ARTICLE AD BOX
செய்தியாளர்: C.விஜயகுமார்
திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி அருகே உள்ள கூத்தாநல்லூர் நகராட்சிக்கு உட்பட்ட மரக்கடை பகுதியில் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி இயங்கி வருகிறது. இந்தப் பள்ளியில் சுற்றுப்புற கிராமங்களைச் சேர்ந்த 200க்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் பயின்று வருகின்றனர். இந்நிலையில், இந்தப் பள்ளியில் 5 ஆம் வகுப்பில் படிக்கும் விகாஸ் மற்றும் கோபிநாத் ஆகிய இருவரும் நேற்று வழக்கம்போல் பள்ளி முடிந்து வீட்டிற்குச் சென்று கொண்டிருந்தனர்
அப்போது அவர்கள் செல்லும் வழியில் சின்ன கூத்தாநல்லூர் கீழப் பாலம் அருகே ஆண்ட்ராய்டு போன் ஒன்று கீழே கிடந்துள்ளது. இதனை கவனித்த மாணவர்கள் இருவரும், அந்த போனை எடுத்து அருகில் உள்ள கூத்தாநல்லூர் காவல் நிலைய காவல் ஆய்வாளர் செல்வி வெர்ஜினியாவிடம் நடந்ததை தெரிவித்து ஒப்படைத்துள்ளனர். இதனையடுத்து மாணவர்களுக்கு காவல் நிலையம் சார்பில் பாராட்டு தெரிவிக்கப்பட்டது.
இதையடுத்து சிறு வயதில் நேர்மையுடன் கீழே கிடந்த ஆண்ட்ராய்டு போனை காவல் நிலையத்தில் ஒப்படைத்த மாணவர்களை, பள்ளியில் நடந்த வழிபாட்டு கூடத்திற்கு சென்ற கூத்தாநல்லூர் காவல் நிலைய ஆய்வாளர் செல்வி வெரிஜினியா ஸ்கூல் பேக் மற்றும் வாட்டர் பாட்டில் வழங்கி பாராட்டினார்.
இது குறித்து பள்ளி தலைமை ஆசிரியை ராதா கூறுகையில்....
எங்களது பள்ளி நூறாண்டுகளை கடந்த பள்ளி. இதில் கல்வியுடன் மாணவ மாணவிகளுக்கு நல்லொழுக்கத்தையும் போதித்து வருகிறோம். அதே நேரம் கீழே கிடந்த அழகிய செல்போனை எடுத்து காவல் நிலையத்திற்கு சென்று அங்குள்ள உயர் அதிகாரிகளிடம் செல்போனை வழங்கியது பாராட்டுக்குரியது. இந்த மாணவர்கள் எங்கள் பள்ளிக்கு பெருமை சேர்த்தது போன்று வரும் காலத்தில் உயர் பதவிகளை அவர்கள் அடைய வேண்டும் என்றும் கூறினார்.