திருச்செந்தூர் கோயில் அருகே கடற்கரையில் குவிந்து கிடக்கும் குப்பைகள்

2 days ago
ARTICLE AD BOX

திருச்செந்தூர் : திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயில் அருகே பைரவர் கோயில் கடற்கரை குப்பைகளாலும், கழிவுகளாலும் சுகாதாரமற்ற நிலையில் காணப்படுகிறது. எனவே கடற்கரையை சுத்தப்படுத்தி பொழுதுபோக்கு தலமாக மாற்றிட வேண்டுமென பக்தர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

குறிஞ்சி கடவுளாக போற்றப்படும் சேயோன் கடலும், கடல் சார்ந்த இடமாக குடிகொண்டுள்ளது திருச்செந்தூரில் ஆகும். தமிழ்க்கடவுள் முருகனின் அறுபடை வீடுகளில் இரண்டாம் படை வீடான திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில் மட்டுமே வங்கக்கடலோரம் அமைந்துள்ளது. எனவே இங்குள்ள கடலில் நீராடுவது புண்ணியமாக கருதப்படுகிறது.

இதன் காரணமாக நாள்தோறும் ஆயிரக்கணக்கானோர் புனித நீராடிய பிறகே சுவாமி தரிசனம் செய்கின்றனர். இக்கோயிலின் கிழக்குப்பகுதி கடல் நோக்கியும், தெற்கு மற்றும் வடக்குப்பகுதியே கடற்கரையோரமும் உள்ளது.

இதில் திருச்செந்தூர் கோயில் அருகே வடக்கு பகுதியில் உள்ள பைரவர் கோயில் கடற்கரை தற்போது குப்பைகளும், கடலில் கரை ஒதுங்கும் உயிரினங்கள், ஆழ்கடலில் மீன்களுடன் சிக்கும் உயிரினங்கள் மற்றும் மனிதர்களால் பயன்படுத்தப்பட்ட பிளாஸ்டிக், பாலித்தீன் கழிவுகளாலும் சுகாதாரமற்ற முறையில் காணப்படுகிறது. இப்பகுதியில் ஆள் நடமாட்டம் குறைவாக உள்ளதால் கடற்கரை பராமரிக்கப்படாமல் உள்ளது.

ஆனால் உள்ளூர் மற்றும் சுற்றுவட்டார பகுதியினை சேர்ந்தவர்கள் முன்னோர்களுக்கு இறுதிச் சடங்கை செய்த பிறகு கடலில் நீராடுவது போன்றவற்றிற்காக இந்த பகுதிக்கு வருகை தருகின்றனர். இந்த கடற்கரை அருகிலேயே ஜீவா நகர் மீன் வலை பின்Aனும் கூடம் உள்ளது. மற்றபடி மிகவும் பெரிய பரந்து விரிந்து கடற்கரையாக காணப்படுகிறது.

எனவே கோயிலின் முன்புறமுள்ள கடற்கரையை பராமரிப்பது போல் பின்புறம் வடக்கு பகுதியில் உள்ள கடற்கரையையும் சுத்தப்படுத்தி பக்தர்கள் மற்றும் சுற்றுலா பயணிகள் வந்து பொழுதை கழித்திடுமாறு அருகே காயல்பட்டினம் மற்றும் குலசேகரன்பட்டினம் கடற்கரையில் உள்ளது போல பொழுதுபோக்கு பூங்காவாக மாற்றிட வேண்டுமென பக்தர்கள் நகராட்சி மற்றும் மீன்வளத்துறைக்கு கோரிக்கை வைத்துள்ளனர்.

The post திருச்செந்தூர் கோயில் அருகே கடற்கரையில் குவிந்து கிடக்கும் குப்பைகள் appeared first on Dinakaran.

Read Entire Article