ARTICLE AD BOX
தில்லி தேர்தல் பிரசாரத்தில் ஆம் ஆத்மி வேட்பாளரை பாஜகவினர் தாக்கியதாக அரவிந்த் கேஜரிவால் குற்றம் சாட்டியுள்ளார்.
தில்லியில் வருகிற புதன்கிழமையில் (பிப். 5) சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், மாநிலம் முழுவதும் அரசியல் கட்சிகள் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றன. இந்த நிலையில், பிரசாரத்தின்போது ஆம் ஆத்மி எம்.எல்.ஏ.வான மகேந்திர கோயல் மீது பாஜகவினர் தாக்குதல் நடத்தியதாக ஆம் ஆத்மி ஒருங்கிணைப்பாளர் அரவிந்த் கேஜரிவால் குற்றம் சாட்டியுள்ளார்.
இதுகுறித்து, அவர் கூறியதாவது ``தில்லி தேர்தலில் பாஜக மோசமான தோல்வியடைந்து வருகிறது. தோல்வி விரக்தியில் இப்போது வன்முறையிலும் ஈடுபட்டுள்ளனர். ஆம் ஆத்மி எம்.எல்.ஏ. மகேந்திர கோயல் மீதான பாஜகவினரின் தாக்குதலைக் கடுமையாக கண்டிக்கிறோம்’’ என்று கண்டனம் தெரிவித்துள்ளார்.
வடமேற்கு தில்லியின் முக்கியத் தொகுதியான ரித்தாலாவில் ஆம் ஆத்மி எம்.எல்.ஏ. மகேந்திர கோயல் வேட்பாளராக போட்டியிடுகிறார். அதே தொகுதியில் பாஜகவின் குல்வந்த் ராணாவும், காங்கிரஸின் சுஷாந்த் மிஸ்ராவும் போட்டியிடுகின்றனர். இந்த நிலையில், சனிக்கிழமை காலையில் பிரசாரத்தின்போது மகேந்திர கோயலை பாஜகவினர் தாக்கியதாகக் கூறப்படும் நிலையில், தாக்குதலால் மயக்கமடைந்த மகேந்திர கோயல் அம்பேத்கர் மருத்துவமனையிலும் அனுமதிக்கப்பட்டார்.
தில்லியில் 70 தொகுதிகளுக்கான சட்டப்பேரவை தேர்தல் வருகிற பிப். 5 அன்று ஒரே கட்டமாக நடைபெற உள்ளது. தேர்தல் முடிவுகள் பிப். 8 அன்று வெளியிடப்படவுள்ளன. இந்தத் தேர்தலில் முன்னணி கட்சிகளாக ஆம் ஆத்மி, பாஜக, காங்கிரஸ் கட்சிகள் இடையில் மும்முனைப் போட்டி நிலவுகிறது.
இதையும் படிக்க: மத்திய பட்ஜெட் குறித்து ராகுல் காந்தி