ARTICLE AD BOX
துளசி மாலை மிகவும் தூய்மையானது மற்றும் புனிதமானது. அதனால் அதை அணிபவரும் உடல் மற்றும் மன ரீதியாக சுத்தமாக இருக்க வேண்டும். இந்த துளசி மாலையை நாம் அணிந்து கொண்டால் ஆன்மீக ரீதியிலும் உடல்நல ரீதியிலும் நல்லதொரு மாற்றங்களை பெறலாம். விஷ்ணுவை வணங்குபவர்கள் தங்கள் மனதையும் உடலையும் அமைதிப்படுத்தவும், தெய்வீக மற்றும் ஆன்மீக முன்னேற்றத்தை பெறவும் துளசி மாலையைப் அணிகின்றனர்.
துளசி மாலையை அணிபவர்கள் அதை புனிதமாக மட்டும் கருதாமல் அதை ஆன்மீக ஒழுக்கம் மற்றும் ஸ்ரீ கிருஷ்ணரிடம் தங்களை சரணடைந்ததன் அடையாளமாக கருதுகின்றனர். இது கிருஷ்ணர் மற்றும் விஷ்ணு மீதான அவர்களின் முழுமையான பக்தியைக் காட்டுகிறது. ஆன்மீக பயணத்தில் எதிர்மறை ஆற்றலில் இருந்து அவர்களைப் பாதுகாக்கிறது. மேலும் துளசி மாலையின் புனித ஆற்றல் அவர்களின் மனதையும் உடலையும் தூய்மைப்படுத்துகிறது.
இந்த மாலை எதிர்மறை ஆற்றல்கள், தீய சக்திகள் மற்றும் சூனியம் ஆகியவற்றை விரட்டும் சக்தி கொண்டதாக நம்பப்படுகிறது. துளசி மாலை மந்திரங்களை உச்சரிக்க ஜெப மாலையாகவும் பயன்படுத்தப்படுகிறது. 108 துளசி மணிகளை உச்சரிக்கும் போது அவர்களின் தெய்வீக பக்தி அதிகரிக்கிறது. இது உச்சரிக்கும் மந்திரங்களின் சக்தியை உறிஞ்சுவதாகவும் நம்பப்படுகிறது.
துளசி மாலை துளசி செடியின் வேர்கள், கிளைகள் மற்றும் மரங்களிலிருந்து தயாரிக்கப்படுகிறது. இந்து மத சாஸ்திரங்களின்படி, 2 வகையான துளசி மாலைகள் உள்ளன. ஒன்று ராம துளசி மற்றொன்று ஷ்யாமா துளசி, இரண்டும் ஒரே மாதிரியான பலன்களைக் கொண்டிருந்தாலும், அவற்றின் நிறம் மற்றும் வடிவத்தில் நிறைய வேறுபாடுகள் உள்ளன. ராமர், ஷ்யாமா இருவரும் விஷ்ணுவின் அவதாரங்களாகும்.
துளசி மாலையை வாங்கியவுடன் அதை அப்படியே அணிந்து கொள்ளக்கூடாது. அதை கங்கை நீர் மற்றும் பாலில் கழுவ வேண்டும். இவ்வாறு செய்வதால் அதில் ஒட்டியிருக்கும் அசுத்தங்கள் நீங்கி விடும் என்று நம்பப்படுகிறது. பின்னர் மாலையை நன்றாக துடைத்து கிருஷ்ணர் அல்லது விஷ்ணுவின் படத்தின் அருகில் வைத்து ‘ஓம் நமோ பகவதே வாசுதேவாய’ அல்லது ‘ஓம் நமோ வாசுதேவாய’ அல்லது ‘ஹரே கிருஷ்ணா, ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே, ஹரே ராம், ஹரே ராம், ராம் ராம், ஹரே ஹரே’ போன்ற மந்திரங்களை குறைந்தது 8 முறை உச்சரித்த பின்னர் வழிபாடு செய்து மாலையை அணிந்து கொள்ள வேண்டும்.
துளசி மாலை அணிந்த பின் செய்யக்கூடாதவை :
துளசி மாலையை அணிந்த பிறகு, தங்கள் வாழ்நாள் முழுவதும் சில விதிகள் மற்றும் கட்டுப்பாடுகளை பின்பற்ற வேண்டும்.
* துளசி மாலை அணிபவர்கள் அசைவ உணவு, பூண்டு மற்றும் வெங்காயம் சாப்பிடுவதைத் தவிர்க்க வேண்டும்.
* துளசி மாலை அணிந்த பிறகு சூதாட்டம், மது மற்றும் புகைபிடித்தல், போதை பொருட்களை உபயோகிக்கக்கூடாது.
* துளசி மாலை அணிபவர்கள் மற்றவர்களிடம் தவறாக நடந்துகொள்வது மற்றும் மற்றவரை பற்றி தவறாக பேசுவது, தகாத வார்த்தைகள், பொய்கள், மற்றும் யார் மனதையும் புண்படுத்தும்படி பேசக்கூடாது.
* ஒருவர் தனது துளசி மாலையை மற்றவரிடம் பகிர்ந்து கொள்ளக்கூடாது, மற்றவரின் துளசி மாலையையும் அணியக்கூடாது.
* துளசி மாலை அணிபவர்கள் உடலுறவு கொள்ள கூடாது. அது பெரும் பாவமாகும்.
* மாதவிடாய் காலத்தில் துளசி மாலையை அணிவது அல்லது தொடுவது கூடாது. மாதவிடாய் காலத்தில் இந்த மாலாவை அணிந்தால், அதன் தூய்மை மோசமாக பாதிக்கப்படும் மற்றும் அதன் எதிர்மறை விளைவுகள் வெளிப்பட ஆரம்பிக்கலாம்.
* குளிக்கும் போது, உடற்பயிற்சி செய்யும் போதும், உறங்கும் போது அணியவே கூடாது.
* இறந்தவர் வீடு, பூப்படைதல் சடங்குகளுக்கு போகக்கூடாது. அப்படி கண்டிப்பாக போக வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டால் மாலையை கழற்றி சாமி படத்தின் முன் வைத்து விட்டு திரும்ப வந்த பின்னர் குளித்து முடித்து அணிந்து கொள்ளலாம்.