ARTICLE AD BOX

அதிமுக பொதுச்செயலாளரும் எதிர்க்கட்சி தலைவருமான எடப்பாடி பழனிச்சாமி நேற்று வெளியிட்டிருந்த அறிக்கையில், அதிமுக கொள்கை வீரர்களின் கூடாரமாக திகழ்கின்றது. பதவிக்காகவும் பணத்தை சேர்ப்பதற்காகவும் கட்சியை காட்டிக் கொடுக்க தயாராகி இருந்த திரை மறைவு அரசியல் பேராசைக்காரர்களின் கனவுகளும் கற்பனைகளும் காகிதம் ஓடம் போல கால வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டு விட்டது. ஓநாயும் வெள்ளாடும் ஒன்றுபட்டு இருக்க முடியுமா? களைகளும் பயிர்களும் ஒன்றாக வளர்ந்து வெள்ளாமை ஆகுமா? விசுவாசியும் துரோகியும் தோலோடு தோல் நிற்க முடியுமா என்று அறிக்கை வெளியிட்டிருந்தார்.
இந்நிலையில் எடப்பாடி பழனிச்சாமியின் இந்த அறிக்கைக்கு டிடிவி தினகரன் பதிலடி கொடுத்துள்ளார். இது தொடர்பாக செய்தியாளர்களை சந்தித்து பேசிய டிடிவி தினகரன், ஏதோ லாட்டரி சீட்டு போல குருட்டு யோகத்தின் பதவிக்கு வந்துவிட்டு துரோகத்திற்கு ஒரு சின்னம் போட வேண்டும் என்றால் அது பழனிச்சாமி தான் என்ற அளவுக்கு தமிழ்நாட்டு மக்களுக்கு தெரிந்துள்ளது. முன்பெல்லாம் துரோகி என்றால் எட்டப்பன் என்று நாம் அனைவரும் கேள்விப்பட்டிருப்போம். அது மாதிரி வரும் காலத்தில் பழனிச்சாமியின் பெயர் தமிழ்நாட்டு வரலாற்றில் ஒரு துரோகி என்றால் அது பழனிச்சாமி பெயர் தான் ஞாபகம் வருகின்ற அளவுக்கு செயல்பட்டுக் கொண்டிருப்பவர் அவர்தான். அவரே தெரியாமலேயே தான் தான் அந்த துரோகி என்று ஒத்துக் கொண்டுள்ளார் என்று அவர் வெளியிட்ட அறிக்கையை நான் பார்க்கிறேன் என டிடிவி தினகரன் பேசியுள்ளார்.