ARTICLE AD BOX
மும்பை: இந்திய கிரிக்கெட் அணியின் நட்சத்திர வீரர் அஸ்வின் கடந்த ஆஸ்திரேலியா தொடரில் சர்வதேச கிரிக்கெட் போட்டியில் இருந்து ஓய்வு பெறுவதாக தெரிவித்தார். இந்த நிலையில் நடந்து முடிந்த மெகா ஏலத்தில் அஸ்வின் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக தேர்வு செய்யப்பட்டார்.
இதன் மூலம் தனது கிரிக்கெட் வாழ்க்கையை ஆரம்பித்த இடத்திலேயே அஸ்வின் முடித்திருக்கிறார்.38 வயதான அஸ்வின் கடந்த 2024 ஆம் ஆண்டு இங்கிலாந்துக்கு எதிராக தர்மசாலாவில் தனது 100-வது டெஸ்ட் போட்டியில் விளையாடினார்.

அது தொடர்பான ஒரு உண்மையை தற்போது அஸ்வின் பேசியிருக்கிறார். இதுகுறித்து பேசிய அஸ்வின், 100வது டெஸ்ட் போட்டியில் விளையாடுவதற்காக பிசிசிஐ எனக்கு நினைவு பரிசை வழங்கியது. அந்த பரிசை தோனியிடமிருந்து பெற்றுக்கொள்ள நான் விரும்பினேன். இதற்காக தோனியை நான் தர்மசாலாவுக்கு அழைத்தேன்.
அதுவே என்னுடைய கடைசி டெஸ்ட் போட்டியாக இருக்க வேண்டும் என்று நான் விரும்பினேன். ஆனால் தோனி கடைசி நேரத்தில் வர முடியவில்லை என்று கூறிவிட்டார். ஆனால் என்னை மீண்டும் சிஎஸ்கேவுக்கு எடுத்து இப்படி ஒரு பரிசை எனக்கு அவர் தருவார் என்று நான் எதிர்பார்க்கவில்லை. அதைவிட எனக்கு இது சிறந்த பரிசாக தெரிகிறது. எனவே எனக்காக இதை செய்த தோனிக்கு நான் நன்றி தெரிவித்துக் கொள்கின்றேன்.
சிஎஸ்கே வில் இருப்பதை நான் பெருமையாக கூறுகிறேன். நான் சிஎஸ்கேவுக்கு பல சாதனைகளை படைத்த ஒரு வீரனாக வரவில்லை. என் வாழ்க்கையை தொடங்கிய இடத்திற்கு மீண்டும் வந்து என்னுடைய வாழ்க்கை சக்கரத்தை பூர்த்தி செய்து இருக்கின்றேன். என்னுடைய கடைசி கிரிக்கெட் பக்கங்களை மகிழ்ச்சியாக எதிர்கொள்ள வேண்டும் என்று நினைக்கின்றேன்.
சிஎஸ்கேவில் இருப்பது தான் ஒரு சிறந்த இடமாக இருக்கும் என்று அஸ்வின் கூறியுள்ளார். தமிழக கிரிக்கெட் வீரர் அஸ்வினை ஒன்பது கோடியே 75 லட்சம் ரூபாய் கொடுத்து கடைசி வரை போராடி சிஎஸ்கே அணி ஏலத்தில் எடுத்தது. ஏற்கனவே சி எஸ் கே அணையில் ஜடேஜா,நூர் அகமத், ஸ்ரேயாஸ் கோபால் போன்ற சுழற் பந்துவீச்சாளர்கள் உள்ள நிலையில் அஸ்வினும் தற்போது இணைந்திருப்பது சிஎஸ்கே வின் பலத்தை கூட்டி இருக்கிறது.