திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் நாளை மகா சிவராத்திரி விழா

3 hours ago
ARTICLE AD BOX

திருவண்ணாமலை,

திருவண்ணாமலையில் உலக பிரசித்தி பெற்ற அருணாசலேஸ்வரர் கோவில் உள்ளது. இக்கோவில் மகா சிவராத்திரி உருவான திருத்தலம் என்ற தனிச் சிறப்பும் பெற்றது. அதாவது திருமாலும், பிரம்மாவும் சிவபெருமானின் அடி, முடி காணாமல் திகைத்த போது அவர் லிங்கோத்பவ மூர்த்தியாக அருள்பாலித்த திருநாளே மகா சிவராத்திரி என்று புராண கதைகள் கூறுகிறது.

இதனை உணர்த்தும் வகையில் இக்கோவிலில் சுவாமி கருவறைக்கு பின்புறம் லிங்கோத்பவர் திருவுருவம் அமையப் பெற்றுள்ளது. இந்த ஆண்டிற்கான மகா சிவராத்திரி விழா நாளை (புதன்கிழமை) நடைபெற உள்ளது. நாளை காலை 6 மணி முதல் மதியம் 1 மணி வரை சாமி சன்னதியில் லட்சார்ச்சனை நடைபெற உள்ளது. மேலும் கோவிலில் இரவு 4 கால பூஜை நடைபெறும்.

மேலும் நள்ளிரவு 12 மணி அளவில் சுவாமி கருவறைக்கு பின்புறம் உள்ள லிங்கோத்பவருக்கு சிறப்பு அபிஷேக, ஆராதனைகள் நடைபெற உள்ளது. மகா சிவராத்திரியை முன்னிட்டு கோவில் வளாகத்தில் இசை கச்சேரி, பரத நாட்டியம், கோவில் ராஜகோபுரம் முன்பாக நாதஸ்வர நிகழ்ச்சி என பல்வேறு கலை நிகழ்ச்சிகள் இரவு தொடங்கி மறுநாள் அதிகாலை வரை விடிய, விடிய நடைபெறும்.

அதேபோல் அருணாசலேஸ்வரர் கோவில் நிர்வாகம் சார்பில் ஈசான்ய மைதானத்தில் மாலை 5 மணி முதல் மறுநாள் விடியற்காலை 6 மணி வரை மங்கள இசை, திருமுறை விண்ணப்பம், கயிலாய வாத்தியம், கர்நாடக இசை, வள்ளி கும்மியாட்டம், கிராமிய நிகழ்வுகள், பக்தி இசை, நாட்டிய நாடகம், இசை சங்கமம் என பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெற உள்ளது.

மகா சிவராத்திரியை முன்னிட்டு திருவண்ணாமலைக்கு தமிழகம் மட்டுமின்றி வெளி மாநிலங்கள், வெளி நாடுகளை சேர்ந்த பக்தர்கள் வருகை தந்து இரவு முழுவதும் கண்விழித்து வழிபாடு நடத்துவார்கள். பலர் கிரிவலம் செல்வார்கள். மகா சிவராத்திரி விழாவிற்கான முன்னேற்பாடு பணிகளை மாவட்ட நிர்வாகத்தினர் செய்து வருகின்றனர்.


Read Entire Article