ARTICLE AD BOX
சென்னை,
தமிழ்நாடு சட்டசபையில் பட்ஜெட் மீதான 2வது நாள் விவாதம் தொடங்கி நடைபெற்று வருகிறது. முக்கிய பிரச்சினைகள் தொடர்பாக உறுப்பினர்கள் எழுப்பும் கேள்விகளுக்கு அமைச்சர்கள் பதில் அளித்து வருகின்றனர்.
இந்நிலையில் பட்ஜெட் மீதான விவாதத்தில் பேசிய அ.தி.மு.க. உறுப்பினர் செல்லூர் ராஜு, தி.மு.க. ஆட்சி முடிவதற்கு இன்னும் ஓராண்டே உள்ள நிலையில் எப்படி ராமேஸ்வரத்தில் விமான நிலையம் அமைக்க முடியும் என்று கேள்வி எழுப்பினார்.
இதற்கு பதில் அளித்த அமைச்சர் டி.ஆர்.பி. ராஜா, "பல 100 ஆண்டுகளுக்கு திராவிட மாடல் ஆட்சி தான் தமிழகத்தில் நிலைத்து நிற்கும். தமிழக முதல்-அமைச்சர் ஆட்சியில் கோவை விமான நிலைய விரிவாக்கம் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அ.தி.மு.க. ஆட்சியில் கோவைக்கு என்ன செய்தீர்கள்..? என்ன துரோகம் செய்தீர்கள் என்று கோவை மக்கள் முழுமையாக அறிவார்கள்.
எந்த ஒரு திட்டத்தையும் முடிக்கவில்லை ஆட்சிக்கு வந்தவுடன் அதே கோவைக்கு சென்று வாக்களிக்காத மக்களும், ஏன் இவர்களுக்கு வாக்களிக்கவில்லை என்று ஏங்கும் அளவுக்கு ரூ.2,000 கோடி ஒதுக்கப்பட்டு அங்கே நிலம் எடுக்கப்பட்டு கோவை விமான நிலைய நிர்வாக பணிக்கு மேற்கொள்ளப்பட்டு வருகிறது" என்று அவர் தெரிவித்தார்.
இதனைத் தொடர்ந்து பேசிய நிதி அமைச்சர் தங்கம் தென்னரசு, "விமான நிலையம் கட்டுவது ஜீபூம்பா வேலையா. பட்ஜெட் அறிவிக்கப்படும் திட்டங்களுக்கு உரிய காலத்தில் நிதி ஒதுக்கீடு செய்யப்படும்" என்று அவர் தெரிவித்தார்.
இதனைத் தொடர்ந்து பேசிய எதிர்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி, "தூத்துக்குடி மற்றும் மதுரை விமான நிலையபணிகள் அ.தி.மு.க. ஆட்சி காலத்தில் மேற்கொள்ளபட்டவை" என்று அவர் தெரிவித்தார்.
இதற்கு பதில் அளித்த அமைச்சர் டி.ஆர்.பி. ராஜா, "எதிர்கட்சி தலைவர் தவறான தகவலை கூறுகிறார். இது தொடர்பான தகவலை என்னுடைய மானியக் கோரிக்கையில் தெரிவிக்கிறேன். தண்ணீரில் தெர்மாகோல் விடுவது ஈசி, விமான நிலையம் அமைப்பது அப்படியல்ல, நிலம் கையகப்படுத்துவது குறித்து ஆராய்ந்து, மத்திய அரசின் அனுமதி பெற்று ஓசூரில் விரைவில் விமான நிலையம் அமைக்கப்படும்" என்று அவர் தெரிவித்தார்.
இதனைத் தொடர்ந்து பேசிய முன்னாள் அமைச்சர் செல்லூர ராஜு, "தெர்மாகோல் தெர்மாகோல்னு சொல்றீங்க... அதிகாரி சொல்லி தானே போனோம். இப்படி ஓட்டுகிறீர்களே... சரி பரவாயில்லை, ராஜா வாழ்க.." என்று கலகலப்பாக பேசினார்.