ARTICLE AD BOX
திருமலை: திருமலையில் அடர்ந்த வனப்பகுதியில் உள்ள குமாரதாரா தீர்த்தத்தில் பாதயாத்திரையாக சென்று பக்தர்கள் புனித நீராடினர். திருப்பதி ஏழுமலையான் கோயிலின் மேற்கு திசையில் உள்ள குமாரதார தீர்த்தத்தில் முக்கோட்டி உற்சவம் நேற்று நடந்தது. இதையொட்டி, குமாரதாரா தீர்த்தம் செல்ல வந்த பக்தர்களுக்கு பாபவிநாசம் அணை அருகே பால், சாம்பார் சாதம், மோர் சாதம், புளியோதரை, உப்புமா உள்ளிட்டவற்றை தேவஸ்தானம் வழங்கியது.
குமாரதாரா தீர்த்தத்தில் தரிசிப்பதும் இயற்கை எழில் சூழ்ந்த நிலையில் நீராடுவதும் சிறப்புமிக்க அனுபவமாக அமைந்ததாக பக்தர்கள் தெரிவித்தனர்.
வராக, மார்க்கண்டேய புராணங்களின்படி, சேஷாசல மலையில் ஒரு வயதான பிராமணர் தனியாக சுற்றி வந்துள்ளார். அப்போது சீனிவாச பெருமாள் தோன்றி, ‘இந்த வயதில், காது கேட்காது, கண்ணால் பார்க்க முடியாது காட்டில் என்ன செய்கிறீர்கள்’ என கேட்டார். அதற்கு யாகங்கள் செய்து பாவ கடனை அடைக்க நினைப்பதாக முதியவர் பதிலளித்தார். பின்னர் சுவாமியின் ஆலோசனைப்படி முதியவர் குமாரதாரா தீர்த்தத்தில் நீராடிய பின்னர் 19 வயது இளைஞராக மாறினார். முதுமையிலிருந்து இளமைக்கு மாறியதால் இத்தீர்த்தத்திற்கு `குமார தாரா’ என பெயர் வந்ததாக கூறப்படுகிறது.
பத்ம மற்றும் வாமன புராணங்களின்படி, தேவலோகம் சேனாபதி குமாரசுவாமி, தாரகாசுரன் என்ற அரக்கனை கொன்று சாபத்தைப் போக்க முயன்றார். இதற்காக சிவன் அறிவுறுத்தியபடி, சேஷாசல மலையில் உள்ள விருஷத்ரியில் தவம் செய்து இந்தத் தீர்த்தத்தில் நீராடியதால் சாப விமோசனம் பெற்றதாகவும் குமார சுவாமி நீராடியதால் இந்தத் தீர்த்தத்திற்கு ‘குமாரதாரா’ என பெயர் ஏற்பட்டதாகவும் கூறப்படுகிறது. இந்த குமாரதாரா தீர்த்தத்தில் பாதயாத்திரையாக சென்று பக்தர்கள் நேற்று புனித நீராடினர்.
18 மணிநேரம் காத்திருப்பு;
திருப்பதி ஏழுமலையான் கோயிலில் நேற்று 63,987 பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர். 26,880 பேர் தலைமுடி காணிக்கை செலுத்தினர். பக்தர்கள் செலுத்திய உண்டியல் காணிக்கை நேற்றிரவு எண்ணப்பட்டது. இதில் ₹2.88 கோடி காணிக்கை கிடைத்தது. இன்று காலை நிலவரப்படி 18 மணிநேரம் காத்திருந்து பக்தர்கள் தரிசித்தனர். ₹300 டிக்கெட் பெற்ற பக்தர்கள் சுமார் 2 மணிநேரம் காத்திருந்து தரிசித்தனர்.
The post திருமலையில் பாதயாத்திரையாக சென்று அடர்ந்த வனப்பகுதியில் புனித நீராடிய பக்தர்கள் appeared first on Dinakaran.