ARTICLE AD BOX
தைப்பூசம் என்பது தை மாதத்தில் பூச நட்சத்திரமும், பௌர்ணமி திதியும் கூடி வரக்கூடிய நன்னாளாகும். இந்த நாளில்தான், அன்னை தன் தவப்புதல்வனுக்கு வேல் வழங்கிய நாளாக கருதப்படுகிறது.
தமிழ் கடவுளாக பக்தர்களால் போற்றி வணங்கப்படுபவர் முருகப்பெருமான். முருகனுக்கு மிகவும் உகந்த நாட்களுள் தைப்பூசமும் ஒன்றாகும். தை மாதம் என்றால் பொங்கல் பண்டிகை எவ்வளவு சிறப்போ அதுபோல தைப்பூசமும் மிகவும் சிறப்பானது. ஒவ்வொரு ஆண்டும் தைப்பூசத்தை பக்தர்கள் கோலாகலமாக கொண்டாடுவது வழக்கம். நடப்பாண்டிற்கான தைப்பூசம் வரும் பிப்ரவரி 11ம் தேதி கொண்டாடப்படுகிறது. இதற்காக முருக பக்தர்கள் முழு மூச்சில் தயாராகி வருகின்றனர். தைப்பூசமானது ஆண்டுதோறும் 10 நாட்கள் திருவிழாவாக முருகப் பக்தர்களால் கொண்டாடப்படும்.
முருகனின் அறுபடை வீடுகளில் தைப்பூசத் திருவிழாவிற்கான ஏற்பாடுகள் மும்முரமாக நடைபெற்று வருகிறது. பழனி, திருச்செந்தூர், திருப்பரங்குன்றம், திருத்தணி உள்ளிட்ட பல முருகன் கோயில்களுக்கு பக்தர்கள் பாத யாத்திரையாக செல்வார்கள். பால் காவடி, அலகு குத்தி பக்தர்கள் தங்களது நேர்த்திக்கடனை செலுத்துவார்கள். இந்த நாளில் லட்சக்கணக்கான பக்தர்கள் முருகன் கோயில்களில் குவிவார்கள். இப்படி பக்தர்கள் நேரடியாக செல்லமுடியவில்லை என்றால் வீட்டிலேயே விரதம் இருக்கலாம்.
விரதம் இருக்கும் முறை:
தைப்பூச நாளில் விரதம் இருந்தால் குழந்தை பாக்கியம் உண்டாகும் என்றும், நினைத்த காரியங்கள் நிறைவேறும் எனவும் சொல்லப்படுகிறது. அப்படி தைப்பூச நாளில் அதிகாலையிலேயே எழுந்து குளித்துவிட்டு, பூஜை செய்து விரதத்தை தொடங்கலாம்.
சாப்பிடாமலும் விரதம் இருக்கலாம், பால் பழம் மட்டும் சாப்பிட்டு கூட விரதத்தை மேற்கொள்ளலாம். இல்லையென்றால் ஒரு பொழுது விரதம் கூட மேற்கொள்ளலாம். விரதத்தின் போது கந்த சஷ்டி கவசம், வேல் மாறல் போற்றி பாட வாழ்க்கை மகிழ்ச்சியாக இருக்கும் என சொல்லப்படுகிறது. விரதத்தை முடிக்கும் போது முருகனுக்கு அரோகரா கோஷம் போட்டு முடிக்க வேண்டுமாம்.