ARTICLE AD BOX
நாடாளுமன்றத்தில் ஒன்றிய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் இன்று பட்ஜெட்டை தாக்கல் செய்து உரையாற்றினார். பெரும்பாலும் தனது பட்ஜெட் உரைகளின் தொடக்கத்தில் திருக்குறளை மேற்கோள் காட்டுவதை நிர்மலா சீதாராமன் வழக்கமாக வைத்திருந்தார். இந்த முறை தெலுங்கு கவிதை ஒன்றை மேற்கோள் காட்டியுள்ளார். பட்ஜெட்டை தாக்கல் செய்து உரையாற்றத் தொடங்கியதும் அவர், தெலுங்கு எழுத்தாளர் குரஜாடா அப்பாராவின் ‘தேசமாண்டே..’ கவிதையுடன் பட்ஜெட் உரையை தொடங்கினார். இக் கவிதையின் பொருள், ‘தேசம் என்பது மண் அல்ல; மக்கள்’ என்பதாகும்.
மேலும் நிதிநிலை அறிக்கையில் இடம்பெற்றுள்ள முக்கிய அம்சங்கள் குறித்து மக்களவையில் உரையாற்றிய நிர்மலா சீதாராமன், ‘வானோக்கி வாழும் உலகெல்லாம் மன்னவன்; கோல்நோக்கி வாழுங் குடி’ என்ற திருக்குறளை மேற்கோளிட்டு பேசினார். திருக்குறளின், ‘செங்கோன்மை’ அதிகாரத்தில் உள்ள குறளை மேற்கொள் காட்டி நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் உரையாற்றினார். இதற்கு முன் பட்ஜெட்டை தாக்கல் செய்யும் ஒன்றிய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் திருக்குறள், புறநானூறு, ஆத்திக்சூடி போன்ற தமிழின் தனிச்சிறப்பு மிக்க சங்க இலக்கியங்களை மேற்கோள்காட்டி உள்ளார். ஆனால் கடந்த ஆண்டு திருக்குறளை நிர்மலா சீதாராமன் தவிர்த்தது தமிழ் ஆர்வலர்கள் மத்தியில் ஏமாற்றத்தை அளித்தது.
கடந்த 2019 ஜூலை மாதம் முதன்முறையாக நாடாளுமன்றத்தில் பொது பட்ஜெட்டை நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்திருந்தார். அப்போது தான் ஒரு தமிழர் என்பதாலும், பிரதமர் மோடியின் தமிழ் மீதான ஆர்வத்தை காட்டும் வகையிலும் பட்ஜெட் உரையில் தமிழ் இலக்கியத்தை மேற்கோள் காட்டிப் பேசினார். அப்போது, தமிழ் இலக்கியத்தைச் சுட்டிக்காட்டி பட்ஜெட் உரையைத் தொடங்கியதை தமிழக எம்பிக்கள் மேசையைத் தட்டி வரவேற்றனர். தொடர்ந்து ஒவ்வொரு பட்ஜெட் தாக்கல் செய்யும்போதும் திருக்குறள், அவ்வையார் பாடல் உள்ளிட்ட பல தமிழ் உவமைகளை நிர்மலா சீதாராமன் தவறாமல் குறிப்பிட்டு வந்தார். ஆனால், கடந்த ஆண்டு பட்ஜெட் தாக்கலின்போது, தமிழ் உட்பட எந்த மொழியிலும் மேற்கோள் காட்டவில்லை. திருக்குறளை மேற்கோள் காட்டாதது தமிழர்கள் மத்தியில் கவனம் பெற்றது.
The post தெலுங்கு கவிதை வாசித்த நிர்மலா சீதாராமன்: திருக்குறளை மேற்கோள் காட்டியும் உரை appeared first on Dinakaran.