திருவேற்காடு கோலடி பகுதியில் மலைபோல் கொட்டப்படும் குப்பை உடனே அகற்ற அமைச்சர் நடவடிக்கை

17 hours ago
ARTICLE AD BOX

பூந்தமல்லி: திருவேற்காடு கோலடி பகுதியில் கொட்டப்படும் குப்பைகளை அகற்ற அமைச்சர் நாசர் அறிவுரை வழங்கியதையடுத்து உடனே நடவடிக்கை எடுக்கப்பட்டது. திருவேற்காடு நகராட்சியில் தினமும் 25 மெட்ரிக் டன் அளவுக்கு குப்பைகள் சேகரிக்கப்படுகின்றன. இந்த குப்பைகளை மக்கும் குப்பை, மக்காத குப்பை என்று தரம் பிரிக்கப்பட்டு மக்கும் குப்பை இயற்கையான முறையில் உரமாக்கப்படுகிறது. மக்காத குப்பை மறுசுழற்சிக்கு அனுப்பப்படுகிறது. ஆனால் மிக குறைந்த அளவில் மக்கும் குப்பைகள் பிரிக்கப்பட்டு உரமாக்கப்படுகிறது.

பிரிக்க முடியாத குப்பைகள் 3வது வார்டு கோலடியில் இருந்து பருத்திப்பட்டு செல்லும் பிரதான சாலையோரம் உள்ள எரிவாயு தகன மேடை அருகே மலைபோல் கொட்டப்படுகிறது. இந்த இடத்தில் உள்ள உயர் அழுத்த மின்சார கம்பிகளை தொடும் அளவிற்கு தற்போது குப்பைகள் கொட்டப்பட்டுள்ளது. இப்படி கொட்டப்பட்டு வரும் குப்பையால் அந்தப் பகுதி முழுவதும் துர்நாற்றம் வீசுகிறது. இதனால் அந்த வழியாகச் செல்லும் வாகன ஓட்டிகள் மூக்கை பிடித்துக்கொண்டு கடந்து செல்கின்றனர்.

இவ்வாறு குப்பை கொட்டப்படுவதால் அந்தப் பகுதியில் உள்ள நிலத்தடி நீரும் மாசுபடுகிறது. மேலும் சுற்றுப்புற சூழலுக்கும் பாதிப்பு ஏற்பட்டு சுகாதாரக் கேடு ஏற்பட்டுள்ளது. குப்பைமேடு பகுதி வழியாக வீசும் காற்றில் மிகுந்த துர்நாற்றம் வீசுகிறது. தொடர்ந்து குப்பைகள் கொட்டுப்பட்டு வருவதால் அந்த பகுதியில் தொற்றுநோய் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது. மேலும் இந்த குப்பை கழிவுகளில் உள்ள உணவுப் பொருட்களை தின்பதற்காக பறவைகள் மற்றும் நாய், பன்றி, மாடுகள் போன்ற கால்நடைகள் சுற்றி திரிகின்றன. இதன் மூலமும் தொற்றுநோய் பரவும் நிலை ஏற்பட்டுள்ளது.

இதுகுறித்து அப்பகுதியைச் சேர்ந்த பொதுமக்கள் திருவேற்காடு நகராட்சி அதிகாரிகளிடம் பலமுறை புகார் கொடுத்தும் அவர்கள் அலட்சியப்படுத்தி வருகின்றனர். இந்நிலையில் இதுகுறித்து அமைச்சர் சா.மு.நாசரிடம் அப்பகுதி மக்கள் புகார் தெரிவித்தனர். அதன்பேரில் கோலடி பகுதியில் உள்ள இந்த குப்பை கிடைக்கினை அமைச்சர் நாசர் நேற்று பிற்பகல் ஆய்வு செய்தார். குப்பைகளை அகற்றுவது குறித்து நகர்மன்ற தலைவர் என்.இ.கே. மூர்த்தி மற்றும் நகராட்சி அதிகாரிகளுடன் அமைச்சர் ஆலோசனை செய்தார்.‌

அப்போது, அந்த குப்பைகளை கிடங்கில் இருந்து உடனடியாக அகற்றுவதற்குரிய நடவடிக்கைகள் எடுப்பது குறித்து அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினார். இதையடுத்து இந்த குப்பை கிடங்கில் உள்ள 3 ஆயிரம் டன் குப்பைகளை சென்னையை அடுத்த மறைமலைநகரில் உள்ள தனியார் நிறுவனத்திற்கு லாரிகள் மூலம் கொண்டுசெல்ல நடவடிக்கை எடுக்கப்பட்டது.

அங்கு வைத்து மக்கும் குப்பை, மக்கா குப்பை என குப்பைகள் தரம் பிரிக்கப்படும். இதன் பிறகு மக்கும் குப்பையை உரமாகவும், மக்காத குப்பையை மறுசுழற்சிக்காக திருச்சியில் உள்ள பிரபல சிமெண்ட் தொழிற்சாலைக்கு லாரிகளில் அனுப்பி வைக்கவும் முடிவு செய்யப்பட்டது. இந்த ஆய்வின்போது நகராட்சி ஆணையர் தட்சிணாமூர்த்தி மற்றும் நகராட்சி அதிகாரிகள், திமுக நிர்வாகிகள் உடன் இருந்தனர்.

The post திருவேற்காடு கோலடி பகுதியில் மலைபோல் கொட்டப்படும் குப்பை உடனே அகற்ற அமைச்சர் நடவடிக்கை appeared first on Dinakaran.

Read Entire Article