ARTICLE AD BOX
தமிழக அரசின் செம்மொழி நாள் விழாவை முன்னிட்டு பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கு கட்டுரை, பேச்சுப் போட்டிகள் நடத்தப்படுகின்றன. இதில் வெற்றி பெறுபவர்களுக்கு பரிசு மற்றும் பாராட்டுச் சான்றிதழ் வழங்கப்படும்.

தமிழக அரசு சார்பாக கல்விக்கு முக்கியத்துவம் கொடுத்து பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்படுகிறது. அந்த வகையில் மாணவர்களின் திறமைகளை வெளிப்படுத்திடவும் வாய்ப்புகள் வழங்கப்படுகிறது. கலைத்திருவிழா நடத்தி பேச்சு போட்டி, கட்டுரை போட்டி, ஓவிய போட்டி என பல போட்டிகளை நடத்தி வருகிறது.
அந்த வகையில் தற்போது "தமிழுக்கு செம்மொழித் தகுதி பெற்றுத் தந்த முத்தமிழறிஞர் கலைஞர் பெருமையைப் போற்றிடும் வகையில் அவர் பிறந்த நாளான ஜூன் மாதம் 3ஆம் நாள் தமிழ்நாடு அரசின் சார்பில் ஆண்டுதோறும் செம்மொழிநாள் விழாவாகக் கொண்டாடப்பட்டு வருகிறது.

அந்த வகையில் செம்மொழியின் சிறப்பையும் முத்தமிழறிஞரின் தமிழ்த்தொண்டின் பெருமையையும் மாணவர்களிடம் உணர்த்திடும் வகையில் ஆண்டுதோறும் அனைத்து மாவட்டங்களிலும் 11 மற்றும் 12 ஆம் வகுப்பு பயிலும் பள்ளி மாணவர்களுக்கும், கல்லூரி மாணவர்களுக்கும் கட்டுரை, பேச்சுப் போட்டிகள் நடத்தப்பட இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த போட்டியில் வெற்றி பெறுபவர்களுக்கு 03.05.2025ஆம் நாளன்று நடைபெறவுள்ள செம்மொழி நாள் விழாவில் பரிசு மற்றும் பாராட்டுச் சான்றிதழ் வழங்கிச் சிறப்பிக்கப்பெறுவர். அந்த வகையில் மாவட்ட மற்றும் மாநில அளவில் கட்டுரை மற்றும் பேச்சுப்போட்டி தொடர்பான விவரம் வெளியிடப்பட்டுள்ளது.

அனைத்து மாவட்டங்களிலும் பள்ளி மாணவர்களுக்கான போட்டிகள் 09.05.2025 வெள்ளிக்கிழமை அன்று நடைபெறும். இப்போட்டிகளில் கலந்து கொள்ளும் மாணவர்கள் விண்ணப்பப் படிவங்களை தமிழ் வளர்ச்சித்துறையின் https://tamilvalarchithurai.tn.gov.in என்ற இணைய முகவரியில் பதிவிறக்கம் செய்து தலைமையாசிரியரின் பரிந்துரையுடன் 25.03.2025ஆம் நாளுக்குள் விண்ணப்பிக்க வேண்டும். விண்ணப்பங்களை அந்தந்த மாவட்டத் தமிழ் வளர்ச்சித் துணை இயக்குநர் அல்லது உதவி இயக்குநர் அலுவலகங்களில் நேரில் அளிக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் இப்போட்டிகளில் அரசுப்பள்ளி, தனியார் பள்ளி, பதின்ம பள்ளி, அரசு நிதியுதவி பெறும் பள்ளி, மத்திய இடைநிலை கல்வி வாரியம் (CBSE) பயிலும் மாணவர்கள் பங்குபெறலாம். போட்டி நடைபெறும் இடம், நாள் குறித்த தகவல்கள் மாவட்ட துறை இயக்குநர்கள் அல்லது உதவி இயக்குநர்கள் வழியாக முதன்மைக் கல்வி அலுவலகம் /பள்ளித் தலைமையாசியர் வழியாகவும் நாளிதழ் வாயிலாகத் மாணவர்களுக்கு தெரிவிக்கப்படும்.
போட்டிக்கான தலைப்புகள் போட்டியின் போது அறிவிக்கப்படும். "செம்மொழியின் சிறப்பு மற்றும் முத்தமிழறிஞர் கலைஞரின் தமிழ்த்தொண்டின் பெருமை" சார்ந்த தலைப்பு அளிக்கப்படும். இப்பொருண்மை சார்ந்த தலைப்புகளுக்கு மாணவர்கள் ஆயத்தப்படுத்திக் கொள்ளலாம் என கூறப்பட்டுள்ளது.

அனைத்து மாவட்டங்களிலும் கல்லூரி மாணவர்களுக்கான போட்டிகள் 10.05.2025 வெள்ளிக்கிழமை அன்று நடைபெறும். இப்போட்டிகளில் கலந்து கொள்ளும் கல்லூரி மாணவர்கள் விண்ணப்பப் படிவங்களை தமிழ் வளர்ச்சித்துறையின் https://tamilvalarchithurai.tn.gov.in என்ற இணைய முகவரியில் பதிவிறக்கம் செய்து துறைத்தலைவரின் பரிந்துரையுடன் 25.03.2025ஆம் நாளுக்குள் விண்ணப்பிக்க வேண்டும்.
விண்ணப்பங்களை அந்தந்த மாவட்டத் தமிழ் வளர்ச்சித் துணை இயக்குநர் / உதவி இயக்குநர் அலுவலகங்களில் நேரில் அளிக்க வேண்டும். இப்போட்டிகளில் கலை மற்றும் அறிவியல், கல்வியியல், பொறியியல், பல்தொழில்நட்பம், மருத்துவம், சட்டம், வேளாண்மை உள்ளிட்ட அரசு மற்றும் தனியார் கல்லூரியில் பயிலும் மாணவர்கள் பங்குபெறலாம்.

மாவட்டப் போட்டி பரிசுத் தொகை பொறுத்தவரை முதலாம் பரிசுக்கு 10ஆயிரம் ரூபாயும், இரண்டாம் பரிசுக்கு 7ஆயிரமும், 3ஆம் பரிசுக்கு 5 ஆயிரம் ரூபாயும் வழங்கப்படவுள்ளது. மாநில அளவிலான போட்டியில் முதல் பரிசு 15ஆயிரமும், இரண்டாம் பரிசு 10ஆயிரமும், 3ஆம் பரிசு 7ஆயிரமும் வழங்கப்படும் என அறிவிக்கப்படுடள்ளது.
03.06.2025 அன்று நடைபெறும் செம்மொழிநாள் விழா தொடர்பில் பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களுக்கு கட்டுரை மற்றும் பேச்சுப் போட்டியில் மாவட்ட/மாநில அளவில் பரிசுத் தொகை ரூ.17,36,000/- (ரூபாய் பதினேழு இலட்சத்து முப்பத்தாறாயிரம் மட்டும்) தமிழ் வளர்ச்சித் துறையால் வழங்கிச் சிறப்பிக்கப்பெறுவர் என கூறப்பட்டுள்ளது.