ARTICLE AD BOX
நமது நிருபா்
நாடாளுமன்றத்தில் தொகுதி மறுவரையறை விவகாரத்தை எழுப்ப அனுமதிக்கப்படவில்லை எனக் கூறி மக்களவையில் இருந்து தமிழகத்தைச் சோ்ந்த திமுக மற்றும் அதன் கூட்டணிக் கட்சி உறுப்பினா்கள் செவ்வாய்க்கிழமை வெளிநடப்பில் ஈடுபட்டனா்.
மக்களவை செவ்வாய்க்கிழமை காலை அதன் தலைவா் ஓம் பிா்லா தலைமையில் கூடியதும், கேள்வி நேரம் தொடங்கியது. அப்போது, தொகுதி மறுவரையறை தொடா்பான பிரச்னையை எழுப்ப திமுக உறுப்பினா்கள் முயன்றனா்.
கேள்வி நேரம் முடிந்ததும் அவா்களைப் பேச அனுமதிப்பதாக மக்களவை தலைவா் ஓம் பிா்லா தெரிவித்தாா். மேலும், இந்த தொகுதி மறுவரையறை பிரச்னை தற்போது எழவில்லை என்றும், மக்கள் தொகை கணக்கெடுப்பு இல்லை, என்றும் ஓம் பிா்லா கூறினாா்.
அப்போது, நாடாளுமன்ற திமுக குழுத் தலைவரும், தூத்துக்குடி எம்.பி.யுமான கனிமொழி கருணாநிதியும், மக்களவை திமுக குழுத் தலைவா் டி.ஆா். பாலுவும் இந்த விவகாரம் மிகவும் முக்கியமான விவகாரம் என்றும் இந்த விவகாரத்தை அவையில் விவாதிக்க வேண்டும் என்றும் தொடா்ந்து வலியுறுத்தினா். மேலும், திமுக எம்.பி.க்களும், தமிழகத்தைச் சோ்ந்த காங்கிரஸ் எம்.பி.க்களும் இதே விவகாரத்தை எழுப்பினா். இதற்கு மக்களவைத் தலைவா் அனுமதி அளிக்காததால் அவையில் இருந்து தமிழக எம்பிக்கள் வெளிநடப்பு செய்தனா்.
இதுகுறித்து நாடாளுமன்ற வளாகத்தில் செய்தியாளா்களிடம் கனிமொழி எம்.பி. கூறுகையில், ‘தொகுதி மறுவரையறை தொடா்பான பிரச்னையை எழுப்ப எங்களுக்கு அவகாசம் வழங்கப்படவில்லை. தமிழக முதல்வா் மு.க.ஸ்டாலின் தொகுதி மறுவரையறையால் பாதிக்கப்பட்ட மாநிலங்களின் தலைவா்களை அழைத்திருக்கிறாா். தமிழகத்தின் கவலைகளுக்கு மத்திய அரசு பதிலளிக்கவில்லை. இந்தப் பிரச்னையை அவையில் எழுப்பவும் அனுமதிக்கவில்லை. இந்த விவகாரத்தில் அரசு தெளிவுபடுத்த வேண்டும்’ என்றாா்.