ARTICLE AD BOX

Image Courtesy: @KKRiders
கொல்கத்தா,
ஐ.பி.எல். தொடரின் 18வது சீசன் கொல்கத்தாவில் இன்று தொடங்குகிறது. இன்று இரவு 7.30 மணிக்கும் நடைபெறும் தொடக்க லீக் ஆட்டத்தில் நடப்பு சாம்பியன் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் - ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிகள் மோதுகின்றன. இந்த தொடரில் வெஸ்ட் இண்டீஸ் அணியின் முன்னாள் வீரரும், சி.எஸ்.கே அணியின் முன்னாள் பந்து வீச்சு பயிற்சியாளருமான பிராவோ கொல்கத்தா அணியின் ஆலோசகராக நியமிக்கப்பட்டுள்ளார்.
இந்நிலையில், பிராவோ சமீபத்தில் அளித்த பேட்டியில் அவரிடம், நடப்பு ஐ.பி.எல். தொடரின் இறுதிப் போட்டியில் கொல்கத்தா - சென்னை அணிகள் மோதினால் எந்த அணியை ஆதரிப்பீர்கள் என்று கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு பதில் அளித்த பிராவோ கூறியதாவது,
கே.கே.ஆர் - சி.எஸ்.கே அணிகள் ஐ.பி.எல் இறுதிப் போட்டியில் விளையாடினால், கொல்கத்தா வெற்றி பெற வேண்டும் என்று தான் நான் விரும்புவேன். நான் அந்த அணியில்தான் ஆலோசகராக இருக்கிறேன். இதனை எம்.எஸ்.தோனி புரிந்துகொள்வார்.
எனக்கு கொல்கத்தா அணியின் ஆலோசகராக வாய்ப்பு கிடைத்தபோது, நான் தோனியை தான் அழைத்து பேசினேன். அவர் சம்மதம் சொன்னபிறகு தான் அந்த அழைப்பை நான் ஏற்றுக்கொண்டேன். அதுதான் நான் தோனி மேல் வைத்திருக்கும் மரியாதை. இவ்வாறு அவர் கூறினார்.