தூத்துக்குடி : கடல் அரிப்பால் அழியும் பனை மரங்கள் - ஊருக்குள் கடல் நீர் புகும் அபாயம்

3 hours ago
ARTICLE AD BOX

தூத்துக்குடி மாவட்டம், குலசேகரன்பட்டினம் கடற்கரையோரப் பகுதி கிராமம். இங்கு அமைந்துள்ள முத்தாரம்மன் திருக்கோயில் பிரசித்தி பெற்றது. இந்தியாவில் மைசூருக்கு அடுத்தபடியாக தமிழகத்தில் இங்குதான் தசரா திருவிழா விமரிசையாக கொண்டாடப்படுகிறது. 10 நாட்கள் நடைபெறும் இத்திருவிழாவில் பல பகுதிகளில் இருந்தும் லட்சக் கணக்கான பக்தர்கள் வருகை புரிவார்கள். இத்தகைய சிறப்பு வாய்ந்த குலசேகரன்பட்டினம் கடற்கரை, தொடரும் கடல் அரிப்பினால் மெல்ல மெல்ல அழிந்து வருகிறது. திருச்செந்தூரில் இருந்து சுமார் 12 கி.மீ தொலைவில் உள்ள இக்கடற்கரையில் கடந்த 2 மாதங்களாக  ஏற்பட்ட தொடர் கடல் அரிப்பினால் 100-க்கும் மேற்பட்ட பனை மரங்கள் கடலுக்குள் சரிந்து விழுந்துள்ளன.

கடல் அரிப்பால் சரிந்த பனை மரங்கள்

அலையின் சீற்றத்தால் அவை கடலுக்குள் அடித்துச் செல்லப்படுகின்றன. இதே நிலை தொடர்ந்தால் ஊருக்குள் கடல் நீர் புகும் அபாயம் ஏற்பட்டுள்ளது. இதுகுறித்து உடன்குடியைச் சேர்ந்த சுற்றுச்சூழல் ஆர்வலரான குணசீலனிடம் பேசினோம், “பல ஆண்டுகளாக கம்பீரமாக வானுயர்ந்து நின்ற பனை மரங்கள் கடல் அரிப்பினால் சரிந்து விழுந்து வருகின்றன. இந்தப் பகுதியில் வளரும் பனை மரங்களுக்கு தனிச்சிறப்பு உண்டு.  பொதுவாக பனை மரம் பருவத்திற்கு வர 15 ஆண்டுகளுக்கு மேல் ஆகும். ஆனால், இங்கு வளரும் பனை மரங்கள் 10 முதல் 12 ஆண்டுகளிலேயே பருவத்திற்கு வந்துவிடும்.

இதனாலேயே ‘உடன்குடி கருப்பட்டி’ மக்கள் மத்தியில் பிரபலமானது. உடன்குடி கருப்பட்டிக்கு சமீபத்தில் புவீசார் குறியீடும் வழங்கப்பட்டுள்ளது. சுனாமி போன்ற பேரலைத் தாக்குதல் சமயத்தில்கூட பனைமரங்கள் கம்பீரத்தை இழக்கவில்லை. கடந்த 2018-ம் ஆண்டு உடன்குடி அனல் மின் நிலைய பணிக்காக நிலக்கரி இறங்குதளம், இப்பகுதியில் இருந்து கடலுக்குள் சுமார் 10 கி.மீ தூரத்திற்கு அமைக்கப்பட்டது. கடலுக்குள் கடின அளவிலான இதுபோன்ற கட்டுமானங்கள் அமைக்கப்படுவதுதான் கடல் அரிப்புக்கு முக்கிய காரணம்.  கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு மணப்பாடு கடலில் ஏற்பட்ட மாற்றத்தின் காரணமாக மணல் திட்டுகள் உருவாகி மீனவர்கள் தங்களின் படகுகளை கடலுக்குள் கொண்டு செல்ல முடியாமல் தவித்தனர். 

கடல் அரிப்பால் சரிந்த பனை மரங்கள்

மணப்பாடு, அமலிநகர் மற்றும் ஆலந்தலை ஆகிய கடலோர மீனவ கிராமங்களில் தூண்டில் வளைவு அமைக்கப்பட்டதனால்தான் பிரசித்திபெற்ற திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயில் கடற்கரை 8 அடி உயரத்திற்கு அரிப்பு ஏற்பட்டு கோயிலுக்கு ஆபத்து வரும் அபாயம் நிலவி வருகிறது. துறை சார்ந்த அதிகாரிகள், வல்லுநர்கள் மூலம் முறையாக ஆய்வு செய்து தகுந்த நடவடிக்கை எடுக்காவிட்டால் பனைமரங்களை பாதுகாக்க முடியாது” என்றார். 

Vikatan WhatsApp Channel

இணைந்திருங்கள் விகடனோடு வாட்ஸ்அப்பிலும்... CLICK BELOW LINK

https://bit.ly/VikatanWAChannel

Read Entire Article