ARTICLE AD BOX
திருத்தணி:தமிழ்நாட்டில், குற்ற சம்பவங்கள் தடுத்தல், புகார் மீது உடனடி நடவடிக்கை உள்ளிட்ட திறன் அடிப்படையாக கொண்டு முதல் மூன்று காவல் நிலையங்கள் தேர்வு செய்யப்பட்டன. அப்பட்டியலில் திருத்தணி காவல் நிலையம் 3ம் இடம் பிடித்தது. இதனையடுத்து, கடந்த குடியரசு தினத்தன்று முதல்வரால் சிறந்த காவல் நிலையமாக திருத்தணி காவல் நிலையத்திற்கு முதலமைச்சர் கோப்பை பெறப்பட்டது.
திருத்தணி காவல் நிலையத்திற்குட்பட்டு 50க்கும் மேற்பட்ட கிராமங்கள் உள்ளன. குறிப்பாக, திருத்தணி நகர் மற்றும் புறநகர் பகுதிகளில் தினமும் ஏராளமான குற்ற சம்பவங்கள் நடைபெறுகின்றன. மேலும் விபத்து, சட்டம் ஒழுங்கு பிரச்னை அதிகளவில் நடைபெற்று வருகிறது. கிராம பகுதிகளில் நடைபெறும் குற்ற செயல்கள் மற்றும் சமூக விரோத செயல்கள் தொடர்பாக எளிதில் காவல் நிலையத்தை தொடர்பு கொள்ள ஏதுவாக திருத்தணி காவல் நிலையத்தின் சார்பாக 9498100332 என்ற செல்போன் நம்பர் வழங்கப்பட்டது.
இந்த செல்போன் எண் பெரும்பாலான நேரங்களில் பயன்பாட்டில் இருப்பதில்லை. ரிங்க் போனாலும் போலீசார் எடுத்து பேசுவதில்லை என்று குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இதனால், விபத்துகள் நடக்கும்போது குறிப்பிட்ட இடத்திற்கு செல்வதில் கால தாமதம் ஏற்படுவதோடு குற்றவாளிகள் தப்பிச் செல்ல வாய்ப்பு ஏற்படுகிறது.
சிறந்த காவல் நிலையமாக முதலமைச்சர் கோப்பையை பெற்ற திருத்தணி காவல் நிலைய பெயர் பலகையில், மாவட்ட காவல் கண்காணிப்பாளர், துணை காவல் கண்காணிப்பாளர், காவல் ஆய்வாளர், காவல் நிலைய தொலைபேசி எண்களும் பொதுமக்கள் பார்வைக்கு தெரியும்படி எழுதி வைக்கவில்லை என்றும், காவல் நிலையத்தை அணுகும் புகார்தாரர்கள் குற்றம் சாட்டினர். அனைத்து தரப்பு மக்களும் காவல் நிலையத்தை எளிதில் தொடர்பு கொள்ளும் வகையில் தொலைபேசியை முறையாக பராமரித்து பயன்படுத்த மாவட்ட காவல் கண்காணிப்பாளர் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனர்.
* பழைய செல்போன்
காவல் நிலைய நம்பர் கொண்ட செல்போன் பழைய போன் என்பதால் சிக்னல் முறையாக கிடைப்பதில்லை. ரிங்க் வந்தாலும் கேட்பதில்லை. இதனால், போன் செய்து பேசுவது யார் என்று தெரிந்துகொள்வது கடினமாக உள்ளது என்று அங்குள்ள காவலர் ஒருவர் தெரிவித்தார்.
The post திருத்தணி காவல் நிலையத்தில் செயல்படாத செல்போன் எண்கள் அவசர புகார் அளிப்பது சிக்கல் appeared first on Dinakaran.