ARTICLE AD BOX
ஒரு சிறு விதையை நட்டுப் பக்குவமாக வளர்த்தால் அது அழகாக பெரிய மரமாக ஆவது இயற்கையின் நியதியாகும். அதேபோன்று ஆரம்பத்தில் சரியான விதையை லட்சிய மனத்திலே விதைத்தால் எப்படியும் ஆனந்தமாக வாழவேண்டும் என்று மனதிடம் கொண்டால் - அது வளர்ந்து செயல் என்னும் மரமாகப் பரிணமிக்கும்.
வெற்றி - உங்கள் ஆனந்த வாழ்க்கை - உங்கள் எண்ணத்தைப் பொறுத்திருக்கிறது' என்று கூறுகிறார் நெப்போலியன். அப்படியெனில் உங்களுடைய லட்சியம் ஆனந்தமாக வாழ வேண்டும் என்ற எண்ணம் திடமானதாகவும் உன்னதமாகவும் இருக்கின்றதா என்று உங்கள் நெஞ்சைத் தொட்டுப்பாருங்கள்.
வாழ்க்கையில் வெற்றிபெற துன்பமே போ, இன்பமே வா என்ற மனப்பாங்கு வேண்டும். உங்களிடமே ஒவ்வொரு நிலைக்கும் உரிய திறவுதோல் இருக்கிறது. நல்ல நினைப்புகள் கற்பகக் கனிகளைத் தருகின்றன. அதனால் இன்ப துன்பங்களைத் தரும் சக்தி உங்களிடத்தில்தான் இருக்கிறது.
உங்களைவிட மேலான நிலையில் இருப்பவர்களைப் பார்த்து நீங்கள் சமயத்தில் ஏன் ஏக்கம் கொள்கிறீர்கள்? வேண்டுமென்றால் நன்கு முயற்சி செய்து அவர்களது மேலான நிலையை அடைய முயற்சி செய்யுங்களேன்.
அதைவிட்டு விட்டு ஏக்கம் கொண்டால் என்ன ஆகும்? உங்கள் உடல் நிலை கெடும். துன்பம் சேரும். அதற்கு எதிரிடையாக, உங்களை விடக் கீழ்நிலையில் இருப்பவரைப் பார்த்து. ஏன் நீங்கள் பெருமிதம் கொள்ளக்கூடாது. அவனை விட நாம் எவ்வளவோ மேல் நிலையில் உள்ளோம் என்று எண்ணித் திருப்தியடைவதே சாலச்சிறந்தது.
எதையும் மகிழ்ச்சி நிலையில் அணுகும் வழிவகையை நீங்கள் கடைபிடித்து வரவேண்டும். நல்ல நினைப்புகளும் செயல்களும் ஒரு காலத்திலும் கெட்ட பலன்களைக் கொடுக்கமாட்டா. அது போன்று கெட்ட நினைப்புகளும் செயல்களும் ஒருக்காலும் நல்ல பலன்களை அளிக்கமாட்டா.
ஆனந்த வாழ்க்கைக்கு அடித்தளம், நீங்கள் பரிசுத்த சித்தனாய் இருப்பதுதான். நல்ல எண்ணங்களின் அளவுகோல் ஆனந்தம் அனுபவித்தலே!
நமது உள்ளத்தை இன்பத்தோடு வைத்திருக்க முயலுவோம். வேண்டுமானால் போராடுவோம். உருப்படியான எண்ணங்களை எண்ணுவோம்.
மகிழ்ச்சியை நெஞ்சச் சோலையில் உலாவவிடுவதற்கு பெருமுயற்சிகள் செய்வோம் இதோ, உங்கள் முன்னால் ஒரு புதிய திட்டம் இன்றைக்காவது நான் மகிழ்ச்சியாக இருப்பேன் என்று எழுந்தவுடன் சபதம் எடுத்துக் கொள்ளுங்கள்' என்கிறார் பிரான்ஸ் நாட்டின் தத்துவஞானி ஒருவர்.
இன்பமடைந்து அமைதியுடன் வாழ, ஒரே வழி மகிழ்ச்சியோடு நினைப்பதும், மகிழ்ச்சியோடு செயல்புரிவதுமே ஆகும். உத்வேகம் நிரம்பிய புத்தம் புதிய செயலொன்றைச் செய்யத் தொடங்கியதிலிருந்தே நீங்கள் உணர்ச்சி பெற்ற உயிர்ப்பிழம்பாகிறீர்கள்.
உங்களுக்கு விதியையும் எதிர்க்கும் ஆற்றல் உண்டாகிவிடுகின்றது; வாழ்க்கை இனிக்க ஆரம்பிக்கிறது. உள்ளத்தைப் பழமைச் சாக்கடையிலிருந்து காப்பாற்ற வேண்டும். தெள்ளிய நீரோடையாக உள்ளத்தை வைத்துக் கொள்ள வேண்டும்.
உங்களது எதிர்காலம் எவ்வாறு அமைந்தாலும் அதன் முழுப்பொறுப்பும் உங்களையே சாரும். உங்கள் உள்ளத்தை எத்தகைய சக்திகள் எதிர்த்தாலும், புரட்சி செய்தாலும் உள்ளத்தில் மகிழ்விக்கும் உற்சாகத்தை நம்பிக்கையை பலியிட்டு விடக்கூடாது.
துன்பத்தைத் துரத்துகின்ற மன நிலையையும், இன்பத்தை அனுபவிக்கின்ற மன நிலையையும் வளர்த்துக் கொண்டு வாழ்ந்து காட்டுவது சிறப்புக்குரியது.