ARTICLE AD BOX
உலகப் பிரசித்தி பெற்ற திருச்செந்தூர், சுப்பிரமணிய சுவாமி கோயில் கடற்கரையில் பகுதியில் கடல்வாழ் உயிரினங்கள் உயிரிழந்த நிலையில் கரை ஒதுங்கி வருகிறது. அதில் குறிப்பாக 10 கிலோ முதல் 100 கிலோ எடை கொண்ட மீன் வளத்தைப் பாதுகாக்கக்கூடிய கடல் ஆமைகள் இறந்த நிலையில் கரை ஒதுங்கி வருகிறது. கடந்த 10 நாட்களில் மட்டும் தமிழக கடற்கரையில் பகுதியில் அதிகளவில் காணப்படும் `ஆலிவ் ரேட் லே’ வகையைச் சேர்ந்த 14 ஆமைகள் உயிரிழந்த நிலையில் கரை ஒதுங்கியது.

இந்த நிலையில், ஆமைகள் உயிரிழந்து கரை ஒதுங்கி வருவது குறித்து மீன்வளத் துறையினர் மற்றும் கடல் வாழ் உயிரின ஆராய்ச்சியாளர்கள் பல்வேறு ஆய்வுகளை மேற்கொண்டு வருகின்றனர். திருச்செந்தூர் மட்டுமன்றி தமிழகத்தின் பல கடற்கரைப் பகுதியிலும் ஏராளமான ஆமைகள் உயிரிழந்த நிலையில் கரை ஒதுங்கி வருகின்றன. எனவே மீன்களையும் மீன்வளத்தையும் பாதுகாக்க மிகவும் உறுதுணையாக இருக்கக்கூடிய கடல் ஆமைகளை நாம் பாதுகாக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இதுகுறித்து அண்ணாமலை பல்கலைக்கழகத்தின் விலங்கியல் துறை கௌரவ பேராசிரியர் முனைவர் கதிரேசனிடம் பேசினோம், “சிரியாவில் உள்ள ஐந்து வகை கடல் ஆமைகள் தமிழ்நாட்டில்தான் காணப்படுகிறது. அதில் குறிப்பாக ‘ஆலிவ் ரெட் லே’ என்ற சிற்றாமைகள் அதிகளவில் காணப்படுகிறது. மீன் வளத்தை பாதுகாக்க கூடிய ஆற்றல் ஆமைகளுக்கு உள்ளன.

ஆமைகள் பொதுவாக நவம்பர் மாதம் இறுதியில் இருந்து ஏப்ரல் மாதம் வரை முட்டையிடுவதற்காக கடற்கரையை நோக்கி வருகின்றன. எங்கெல்லாம் மணல் பகுதி தூய்மையாக இருக்கிறதோ, மணல் மிருதுவாகவும் மென்மையாகவும் இருக்கிறதோ அந்த பகுதியை தோண்டி முட்டையிட்டு மணலால் மூடிவிட்டுச் செல்கிறது. ஒரு ’ஆலிவ் ரெட் லே’ ஆமை நூறு முட்டைகள் வரை இடுகின்றது. முட்டைகளை இட்ட பின்பு ஆமைகளுக்கு உடலில் சக்தி குறைந்து பலகீனமாகக் காணப்படும்.
மீண்டும் கடலை நோக்கிச் செல்லும் போது கடலில் பாறைகளின் மீதோ, படகுகளின் மீதோ மோதி காயம் அடைந்து இறப்பதற்கு வாய்ப்பு உள்ளது. ஆமைகள் முட்டையிடும் இந்த மூன்று மாதங்கள் மீனவர்கள் படகுகளை கவனமாக இயக்க வேண்டும். கடலில் அதிகளவில் மிதக்கும் பாலிதீன் பைகளை இரை என நினைத்து உண்பதும் இறப்பிற்கு ஒரு காரணமாக இருக்கலாம்.

சுற்றுச்சூழல் மாசு, உலக வெப்பமயமாதலும் ஒரு காரணமாக இருக்கும் எனவே சுற்றுச்சூழலை பாதுகாக்க வேண்டும். ஆமைகள் சிக்குவதை தவிர்க்க மீனவர்கள் ’டெக்’ என்ற சாதனத்தை படகில் பொருத்த வேண்டும். தமிழகத்தில் 146 இடங்களில் ஆமை பொரிப்பகங்களை உருவாக்க மத்திய மாநில அரசுகள் முயற்சி செய்து கொண்டு வருகிறது.” என்றார்.
கேரளாவில் கண்டெடுக்கப்பட்ட அமெரிக்காவின் சிவப்பு ஆமை... இந்திய சுற்றுச்சூழலுக்கு ஆபத்தா?