ARTICLE AD BOX
தெலங்கானாவில் சுரங்கம் இடிந்து விழுந்த விபத்தில் ஆறாவது நாளாக மீட்புப்பணிகள் தொடர்கின்றன. சுரங்கத்திற்குள் சிக்கியுள்ள 8 பேரை உயிருடன் மீட்பதற்கான வாய்ப்புகள் குறைந்துவருகின்றன.
ஸ்ரீசைலம் இடதுகரை கால்வாய் திட்டத்துக்காக நாகர்கர்னூல் பகுதியில் கால்வாய் அமைக்கும் திட்டத்தின் ஒரு பகுதியாக சுரங்கம் தோண்டப்பட்டு வந்தது. கடந்த 22 ஆம்தேதி சுரங்கத்திற்குள் தண்ணீர் பெருக்கெடுத்த நிலையில், கட்டுமானம் இடிந்து விபத்து ஏற்பட்டது. இதில், ஏராளமானோர் தப்பிய நிலையில் 8 பேர் உள்ளே சிக்கிக்கொண்டனர். அச்சுரங்கம் இடிந்து விழுந்ததில் உள்ளே சிக்கியுள்ள 8 பேரை மீட்கும் பணி கடந்த 6 நாட்களாக நடைபெற்று வருகிறது.
ராணுவம், கடற்படை, தேசிய பேரிடர் மீட்புப்படை என பல தரப்புகளில் இருந்தும் வீரர்கள் வரவழைக்கப்பட்டு மீட்புப் பணி இரவு பகலாக நடைபெற்றுவருகிறது. எனினும் சரங்கத்தை குடையும் இயந்திரந்தின் ஒரு பகுதி உடைந்ததால் மீட்பு பணியில் தொய்வு ஏற்பட்டுள்ளது.
விபத்து ஏற்பட்ட பகுதியில் சேற்று மண் படிந்திருப்பதால் அதனை அகற்றுவதும் பெரும் சவாலாக இருக்கிறது. இதையடுத்து அதிநவீன சுரங்கம் தோண்டும் பெரிய இயந்திரங்களை கொண்டும், மாற்று வழிகள் மூலமாகவும் இடிபாடுகளை அகற்றி மீட்புப்பணிகளை தொடரும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுவருகின்றன. இன்னும் 2 நாட்கள் மீட்புப்பணிகள் தொடரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
உள்ளே சிக்கியுள்ளவர்களின் குடும்பத்தினர் வெளியே கவலையுடன் காத்திருக்கின்றனர். 8 பேரும் சுரங்கத்திற்குள் 6 நாட்களாக சிக்கியுள்ளதால் உயிருடன் இருப்பதற்கான வாய்ப்புகள் குறைவு என தேசிய பேரிடர் மீட்புப்படை அதிகாரிகள் தெரிவித்தனர். எனினும் இறுதிவரை நம்பிக்கை இழக்காமல் மீட்புப்பணிகள் நடைபெறும் என்று மீட்புக்குழுவினர் தெரிவிக்கிறார்கள்.