ARTICLE AD BOX

டெல்லி : நாடாளுமன்றத்தில் பட்ஜெட் கூட்டத்தொடர் இரண்டாம் கட்ட அமர்வு நடைபெற்று வருகிறது. இதில் திமுக சார்பில் அதன் நாடாளுமன்ற குழு தலைவர் கனிமொழி எம்.பி, மக்களவை ஒத்திவைப்பு நோட்டீஸ் வழங்கினார். தொகுதி மறுசீரமைப்பு குறித்து அவையில் விவாதம் நடத்த வேண்டும் என கோரிக்கை வைத்தார்.
ஆனால், திமுகவின் கோரிக்கையை மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா ஏற்க மறுத்துவிட்டார். இதனால் திமுக எம்பிக்கள் மக்களவையில் இருந்து வெளிநடப்பு செய்தனர். இதுகுறித்து திமுக எம்பி கனிமொழி செய்தியாளர்களிடம் கூறுகையில், ” நாங்கள் வெளிநடப்பு செய்ய நிர்பந்திக்கப்பட்டோம்.”எனக் கூறினார்.
மேலும், ” தொகுதி மறுசீரமைப்பு குறித்து விவாதம் நடத்த நங்கள் தினமும் ஒத்திவைப்பு தீர்மானம் கொண்டு வருகிறோம். ஆனால், அவர்கள் (மத்திய அரசு) அதனை ஏற்க மறுக்கிறார்கள். அதனை விவாதிக்க எங்களுக்கு போதிய நேரம் தருவதில்லை. தொகுதி மறுசீரமைப்பு குறித்து ஆலோசனை நடத்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பல்வேறு அரசியல் தலைவர்களுக்கும், மாநில முதலமைச்சர்களுக்கும் அழைப்பு விடுத்துள்ளார்.
தொகுதி மறுசீரமைப்பு என்பது மக்கள்தொகை அடிப்படையில் கொண்டுவரப்பட உள்ளது. அப்படியென்றால், மக்கள் தொகையை கட்டுப்படுத்திய மாநிலங்களுக்கு இதனால் பாதிப்பு ஏற்படும். இதுபற்றி பேசினால், தமிழ்நாடு தொகுதி மறுசீரமைப்பால் பாதிக்கப்படாது. தொகுதிகள் குறைக்கப்பட மாட்டாது என கூறுகிறார்கள். ஆனால், உண்மையான விளக்கம் என்ன என்பதை கூற மறுக்கிறார்கள்.” என திமுக எம்.பி கனிமொழி பேசினார்.