ARTICLE AD BOX
கொப்பல்,
கர்நாடகாவின் கொப்பல் மாவட்டம் கங்காவதி தாலுகாவில் உள்ள அன்னபூர்ணா பகுதிக்கு அருகில் நேற்று காலை துங்கபத்ரா நதியில் நீந்திக் கொண்டிருந்தபோது நண்பர்களுடன் விடுமுறைக்குச் சென்றிருந்த தெலுங்கானாவில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையின் பெண் டாக்டர் நீரில் மூழ்கி உயிரிழந்ததாக போலீசார் தெரிவித்தனர்.
தெலுங்கானா மாநிலம் ஐதராபாத்தை அடுத்த நம்பள்ளியை சேர்ந்தவர் அனன்யா ராவ் (வயது 26). இவர் அங்குள்ள வி.கே.சி. மருத்துவமனையில் டாக்டராக பணியாற்றி வந்தார். நேற்று முன்தினம் தெலுங்கானாவில் இருந்து தனது நண்பர்களுடன் கர்நாடக மாநிலம் கொப்பலில் உள்ள சுற்றுலா தலங்களை பார்வையிட வந்திருந்தார்.
அப்போது அவர் தங்கியிருந்த சொகுசு விடுதி அருகே துங்கபத்ரா ஆறு பாய்ந்து ஓடுகிறது. அந்த ஆற்றில் குளிக்க வேண்டும் என்று அனன்யா விரும்பினார். மேலும் நண்பர்களையும் அழைத்தார். அதற்கு நண்பர்கள் ஒப்புக்கொண்டதும், அனைவரும் சேர்ந்து ஆற்றில் குளித்து கொண்டிருந்தனர்.
அப்போது அனன்யா அங்கிருந்த 20 அடி உயர பாறையில் இருந்து ஆற்றில் குதித்துள்ளார். அதன் பின்னர் அனன்யா வெளியே வரவில்லை. அதாவது ஆற்றில் குதித்தவர் நீரில் அடித்து செல்லப்பட்டதாக கூறப்படுகிறது.
இதை பார்த்துக்கொண்டிருந்த நண்பர்கள் அனன்யாவை தேடினர். ஆனால் அனன்யா கிடைக்கவில்லை. இதையடுத்து அவர்கள் கங்காவதி புறநகர் போலீசாருக்கு தகவல் அளித்தனர். விரைந்து வந்த போலீசார், தீயணைப்பு படையினர் உதவியுடன் அனன்யாவின் உடலை தேடினர். ஆனால் அவரது உடல் கிடைக்கவில்லை.
அவரது உடல் பாறை இடுக்குகளில் சிக்கி இருக்கலாம் என்று கூறப்படுகிறது. தண்ணீர் வரத்து அதிகமாக இருப்பதால் மீட்பு குழுவினரால் பாறை இடுக்குகளுக்குள் செல்ல முடியவில்லை. இருப்பினும் போலீசார், தீயணைப்பு படையினர் டாக்டர் அனன்யாவின் உடலை தேடும் பணியில் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். இதுகுறித்து கங்காவதி புறநகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
இந்த சம்பவம் தொடர்பாக போலீஸ் அதிகாரி ஒருவர் கூறுகையில், "போலீசார், தீயணைப்புத் துறை மற்றும் உள்ளூர் நீச்சல் வீரர்கள் அடங்கிய கூட்டுக் குழு தேடுதல் பணியில் ஈடுபட்டுள்ளது. தொடர்ந்து தேடுதல் பணி நடைபெற்று வரும் நிலையில், அவர் உயிருடன் இருக்கிறாரா இல்லையா என்பதை உறுதிப்படுத்த முடியவில்லை. ஐதராபாத்தைச் சேர்ந்த மூவரும் துங்கபத்ரா நதிக்கரையில் ஒரு பொழுதுபோக்குப் பயணத்திற்காக வந்திருந்தனர். அவர்களில் ஒருவர் பாறையிலிருந்து குதித்த பிறகு பலத்த நீரோட்டத்தில் அடித்துச் செல்லப்பட்டார்" என்று அவர் கூறினார்.