ARTICLE AD BOX
திருவள்ளூர் மாவட்டம், திருத்தணியை அடுத்த கனகம்மாசத்திரம் அருகே உள்ள முத்துக்கொண்டாபுரம் கிராமத்தைச் சேர்ந்தவர் முன்னாள் ராணுவ வீரரான வெங்கடேசன். இவரின் மனைவி சந்தியா. இந்தத் தம்பதியினருக்கு 9 -வயதில் மகளும் 7- வயதில் மகனும் உளளனர். இந்தநிலையில் வெங்கடேசன், ராணுவ சர்வீஸை முடித்துவிட்டு சொந்த ஊரில் ரியல் எஸ்டேட் தொழில் செய்து வருகிறார். சந்தியாவுக்கும் வெங்கடேசனுக்கும் கருத்துவேறுபாடு ஏற்பட்டு இருவரும் பிரிந்து வாழ்கின்றனர். அது தொடர்பாக திருவள்ளூர் நீதிமன்றத்தில் சந்தியா வழக்கு தொடர்நதார். அந்த வழக்கு விசாரணைக்கு ஆஜராக பைக்கில் வெங்கடேசன் கடந்த சில தினங்களுக்கு முன்பு சென்றார். அப்போது நடந்த விபத்தில் வெங்கடேசன் உயிரிழந்தார். அதுதொடர்பாக திருவாலங்காடு போலீஸார் வழக்குப்பதிவு செய்து விசாரித்தனர். பிரேத பரிசோதனை ரிப்போர்ட்டில் விபத்தில் சிக்கி வெங்கடேசன் உயிரிழக்கவில்லை. அவர் கொலை செய்யப்பட்டிருக்கிறார் என்ற அதிர்ச்சி தகவல் வெளியானது.
இதையடுத்து தனிப்படைகள் அமைக்கப்பட்டு கொலையாளிகளை போலீஸார் தேடிவந்தனர். இந்தச் சமயத்தில்தான் சென்னை போலீஸார், ஒரு குற்றவழக்கில் திருத்தணி அருகே உள்ள தோமூர் கிராமத்தைச் சேர்ந்த கூலிப்படையைச் சேர்ந்த லோகேஷ் அவரின் கூட்டாளிகளை கைது செய்தனர். அப்போது அவர்களிடம் நடத்திய விசாரணையில் முன்னாள் ராணுவ வீரர் வெங்கடேசனை கொலை செய்ததாக வாக்குமூலம் அளித்தனர். இதையடுத்து லோகேஷ் உள்பட அவரின் கூட்டாளிகளை திருவாலங்காடு போலீஸார் கைது செய்தனர்.
தொடர்ந்து நடத்திய விசாரணையில் முன்னாள் ராணுவ வீரரின் மனைவி சந்தியாவுக்கும் லோகேஷுக்கும் பழக்கம் இருப்பது தெரியவந்தது. அதனால் லோகேஷ் மூலம் வெங்கடேசனை கொலை செய்ய சந்தியா தரப்பு திட்டம் போட்டிருக்கிறது. இதையடுத்து இந்த வழக்கில் கூலிப்படையாக செயல்பட்ட சதீஷ், அவரின் தம்பி பிரசாந்த், சென்னையை சேர்ந்த ஸ்ரீராம், யோகேஸ்வரன், மணிகண்டன் ஆகியோரை சில தினங்களுக்கு முன்பு போலீஸார் கைது செய்தனர். அதைத் தொடர்ந்து கணவரைக் கொலை செய்ய கூலிப்படை ஏவிய குற்றத்துக்காக சந்தியாவையும் போலீஸார் கைது செய்தனர்.
இதுகுறித்து திருவாலங்காடு போலீஸாரிடம் பேசினோம். ``முன்னாள் ராணுவ வீரர் வெங்கடேசன் வழக்கை விபத்து போல நாடகமாட இந்த கும்பல் திட்டமிட்டிருக்கிறது. சம்பவத்தன்று பைக்கில் சென்ற வெங்கடேசனை காரில் மோதியிருக்கிறது. ஆனால் காயங்களுடன் வெங்கடேசன் உயிர் தப்பித்துவிட்டார். அதனால் காரிலிருந்து இறங்கிய கூலிப்படையினர் இரும்பு பைப், உருட்டுக்கட்டையால் வெங்கடேசனை அடித்தே கொலை செய்திருக்கிறார்கள். பின்னர் விபத்து போல சம்பவத்தை அவர்கள் சித்தரித்துவிட்டு எஸ்கேப்பாகிவிட்டனர். சம்பவம் நடந்த பகுதியில் சி.சி.டி.வி கேமராக்கள் இல்லை. அதனால் விபத்து என்று கருதிதான் வழக்கை விசாரித்தோம். அப்போதுதான் கொலை என்ற தகவல் பிரேத பரிசோதனை ரிப்போர்ட் மூலம் தெரியவந்தது. வெங்கடேசனுக்கு ரியல் எஸ்டேட் தொழிலில் யாராவது எதிரிகள் இருக்கிறார்களா என்று விசாரித்தோம். ஆனால் வெங்கடேசன் கொலைக்கு சந்தியா, லோகேஷ் நட்பே முக்கிய காரணம் எனத் தெரியவந்திருக்கிறது. இந்த வழக்கில் இன்னும் சிலரைத் தேடிவருகிறோம். அவர்களும் சிக்கினால் முழு விவரம் தெரியவரும்" என்றனர்.