ARTICLE AD BOX
நகைச்சுவை, கிண்டல், கேலி எல்லாம் நிறைந்ததுதான் வாழ்க்கை. நகைச்சுவை இல்லாவிட்டால் வாழ்க்கை இனிக்காது. மனதை சாந்தமாக்குவது, உற்சாகத்தை ஏற்படுத்துவது, தினசரி செய்யும் வேலைகளை சுறுசுறுப்பாக செய்ய வைப்பது அனைத்திற்கும் அச்சாணியாக இருப்பது நகைச்சுவையே.
இன்று 96 வயது நிரம்பிய எனது சித்தப்பா பெண் பார்க்கச் சென்றிருக்கிறார். அப்பொழுதெல்லாம் ஹேர் டை கிடையாது. ஆண்களோ பெண்களோ அதிகமாக அழகு படுத்திக்கொள்ள மாட்டார்கள். அதற்கான வசதிகளும் செய்துகொள்ள வேண்டும் என்ற ஆசையும் அவர்களுக்கு அப்பொழுது இருந்ததில்லை. எல்லாவற்றுக்கும் மேலாக எப்படி அழகுபடுத்திக்கொள்வது என்பதும் தெரியாது.
ஆதலால் இளநரை தலை முழுக்க வெளுத்து இருக்க பெண் பார்க்க சென்றவரை பார்த்த பெண்ணின் அக்கா தங்கை அனைவரும் ஒன்றாக சேர்ந்து என்ன குருமூர்த்தி தலை நிறைய மல்லிகை பூ வைத்துக்கொண்டு பெண் பார்க்க வந்திருக்கிறார். சிலர் கனகாம்பரம் வைத்துக்கொண்டு வருவதுண்டு. இவர் மல்லிகைப் பூவை அல்லவா வைத்துக் கொண்டு வந்திருக்கிறார் என்று கேட்க எல்லோரும் சிரித்துவிட்டார்கள்.
வெளுத்த முடியை மல்லிகைப் பூ என்றும் இளநரை அங்கு மிங்கும் எட்டி பார்க்கும் பொழுது மருதாணியை அப்பொழுதே போட்டு லேசாக செம்பட்டையாக ஆக்கிக் கொள்வோரை கனகாம்பரம் என்று நகைச்சுவையாக கூறுவது உண்டு. இப்படிதான் அப்பொழுது சிரித்து பேசி குதூகலிப்பார்கள்.
லிங்கன் மத போதகர் ஒருவரோடு கூட்டத்திற்கு சென்றிருந்தார். அப்பொழுது மதபோதகர் பேசும்போது என் அருமை சகோதரர்களே சொர்க்கத்துக்கு செல்ல விரும்புபவர்கள் எல்லோரும் கை தூக்கங்கள் என்றார்.
அப்பொழுது கூட்டத்தில் இருந்தவர்கள் லிங்கனைத் தவிர அனைவரும் கை உயர்த்தினார்கள். உடனே லிங்கனை பார்த்த அந்த போதகர் என்ன லிங்கன் நீங்கள் நகரத்திற்கு போக இருக்கிறீர்களா என்று கேட்டார். அதற்கு லிங்கனோ இல்லை எனக்கு நிறைய பணிகள் காத்திருக்கிறது. அதனை முடிக்க நான் பாராளுமன்றத்திற்கு போகவேண்டும் என்றாராம் சிரித்துக் கொண்டே.
அமெரிக்க குடியரசு தலைவர் தேர்தலில் கென்னடி போட்டியிட்ட பொழுது பெண்கள் நிறைந்த கூட்டம் ஒன்றில் நிக்சன் பேசும்போது கென்னடி சொல்வதை கேட்காதீர்கள். அவர் பேசுவதெல்லாம் பொய் என்றார். பின்னர் கென்னடி பேசும்போது இந்த கூட்டத்தில் உள்ள பெண்களைப் பார்த்து அழகானவர்கள் என்று கூறுகிறேன். இதைத்தான் நிக்சன் பொய்யாக சொல்கிறார் என்று நகைச்சுவையாக முடிக்க அனைவரும் வாய்விட்டு சிரித்து விட்டனர். அநத குடியரசுத் தலைவர் தேர்தலீல் கென்னடியே வெற்றி பெற்றார் என்பது குறிப்பிடத்தக்கது.
ஒரு சமயம் ஸ்பெயினில் இருந்து ஒரு இளைஞர் பக்கத்து நாட்டுக்கு தூதுவராக அனுப்பப்பட்டார். அந்த நாட்டு அரசர் இளைஞரை பார்த்து கிண்டலாக சொன்னார். ஸ்பெயின் நாட்டில் மனிதர்களே இல்லை போலிருக்கிறது. அதனால்தான் ஸ்பானிய மன்னர் தாடி முளைக்காத ஒரு சிறுவனை தூதுவராக அனுப்பி இருக்கிறார் என்று நினைக்கிறேன் என்றார். உடனே தூதுவராக அந்த இளைஞர் சொன்னார். அரசே அறிவு என்பது தாடியில் இருப்பதாக தாங்கள் கருதுவது எங்கள் மன்னருக்கு தெரியாது. தெரிந்திருந்தால் எனக்கு பதிலாக ஒரு வெள்ளாட்டையே அனுப்பி இருப்பார் என்று கேலியாகச் சொன்னான்.
நகைச்சுவை உணர்வோடு பேசுபவருக்கு நன்றி சொல்லுங்கள்! ஏனென்றால் உங்களை நீங்களே செதுக்கி கொள்வதற்கு அவர்கள்தான் உளி கொடுக்கின்றனர்.
இப்படி மேற்கூறிய புகழ்பெற்ற தலைவர்கள் சாதூர்யமாக நகைச்சுவை உணர்வோடு பேசியதால்தான் அவை இன்றும் பேச படுபவையாக இருக்கின்றன. நீங்களும் இதுபோன்று நகைச்சுவையாக பேசி நற்காரியங்களை சாதித்துக் கொள்ளுங்கள். மற்றவர்கள் சாதிக்கவும் வழி ஏற்படுத்திக்கொடுங்கள்.