அதிதி அடிப்படையில் மருத்துவர்.
இவரின் மூத்த மகள் சினிமா பக்கமே எட்டிப் பார்க்காமல் உள்ளார். இவருக்கு கடந்த ஆண்டு மிகவும் பிரமாண்டமாக திருமணம் நடத்தி வைத்தார் ஷங்கர். ஷங்கரின் மகன், அர்ஜித். இவருக்கு தனது தந்தையைப் போல இயக்குநர் ஆக வேண்டும் என்பதுதான் ஆசை. இது குறித்து ஷங்கரிடம் கூறிய பின்னர், ஷங்கர் உடனே தனது படத்தில் உதவி இயக்குநராக சேர்த்துக் கொள்ளவில்லை. காரணம் தனது மகன் என படப்பிடிப்புத் தளத்தில், அவருக்கு சில சௌகரியங்கள் கிடைத்துவிடும் என தன்னுடைய உதவி இயக்குநராக சேர்த்துக் கொள்ளவில்லை.

அர்ஜித்: இதனால், அவர் ஏ.ஆர். முருகதாஸ் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடித்து வரும் மதராஸி படத்தில் உதவி இயக்குநராக பணியாற்றி வருகிறார். இது மட்டும் இல்லாமல், ஏ.ஆர். முருகதாஸ் சிகிந்தர் படத்தின் படப்பிடிப்புகளுக்கு சென்ற காலத்தில், கேம் சேஞ்சர் படத்தின் படப்பிடிப்புகளில் கலந்து கொண்டு உதவி இயக்குநராக சில காட்சிகள் படமாக்கும்போது பணியாற்றியுள்ளார்.
இயக்குநர்: அர்ஜித், தற்போது சினிமாவில் நடிக்க கமிட் ஆகியுள்ளார் என கூறப்படுகிறது. மேலும் படத்தின் கதையைக் கேட்டுள்ளார். அது அர்ஜித்திற்கும் ஷங்கருக்கும் மிகவும் பிடித்துவிட்டதால், அர்ஜித் நடிக்க சம்மதம் தெரிவித்துள்ளார். இந்த படத்தை விஜய்யின் போக்கிரி மற்றும் வில்லு படத்தை இயக்கிய பிரபு தேவா இயக்க உள்ளதாகவும் திரைத்துறையில் தகவல்கள் உலா வருகிறது.
அதிதி ஷங்கர்: அர்ஜித் ஏற்கனவே, இந்தியன் 2 படத்தின் இசை வெளியீட்டு விழாவில், நடனமாடி பலரது கவனத்தை ஈர்த்திருந்தார். இந்த விஷயத்தைக் கேள்விப்பட்ட இணையவாசிகள், ஏற்கனவே அதிதி ஷங்கர் நடிக்கிறேன் என படங்களில் ரசிகர்களை அவதிப்படுத்தினார், எவ்வளவோ ட்ரோல் செய்தும் நடிப்பில் தன்னை மெருகேற்றிக் கொள்ளாமல் உள்ளார். இப்படியான நிலையில் ஷங்கரின் மகன் அர்ஜித்தும் நடிக்க வருகிறார், இவர் வந்து என்ன பாடு படுத்தப் போகிறாரோ என்ற கேள்வியை கேட்டு வருகிறார்கள். மேலும் பலர் அர்ஜித் இயக்குநர் அவதாரம் எடுக்க வேண்டும் எனவும் பேசி வருகிறார்கள்.