ARTICLE AD BOX
Published : 09 Mar 2025 10:38 PM
Last Updated : 09 Mar 2025 10:38 PM
திரைப் பார்வை: நிறம் மாறும் உலகில் | தேசிய விருதுக்குத் தகுதியானவரா பாரதிராஜா?

ஒரே கருத்தாக்கத்தில் எழுதப்பட்ட ஐந்து கதைகள், அந்த ஐந்து கதைகளிலும் வரும் கதாபாத்திரங்களில் ஒன்றோ இரண்டோ மற்ற கதைகளின் ஊடாக ஒரு காட்சியில் கடந்து செல்வது என ஏதாவது ஒரு தொடர்பைக் கதைகளுக்கு இடையில் உருவாக்குவதே ஆந்தாலாஜி கதை சொல்லும் உத்தி. இவ்வகை எல்லாக் காலத்திலும் ரசிக்கப்படுவதற்குப் பல கதைகளின் தொகுப்பும் ஒவ்வொரு கதையும் அழுத்தமாக அமைக்கப்படுவதும் காரணம் எனலாம். இந்தப் படத்தின் எழுத்தாளர், இயக்குநர் பிரிட்டோ ஜே.பி., முதல் கதையின் முக்கிய கதாபாத்திரத்துக்கு ஒரு ரயில்வே டிக்கெட் பரிசோதகர் மற்ற நான்கு கதைகளைச் சொல்வதுடன் தன்னுடைய சொந்தக் கதையை வாய்மொழியாக இத்தொகுப்பின் 6வது கதையாகச் சொல்லிச் செல்கிறார். அந்த டிக்கெட் பரிசோதகராக வருபவர் வேறு யாருமல்ல; இன்று கோடம்பாக்கத்தின் ஆபத்பாந்தவனாக வலம் வரும் ஆல் இன் ஆல் யோகிபாபுதான்! இதில் அவரது பெயர் நா.முத்துகுமார்!
கல்லூரி நண்பர்களைத் தன்னுடைய பிறந்த நாள் கொண்டாட்டத்துக்கு வீட்டுக்கு அழைக்கிறார் லவ்லின். அப்போது, லவ்லினுடைய சக வகுப்புத் தோழன் அவள் கைகள் இரண்டையும் இருகப்பற்றிக்கொண்டு வாழ்த்து தெரிவிப்பதைத் தவறாக எடுத்துக்கொள்ளும் அவளது அம்மா, மகளின் நண்பர்கள் வீட்டில் இருக்கும்போதே லவ்லின் கன்னத்தில் ஓங்கி அறைந்து கண்டிக்கிறார். அதில் மனமுடையும் லவ்லின் பிறந்த நாள் அன்றே தனது துணிகளை எடுத்துக்கொண்டு தோழி வீட்டுக்கு ரயிலில் கிளம்புகிறாள். அந்த ரயில் டிக்கெட் பரிசோதகராக வரும் யோகிபாபு, லவ்லீனுக்கு ஒரு தேநீர் வாங்கிக்கொடுத்து அவருக்குத் தான் சந்தித்த 4 மனிதர்களின் கதைகளைச் சொல்கிறார். கதைகளைக் கேட்டு முடித்தபிறகு லவ்லின் கோபம் குறைந்து வீட்டுக்குத் திரும்பினாரா என்பது முடிவு. இதில் லவ்லினின் அம்மாவாக அவரது நிஜ அம்மாவான விஜி சந்திரசேகரே நடித்திருக்கிறார்.

இயக்குநர் தேர்வு செய்த நான்கு கதைகளும் நான்கு ஊர்களில் நடக்கின்றன. சென்னையில் ஒரு கதை, ராமேஸ்வரம் மீனவ கிராமத்தில் ஒரு கதை, திருச்சி புறநகரில் நடக்கும் ஒரு கதை, மும்பையில் நடக்கும் ஒரு கதை என வெவ்வேறு ஊர்களை உண்மையாகவே காட்சிமொழிக்குள் கொண்டுவந்திருக்கும் படக்குழுவின் உழைப்பு வியக்க வைக்கிறது.
பிற்படுத்தப்பட்ட வகுப்பாக இருந்தாலும் வெவ்வேறு சாதிகளைக் கூட ஏற்றுக்கொள்ளாத கிராமியச் சமூகத்தின் முகத்திரையைக் கிழிக்கிறது முதல் கதை. தாயின் பாசத்துக்காக ஏங்கித் தவிக்கும் ஒருவன், பாலியல் விடுதியில் பிறந்து வளர்ந்து, தமிழ்நாட்டிலிருந்து அங்கே வந்து சேரும் ஒரு வாய் பேச முடியாத பெண்ணிடம் தாயின் அன்பைக் காணும் கதை. அதில் அப்துல் மாலிக் ஆக நட்டி நடராஜும் ஊரைவிட்டு ஓடிவரும் காதலர்களாக வருபவர்களில் வாய்பேச முடியாத மலராக வரும் காவ்யாவும் நடிப்பில் அட்டகாசம் செய்திருக்கிறார்கள்.

