ARTICLE AD BOX
திவால் நிலைக்கு செல்கிறதா கர்நாடகா அரசு? – பாஜக பரபரப்பு குற்றச்சாட்டு..
பெங்களூரு: கர்நாடகா அரசு கூடிய விரைவில் திவால் ஆகிவிடும் என எதிர்க்கட்சியான பாரதிய ஜனதா குற்றம் சாட்டியுள்ளது. கர்நாடகாவில் காங்கிரஸ் கட்சியை சேர்ந்த முதலமைச்சர் சித்தராமையா தலைமையிலான அரசு ஆட்சி நடத்தி வருகிறது.
சித்தராமையா அரசு தேர்தலுக்கு முன்பாக பல்வேறு இலவசங்கள் குறித்த அறிவிப்பை வெளியிட்டது. இந்த சூழலில் இலவசங்கள் தொடர்பான தங்களுடைய தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றுவதில் அரசு கவனம் செலுத்துவதாகவும் இதன் காரணமாக மாநிலத்தின் நிதி நிலைமை மோசமடைந்திருப்பதாகவும் கர்நாடக மாநிலத்திற்கான பாரதிய ஜனதா கட்சி தலைவர் விஜயேந்திரா குற்றம் சாட்டியிருக்கிறார். கூடிய விரைவில் கர்நாடக மாநிலம் திவால் நிலைக்கு செல்லும் சூழலில் இருப்பதாக அவர் கூறியுள்ளார்.

சித்தராமையா தலைமையிலான அரசு கடன்களை திரும்ப செலுத்த முடியாமல் தவித்து வருகிறது என பிடிஐ செய்தி நிறுவனத்திற்கு அளித்துள்ள பேட்டியில் அவர் குறிப்பிட்டுள்ளார். போக்குவரத்து மற்றும் எரிசக்தி துறைகள் கடன்களை திரும்ப செலுத்த முடியாமல் நிதி சிக்கலில் தவிப்பதாக சுட்டிக்காட்டியுள்ளார்.
கர்நாடக மாநில அரசு பேருந்துகளில் பெண்களுக்கு டிக்கெட் இல்லாத இலவச பயணம், அனைத்து வீடுகளுக்கும் 200 யூனிட்டுகள் வரையிலான மின்சார பயன்பாட்டுக்கு கட்டணம் கிடையாது ,வறுமை கோட்டிற்கு கீழ் உள்ள குடும்பங்களை சேர்ந்த பெண்களுக்கு 2000 ரூபாய் உதவி தொகை என சித்தராமையா தன்னுடைய தேர்தல் வாக்குறுதியாக கொடுத்திருந்தார். வறுமை கோட்டுக்கு கீழ் உள்ள குடும்பங்களுக்கு குடும்பங்களுக்கு 10 கிலோ அரிசி இலவசம், பட்டப்படிப்பு முடித்து வேலையில்லாமல் இருக்கும் இளைஞர்களுக்கு 3 ஆயிரம் ரூபாய் உதவி தொகை வழங்கப்படும் என்பன உள்ளிட்ட வாக்குறுதிகளையும் அளித்திருந்தார்.
இந்த திட்டங்களை செயல்படுத்துவதற்காக கர்நாடக மாநில அரசுக்கு பெரிய அளவில் விதி தேவைப்படுவதாகவும் இதனால் அரசால் கடன்களை செலுத்த முடியாமல் தவித்து வருவதாகவும் மாநில பாஜக தலைவர் குற்றம் சாட்டுகிறார். வரும் மார்ச் 7ஆம் தேதி கர்நாடக மாநில அரசு தன்னுடைய பட்ஜெட்டை தாக்கல் செய்ய இருக்கிறது. இதனை அடுத்து கர்நாடக மாநில அரசுக்கு கடிதம் எழுதி இருக்கும் பாஜக மாநில தலைவர் விஜயேந்திரா ஊழியர்களுக்கு சம்பளம் வழங்க முடியாமல் அரசு தவித்து வருவதாக கூறியுள்ளார்.
போக்குவரத்து துறையில் ஏற்கனவே 7000 கோடி ரூபாய் கடன் இருப்பதாகவும் அந்த கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார். மாநிலத்தில் செயல்பட்டு வரக்கூடிய மின்விநியோகம் நிறுவனங்கள் அனைத்துமே மிகப்பெரிய நிதி சுமையை எதிர் கொண்டிருப்பதாக சுட்டிக் காட்டியுள்ளார்.
கர்நாடக மாநில அரசு பட்டியலின மக்களுக்காக ஒதுக்கீடு செய்யப்பட்ட 25 ஆயிரம் கோடி ரூபாயை வேறு திட்ட பணிகளுக்கு பயன்படுத்துவதாக குற்றம் சாட்டியுள்ளார். மாநிலத்தில் உள்கட்டமைப்பு திட்டங்கள் எதையும் அரசு கொண்டுவரவில்லை, சட்டம் ஒழுங்கு பிரச்சனைகள் அதிகரித்துள்ளன, குழந்தைகள் மற்றும் பெண்களுக்கான பாதுகாப்பு குறைந்து வருகிறது என அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகளை வைத்துள்ளார்.
Story written: Devika