திருச்செந்தூர் பக்தர் மரணம் - எடப்பாடி பழனிசாமி குற்றச்சாட்டு!

14 hours ago
ARTICLE AD BOX

திருச்செந்தூர் முருகன் கோயிலில் வரிசையில் காத்திருந்த பக்தர் உயிரிழந்ததற்கு அறநிலையத் துறையே காரணம் என்று எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி குற்றஞ்சாட்டியுள்ளார். 

இதுகுறித்து அவர் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், ” திருச்செந்தூர் அருள்மிகு சுப்ரமணியசுவாமி திருக்கோயிலில் தரிசனம் செய்ய 100 ரூபாய் கட்டண வரிசையில் காத்திருந்த காரைக்குடியைச் சேர்ந்த ஓம்குமார் என்பவர் கூட்ட நெரிசலில் மூச்சுத்திணறி உயிரிழந்ததாக வரும் செய்தி அதிர்ச்சியளிக்கிறது.” என்று குறிப்பிட்டுள்ளார்.  

”கடந்த ஜனவரி மாதம் திருச்செந்தூர் கோயிலுக்கு திமுக அரசின் அறநிலையத் துறை அமைச்சர் சேகர் பாபு சென்றிருந்த போதே, கோயிலில் கட்டண வரிசை உட்பட அனைத்து தரிசன வழிகளிலும் கூட்ட நெரிசல் அதிகம் ஏற்படுவதை மக்கள் முறையிட்ட போது, ’திருப்பதிக்கு போறான், 24 மணி நேரம் நிப்பான்’ என்று பக்தர்களின் உணர்வுகளையும் முறையிடலையும் உதாசீனப்படுத்தி பேசியதோடு அல்லாமல், கூட்ட நெரிசலைத் தவிர்க்க எந்த நடவடிக்கையும் எடுக்காமல் இருந்ததே இன்றைய உயிரிழப்புக்குக் காரணம். எனவே, பக்தர் ஓம்குமாரின் உயிரிழப்புக்கு ஸ்டாலின் மாடல் திமுக அரசும், அறநிலையத் துறை அமைச்சருமே முழுப் பொறுப்பு!” என்று எடப்பாடி பழனிசாமி சாடியுள்ளார். 

”திருப்பணி என்பது பக்தியுடன் செய்யப்பட வேண்டியது. ஆனால், பகல்வேஷம் போடும் இந்த ஸ்டாலின் மாடல் ஆட்சியில் அதுவும் வெறும் விளம்பர நோக்கத்தில் மட்டும்தான் செய்யப்பட்டு வருகின்றன. கோயிலுக்கு வரும் பக்தர்கள் நிம்மதியாக சாமி தரிசனம் செய்யவேண்டும் என்ற எண்ணம். இந்த அரசுக்குத் துளியும் இல்லை. இது கடும் கண்டனத்திற்குரியது.

உயிரிழந்த ஓம்குமாரின் குடும்பத்தாருக்கு உரிய இழப்பீடு வழங்குவதுடன், இனியேனும் இந்த விளம்பர நாடகங்களை எல்லாம் விட்டுவிட்டு, அறநிலையத் துறையை அதற்குரிய அறத்துடன் வழிநடத்த வேண்டுமென ஸ்டாலின் மாடல் திமுக அரசை வலியுறுத்துகிறேன்.” என்றும் எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தியுள்ளார். 

Read Entire Article