தேர்தலில் வெற்றி பெற போலி வாக்காளர்களைப் பயன்படுத்தும் பாஜக: மம்தா குற்றச்சாட்டு

6 hours ago
ARTICLE AD BOX

மேற்கு வங்கத்தில் தேர்தலில் வெற்றி பெறுவதற்காக மற்ற மாநிலங்களில் உள்ள வாக்காளர்களின் பெயர்களை பாஜக போலியாகப் பயன்படுத்துவதாக மேற்கு வங்க முதல்வரும் திரிணமூல் காங்கிரஸ் தலைவருமான மம்தா பானர்ஜி குற்றம்சாட்டினார்.

மேற்கு வங்கத்தில் அடுத்த ஆண்டு நடைபெற உள்ள சட்டப் பேரவைத் தேர்தலுக்கான உத்தியை வகுப்பதற்காக திரிணமூல் காங்கிரஸ் கட்சியின் மாநில மாநாடு, கொல்கத்தாவில் உள்ள நேதாஜி உள்விளையாட்டு அரங்கில் வியாழக்கிழமை நடைபெற்றது.

இதில் பங்கேற்று மம்தா பானர்ஜி பேசியதாவது:

மேற்கு வங்கத்தில் தேர்தலில் வெற்றி பெறுவதற்காக மற்ற மாநிலங்களில் உள்ள வாக்காளர்களின் பெயர்களை பாஜக போலியாகப் பயன்படுத்துகிறது. இதேபோன்ற தந்திரங்களை தில்லி மற்றும் மகாராஷ்டிர சட்டப் பேரவைத் தேர்தல்களில் வெற்றி பெறவும் பாஜக கையாண்டது. ஹரியாணா மற்றும் குஜராத்தில் உள்ள வாக்காளர்களின் பெயர்கள் இந்த மாநிலங்களில் போலியாகச் சேர்க்கப்பட்டன.

தலைமைத் தேர்தல் ஆணையராக ஞானேஷ்குமார் நியமிக்கப்பட்டதிலும் சந்தேகங்கள் உள்ளன. அரசியல் சாசன அமைப்பான தேர்தல் ஆணையத்தின் மீது தனது செல்வாக்கை செலுத்த பாஜக முயற்சிக்கிறது. தேர்தல் ஆணையத்தின் ஆசியுடன் வாக்காளர் பட்டியலில் பாஜக எவ்வாறு முறைகேடுகளைச் செய்கிறது என்பது தற்போது நிரூபணமாகியுள்ளது.

வாக்காளர் பட்டியலில் உள்ள தவறுகளை சரிசெய்ய தேவையான நடவடிக்கை எடுக்கப்படாவிட்டால் தேர்தல் ஆணைய அலுவலகத்துக்கு முன்பாக திரிணமூல் காங்கிரஸ் கட்சி போராட்டம் நடத்தும்.

மேற்கு வங்கத்தில் தனியார் கார் தொழிற்சாலைக்கு நிலம் கையகப்படுத்தப்பட்ட நடவடிக்கைக்கு எதிராக கடந்த 2006இல் நான் 26 நாள் உண்ணாவிரதப் போராட்டத்தை நடத்தினேன். அதேபோல் தேர்தல் ஆணையத்துக்கு எதிராகவும் நம்மால் போராட்டம் நடத்த முடியும்.

வாக்காளர் பட்டியலை சரிபார்க்கும் பணிகளை திரிணமூல் காங்கிரஸ் தலைவர்கள் தொடங்க வேண்டும். தேர்தல் ஆணையத்தின் ஆதரவுடன் வாக்காளர் பட்டியலில் பாஜக முறைகேடுகளைச் செய்துள்ளது. தேர்தலுக்கு முன் வாக்காளர் பட்டியலை சரிபார்ப்பது நமது கட்சியின் முன்னுரிமைப் பணியாகும்.

பூத் அளவிலான தொண்டர்கள் இந்தப் பணியை உடனடியாகத் தொடங்க வேண்டும். இதை கட்சியின் மாவட்டத் தலைவர்கள் மேற்பார்வையிட வேண்டும்.

மகாராஷ்டிரம் மற்றும் தில்லி சட்டப் பேரவைத் தேர்தல்களைத் தொடர்ந்து மேற்கு வங்கத்திலும் வாக்காளர் பட்டியலில் குளறுபடிகளைச் செய்ய பாஜகவினர் குறிவைத்துள்ளனர். அதற்கு நாம் கடுமையான பதிலடியைத் தரவேண்டும். சரியான பதிலடி கொடுக்குமாறு கட்சித் தொண்டர்களை வலியுறுத்துகிறேன் என்று மம்தா பேசினார்.

"மம்தாவுடன் மோதல் இல்லை': திரிணமூல் காங்கிரஸ் தலைவர் மம்தா பானர்ஜியுடன் தனக்கு எந்த மோதலும் இல்லை என்று அவரது உறவினரும் அக்கட்சி எம்.பி.யுமான அபிஷேக் பானர்ஜி தெரிவித்தார். கொல்கத்தாவில் நடந்த கட்சி மாநாட்டில் பேசிய அவர் "தேர்தல்கள் வரும்போதெல்லாம் இத்தகைய அவதூறுகளைப் பரப்புவதை எதிர்க்கட்சிகள் வழக்கமாகக் கொண்டுள்ளன.

Read Entire Article