தொடரும் அவலம்: எல்லை தாண்டி மீன்பிடித்ததாக 32 தமிழக மீனவர்கள் கைது!

2 days ago
ARTICLE AD BOX

எல்லை தாண்டி மீன்பிடித்ததாகக் கூறி 32 தமிழக மீனவர்களை இலங்கை கடற்படை கைது செய்துள்ளது.

ராமநாதபுரம் மாவட்டம் ராமேஸ்வரத்தைச் சேர்ந்த மீனவர்கள், உரிய அனுமதிச் சீட்டு பெற்ற 550 படகுகளுடன் கச்சத்தீவு அருகே நேற்று மீன்பிடிக்கச் சென்றனர். இதனைத் தொடர்ந்து, கடலில் மீன்பிடித்துவிட்டு, இன்று அதிகாலை 2 மணியளவில் தனுஷ்கோடிக்கும், வடக்கு மன்னார் கடற்பரப்புக்கும் இடையே கரைக்குத் திரும்பிக் கொண்டிருந்தனர்.

அப்போது, தமிழக மீனவர்கள் எல்லை தாண்டி மீன்பிடித்ததாகக் கூறி, அந்த வழியாக ரோந்து வந்த இலங்கை கடற்படையினர் தமிழக மீனவர்கள் 32 பேரையும் கைது செய்தனர். அவர்களின் 5 படகுகளையும் பறிமுதல் செய்தனர்.

தலைமன்னார் கடற்படை முகாமுக்கு அழைத்து செல்லப்பட்டிருக்கும் தமிழக மீனவர்கள், இலங்கை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்படவிருப்பதாகவும் கூறப்படுகிறது.

எல்லை தாண்டி மீன்பிடிப்பதாகக் கூறி, தமிழகம் மற்றும் புதுச்சேரியைச் சேர்ந்த மீனவர்களை இலங்கை கடற்படையினர் கைது செய்வது தொடர்கதையாகி வருகிறது. அதுமட்டுமின்றி தமிழக மீனவர்களின் விசைப் படகுகளைப் பறிமுதல் செய்து அரசுடைமையாக்குவது, கைது செய்யப்படும் மீனவர்களுக்கு அபராதம் விதிப்பது தவிர மீனவர்கள் மீதான தாக்குதல், துப்பாக்கிச் சூடு, இலங்கை கடற்கொள்ளையர்களின் அட்டூழியங்களும் தமிழக மீனவர்களுக்கு பெருந்துயராக இருந்து வருகிறது.

கடந்த 10 ஆண்டுகளில் 3,288 தமிழக மீனவர்கள் இலங்கை அரசால் கைது செய்யப்பட்டுள்ளனர். 10 ஆண்டுகளில் தமிழக மீனவர்களிடம் இருந்து பறிமுதல் செய்த 365 மீன்பிடி படகுகளை இலங்கை அரசு நாட்டுடைமையாக்கிவிட்டதாக தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின்கீழ் அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.

இலங்கை கடற்படையினரால் சிறைபிடிக்கப்பட்ட தமிழக மீனவர்களையும், அவர்களது மீன்பிடிப் படகுகளையும் விடுவித்திடவும் வலியுறுத்தி பிரதமர் நரேந்திர மோடி மற்றும் வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கருக்கு தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் தொடர்ந்து கடிதம் எழுதிக் கொண்டுதான் வருகிறார். இருப்பினும், எந்தவித மாற்றமும் ஏற்பட்டதாய் தெரியவில்லை என்று மீனவர்கள் ஆதங்கம் தெரிவிக்கின்றனர்.

Read Entire Article