ARTICLE AD BOX
தொகுதி மறுசீரமைப்பு குறித்து விவாதிக்க வலியுறுத்தி நாடாளுமன்ற வளாகத்தில் திமுக எம்.பி.க்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
மத்திய அரசு, தொகுதி மறுசீரமைப்பு செய்தால் தமிழ்நாட்டில் தொகுதிகளின் எண்ணிக்கை குறையும் அபாயம் இருப்பதாக தமிழக அரசு எதிர்ப்பு தெரிவித்து வருகிறது.
தென் மாநிலங்களில் தொகுதி குறைய வாய்ப்புள்ளதால் தென் மாநில முதல்வர்கள் இதற்கு எதிராக ஒன்றிணைந்து குரல் கொடுக்க வேண்டும் என்று கூறியுள்ள முதல்வர் மு.க. ஸ்டாலின் அதற்கான நடவடிக்கைகளையும் மேற்கொண்டு வருகிறார்.
இந்நிலையில், தொகுதி மறுசீரமைப்பு குறித்து அவையில் விவாதிக்க வேண்டும் என்று திமுக எம்.பி.க்கள் கோரிக்கை விடுத்து ஒத்திவைப்பு தீர்மான நோட்டீஸ் அளித்தனர்.
நேற்றும் தொகுதி மறுசீரமைப்பு குறித்து அவையில் விவாதிக்க அனுமதி மறுத்ததையடுத்து மக்களவையில் இருந்து திமுக எம்பிக்கள் வெளிநடப்பு செய்தனர்.
இதையும் படிக்க | பேரவையில் சுனிதா வில்லியம்ஸ், வில்மோருக்கு முதல்வர் பாராட்டு!
தொடர்ந்து இன்றும்(புதன்கிழமை) தொகுதி மறுசீரமைப்பு குறித்து விவாதிக்கக் கோரிய நிலையில் மக்களவையில் அனுமதி மறுக்கப்பட்டதால் திமுக எம்.பி.க்கள் அவையிலிருந்து வெளிநடப்பு செய்து நாடாளுமன்ற வளாகத்தில் ஆர்ப்பாட்டடத்தில் ஈடுபட்டுள்ளனர்.
தொகுதி மறுசீரமைப்பு நடத்தப்பட்டால் நாடாளுமன்றத்தில் எங்களது குரலின் வலிமை குறைந்துவிடும் என திமுக எம்.பி. திருச்சி சிவா கூறியுள்ளார்.
தில்லியில் செய்தியாளர்களுடன் பேசிய அவர்,
"மக்கள்தொகையில் அடிப்படையில் தொகுதி மறுசீரமைப்பு செய்தால் மக்கள்தொகையை முறையாகக் கட்டுப்படுத்திய பஞ்சாப் மற்றும் தென் மாநிலங்கள் பாதிக்கப்படும். தமிழகத்தில் தொகுதிகள் 31 ஆகக் குறையும். வடக்கில் உள்ள மாநிலங்கள் அதிக தொகுதிகளைப் பெறும். தொகுதி மறுசீரமைப்பு நடத்தப்பட்டால் நாடாளுமன்றத்தில் எங்களது குரல் வலிமையாக இருக்காது. பிரச்னைகளின்போது எங்களது கருத்துகளை ஏற்றுக்கொள்ளமாட்டார்கள். அவைகளில் இதுகுறித்த விவாதம் வேண்டும் என்று தொடர்ந்து வலியுறுத்தி வருகிறோம்" என்றார்.