தேர் சாய்ந்து விபத்து: தமிழக பக்தர் உள்பட 2 பேர் உயிரிழந்த சோகம்

1 day ago
ARTICLE AD BOX

ஆனேக்கல்,

கர்நாடகா மாநிலம் பெங்களூரு புறநகர் ஆனேக்கல் தாலுகாவிற்கு உட்பட்ட ஹுஸ்கூருவில் மத்தூரம்மா அம்மன் கோவில் அமைந்துள்ளது. இங்கு மூலவராக மத்தூரம்மன் வீற்றிருந்து பக்தர்களுக்கு அருள்பாலித்து வருகிறார். இந்த கோவிலில் ஆண்டுதோறும் அம்மனுக்கு திருவிழா நடத்தப்பட்டு வருகிறது. அதேபோல் இந்த ஆண்டுக்கான திருவிழா தொடங்கி நடந்து வருகிறது.

திருவிழாவையொட்டி நேற்று தேரோட்டம் நடந்தது. 152 அடி உயர தேரில் அம்மன் எழுந்தருளினார். இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு தேரை வடம்பிடித்து இழுத்து வந்தனர்.

அம்மன் தேரை தொடர்ந்து தொட்ட நாகமங்களா மற்றும் ராயசந்திரா சாமி தேர்களும் வந்தன. இவை இரண்டும் சிறிய தேர்கள் ஆகும். அம்மன் வீற்றிருக்கும் 152 அடி உயர தேர் கட்டஹள்ளி கிராமம் வழியாக வந்து கொண்டிருந்தது. அப்போது லேசாக அங்கு மழை பெய்தது. இதனால் பக்தர்கள் தேரை மெதுவாக இழுத்து வந்தனர். இந்த சந்தர்ப்பத்தில் திடீரென தேர், அப்படியே சாய்ந்து விழுந்தது.

இதனால் பக்தர்கள் அலறியடித்துக் கொண்டு சிதறி ஓடினர். தேரின் அடியில் 11 பக்தர்கள் சிக்கிக் கொண்டனர். அதில் பெண்களும் அடங்குவர். மேலும் தேர் விழுந்ததில் சாலையோரம் இருந்த வீடுகளும் சேதம் அடைந்தன.

இதையடுத்து தேரோட்டத்தையொட்டி பாதுகாப்புக்காக வந்த போலீசார் மற்றும் தீயணைப்பு படையினர் தேருக்கு அடியில் சிக்கி காயம் அடைந்த பக்தர்களை மீட்டனர். இதில் லோகித்(வயது 24) என்ற ஆட்டோ டிரைவர் தேரின் அடியில் சிக்கி பலியானது தெரியவந்தது. பலியான லோகித் தமிழ்நாட்டைச் சேர்ந்தவர் ஆவார். மேலும் பெங்களூருவின் கெங்கேரியைச் சேர்ந்த ஜோதி (14) என்பவரும் உயிரிழந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் காயம் அடைந்த நபர்களை மீட்பு குழுவினர் மீட்டு ஆனேக்கல் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

கடந்த ஆண்டும் (2024) இதேபோல் மத்தூரம்மா அம்மன் கோவில் தேரோட்டத்தின்போது தேர் சாய்ந்து விழுந்து 2 பக்தர்கள் பலியானது குறிப்பிடத்தக்கது.


Read Entire Article