இரண்டாம் கதையில் விவசாயக் கிராமத்தில் உறவுகள் யாருமற்ற நிலையில் ஒருவரை ஒருவர் அடையாளம் கண்டு வாழ்வில் ஒன்று சேரும் ராயப்பனும் குழந்தையும் ஆசை ஆசையாக இரண்டு மகன்களைப் பெற்றுப் படிக்க வைத்து ஆளாக்குகிறார்கள். ஆனால், அவர்களுடைய முதுமை மிகக் கொடுங் கனவாக மாறிவிடுகிறது. திருமணம் என்பது உறவுகளை வாழ்விக்கும் ஒன்று என்பதிலிருந்து உறவுகளைக் கொல்லும் ஒன்றாக இருக்கும் அவலத்தைப் படம் பிடித்துக்காட்டும் இக்கதையில் பாரதிராஜாவும் வடிவுக்கரசியும் முதிய பெற்றோர்களாக நம் கண்ணீரைப் பெருக்குகிறார்கள். பாரதிராஜா, ‘பாண்டிய நாடு’, ‘பொம்மை’ தொடங்கி சமீபத்தில் வெளியான ‘திரு.மாணிக்கம்’ வரையில் இத்தனை முதுமையில் கிடைக்கும் கதாபாத்திரங்களை வாழ்ந்து தீர்ப்பதில் அசரடித்து வருகிறார். ‘இந்தப் படத்தில் ‘ராயப்பன்’ ஆக வாழ்ந்திருக்கும் அவருக்குத் தேசிய விருது கொடுக்கப்பட்டால் அது தகும்.
மீனவ கிராமத்தில் நடக்கும் மூன்றாம் கதையில், தந்தையை இழந்து தாயின் கடும் உழைப்பில் பள்ளியில் பயிலும் அதியன், ஆபத்தான கடல் வாழ்க்கையிலிருந்து விலகி இந்திய ஆட்சிப்பணி அதிகாரியாக உயர வேண்டும் என்கிற கனவைச் சுமந்திருப்பவன். அந்தக் கனவை அடையமுடியாதபடி குற்றவுலகம் அவனை இழுக்கிறது. அவன் எந்தப் பாதையைத் தெரிவு செய்தான், அவனது தெரிவுக்கான காரணம் என்ன என்பதை ஒரு தாயின் மரணம் போராட்டம் வழியாக நமக்கு வலியை ஏற்படுத்தும் வண்ணம் கடத்தியிருக்கிறார் இயக்குநர். இக்கதையில் அதியனாக வரும் ரியோ ராஜ் நடிப்பில் செம்மையாகச் சொதப்பியிருக்கிறார்.
சென்னையில் நடக்கும் நான்காவது கதையில் யாருமற்ற ஒரு ஆட்டோ ஒட்டுநருக்கும் மகன் இருந்தும் யாருமற்ற நிலைக்குத் தள்ளப்படும் ஒரு தாய்க்குமான பாசப் பிணைப்பையும் அதனால் ஆட்டோ ஓட்டுநர் இழந்தது என்ன என்பதையும் விவரிக்கும் கதை. இன்றைய தலைமுறைப் பெண்களில் பலர், தாம் திருமணம் செய்துகொள்ளும் ஆணுக்கு அம்மா - அப்பா இருக்கக் கூடாது, அப்படியிருந்தால் பிக்கல் -பிடுங்கல் என நினைக்கும் சுயநல மனப்பாங்கைக் கிழித்துத் தொங்கவிட்டிருக்கிறார்கள். இக்கதையில் சாண்டியின் நடிப்பு சில காட்சிகளில் நன்றாக இருந்தாலும் பல காட்சிகளில் அவர் செய்யும் சேட்டை எடுபடவில்லை. அந்தக் குறையை அவருக்கு அம்மாவாகக் கிடைக்கும் துளசி ஈடு செய்துவிடுகிறார்.
நான்கு கதைகளின் வழியாக மனித உறவுகளின் மேன்மை, சிறுமை, முரண்கள் என ஆழமாக பாடம் நடத்தாமல் படம் பிடித்துக் காட்டியிருக்கும் இயக்குநர் பிரிட்டோ ஜே.பி.க்கு நல்வரவு கூறலாம்.
ஆந்தலாஜி முயற்சியை முழுமையடையச் செய்யும் விதமாக மல்லிகா அர்ஜுன், மணிகண்ட ராஜா ஆகிய இருவரின் ஒளிப்பதிவும் தமிழரசனின் படத்தொகுப்பும் சிறப்பான பங்கை ஆற்றியிருக்கின்றன.
நிறம் மாறும் உலகில் - குடும்பமாகப் பார்த்துக் கொண்டாட வேண்டிய ஆந்தாலஜி
Follow
FOLLOW US
அன்பு வாசகர்களே....
இந்த ஊரடங்கு காலத்தில் வீட்டை விட்டு வெளியே வராமல் நமக்கு நாமே சமூக விலகல் ( Social Distancing) செய்து கொள்வோம். செய்தி ஊடகங்களின் வழியே உலகுடன் தொடர்பில் இருப்போம். பொதுவெளியில் இருந்து தனிமைப்படுத்திக் கொண்டு கரோனா பரவலைத் தடுப்பதில் நம் பங்கை முழுமையாக இந்த சமூகத்துக்கு அளிப்போம்.
CoVid-19 கரோனா தடுப்பு / விழிப்புணர்வு கையேடு - இலவசமாக டவுன்லோடு செய்து பயன்பெறுங்கள்!
- வாசகர்கள் நலனில் அக்கறையுடன் இந்து தமிழ் திசை