ARTICLE AD BOX
சென்னை: தமிழக வெற்றிக் கழகம் தலைவர் நடிகர் விஜய் வெளியிட்ட அறிக்கை: நம் அரசியல் சாசனத்தின் 84வது சட்டத் திருத்தத்தின்படி நாடாளுமன்றத் தொகுதிகளின் மறுசீரமைப்பு 2026ம் ஆண்டு வரை நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. எனவே, வரும் ஆண்டிற்கு பிறகு இந்த மறுசீரமைப்புப் பணி, ஒன்றிய அரசால் தொடங்கப்பட வாய்ப்புள்ளது. எவ்வகையில் இந்த மறுசீரமைப்பு நடைபெறும் என்பது பற்றி எந்த ஒரு தெளிவான விளக்கமோ வாக்குறுதியோ மாநிலங்களுக்கு இதுவரை வழங்கப்படவில்லை. தற்போதைய நாடாளுமன்றத் தொகுதிகளின் எண்ணிக்கையை மாற்றாமலோ அல்லது இன்னொரு அரசியல் சட்டத் திருத்தத்தின் மூலம் நாடாளுமன்றத் தொகுதிகளின் எண்ணிக்கையை உயர்த்தியோ இந்த மறுசீரமைப்பு நடைபெறலாம்.
எந்த முறையைப் பின்பற்றினாலும் அதில் மாநிலங்களின் மக்கள் தொகை என்பது ஒற்றை அளவுகோலாக இல்லாவிடினும் முக்கிய அளவுகோலாக இருக்கும் என்பது பட்டவர்த்தனமான உண்மை. புதிதாக மக்கள் தொகைக் கணக்கெடுப்பு நடத்தப்பட்டு, அதன் அடிப்படையில் மட்டுமோ அல்லது புதிய மக்கள் தொகையை ஒரு முக்கிய அளவுகோலாகக் கொண்டோ நிகழ்த்தப்படும் நாடாளுமன்றத் தொகுதி மறுசீரமைப்பில் தென் மாநிலங்களுக்கான பிரதிநிதித்துவம் வெகுவாகக் குறையும் ஆபத்து உள்ளது. கடந்த 50 ஆண்டுகளாகக் கல்வி, சுகாதாரம் மற்றும் குடும்பக் கட்டுப்பாட்டில் முதலீடு செய்து, தனது மக்கள்தொகை வளர்ச்சியைத் திறம்படக் கட்டுப்படுத்தியுள்ள தமிழ்நாடு மற்றும் இதர தென்மாநிலங்களுக்கு இது ஒரு பெரும் தண்டனையே அன்றி வேறு இல்லை.
ஏற்கெனவே ஒரு மாநிலத்தில் இருந்து மட்டும் 80 நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஒதுக்கப்பட்டுள்ளதால், அது மற்ற மாநிலங்களை விடக் கூடுதல் அரசியல் முக்கியத்துவம் வாய்ந்ததாக விளங்குகிறது. இந்த வேறுபாடு மேலும் அதிகரிக்கக் கூடாது. தென் மாநிலங்களுக்கு ஒப்பீட்டளவில் தொகுதிகள் மேலும் குறைக்கப்பட்டாலோ அல்லது உத்தரப் பிரதேசம், பீகார் போன்ற வட மாநிலங்களுக்கு ஒப்பீட்டளவில் கூடுதலாகத் தொகுதிகள் ஒதுக்கப்பட்டாலோ அது எவ்வகையிலும் ஏற்றுக்கொள்ள முடியாதது ஆகும். இவ்வாறு அறிக்கையில் கூறியுள்ளார்.
The post தொகுதிகள் மறுசீரமைப்பு தமிழ்நாட்டுக்கு தண்டனை: ஒன்றிய அரசு மீது நடிகர் விஜய் தாக்கு appeared first on Dinakaran.