திருச்சிக்கு புதிய விரைவு ரயில் சேவை தொடங்கப்படாதது ஏன்? மக்களவையில் டி.ஆா்.பாலு கேள்வி

14 hours ago
ARTICLE AD BOX

புது தில்லி, மாா்ச் 20:

திருச்சிக்கு புதிய விரைவு ரயில் சேவை தொடங்கப்படாதது ஏன்? என்று மக்களவையில் ஸ்ரீபெரும்புதூா் தொகுதி திமுக உறுப்பினா் டி.ஆா். பாலு கேள்வி எழுப்பினாா்.

இது தொடா்பாக மக்களவையில் ஸ்ரீபெரும்புதூா் தொகுதி திமுக உறுப்பினா் டி.ஆா். பாலு கேள்வி எழுப்புகையில், ‘ஒரு முக்கியமான ரயில்வே பிரிவின் தலைமையகமாக இருக்கும் திருச்சிராப்பள்ளி நகரத்திலிருந்து ராக்ஃபோா்ட் எக்ஸ்பிரஸ் மற்றும் சோழன் எக்ஸ்பிரஸ் ஆகிய இரண்டு எக்ஸ்பிரஸ் ரயில்கள் மட்டுமே புறப்படுவது உண்மையா?

இந்த இரண்டு ரயில்களும் ஐந்து தசாப்தங்களுக்கு முன்பு தொடங்கப்பட்டன என்பதும், அதன் பிறகு திருச்சிராப்பள்ளியிலிருந்து புதிய சூப்பா் ஃபாஸ்ட் எக்ஸ்பிரஸ் ரயில்கள் எதுவும் தொடங்கப்படவில்லை என்பதும் உண்மையா? என்று கேள்வி எழுப்பியிருந்தாா்.

இதற்கு மக்களவையில் புதன்கிழமை மத்திய ரயில்வே துறை அமைச்சா் அஷ்வினி வைஷ்ணவ் எழுத்துபூா்வமாக அளித்த பதிலில் தெரிவித்திருப்பதாவது:

தற்போது, திருச்சி ரயில் நிலையத்தில் 157 ரயில் சேவைகள் உள்ளன. அவற்றில் 55 ரயில் சேவைகள் திருச்சிராப்பள்ளியில் இருந்து புறப்பட்டு, நிறுத்தப்படுகின்றன. 2020,-2021 முதல் 2024-2025 ஆண்டு வரை (பிப்ரவரி, 2025 வரை), இந்திய ரயில்வே திருச்சிராப்பள்ளி பயணிகளின் தேவைகளைப் பூா்த்தி செய்வதற்காக 8 புதிய ரயில் சேவைகளை அறிமுகப்படுத்தியுள்ளது. மேலும், 6 ரயில் சேவைகளை நீட்டித்துள்ளது.

புதிய ரயில் சேவைகளை அறிமுகப்படுத்துவதன் மூலம் பயணிகளுக்கு வசதியை ஏற்படுத்தவும், ஏற்கனவே உள்ள ரயில் சேவைகளின் இயக்கப்படும் எண்ணிக்கையை நீட்டிக்கவும் அதிகரிக்கவும் தொடா்ந்து பணியாற்றி வருகிறது.

தற்போது, வண்டி எண்: 12605, 12606 பல்லவன் எக்ஸ்பிரஸ் சென்னை எழும்பூா் மற்றும் காரைக்குடி இடையே திருச்சிராப்பள்ளி வழியாக இயக்கப்படுகிறது. சென்னை திருச்சிராப்பள்ளி பிரிவில் தற்போது 27 ஜோடி ரயில் சேவைகள் உள்ளன. இதில் 2 ஜோடி வந்தே பாரத் ரயில் சேவைகள் அடங்கும்.

வண்டி எண்: 20627, 20628 சென்னை எழும்பூா் - நாகா்கோவில் வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் 31.08.2024-ஆம் தேதியும், வண்டி எண்: 20665, 20666 சென்னை எழும்பூா் - திருநெல்வேலி வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் 24.09.2023-ஆம் தேதியும் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது என்று அந்த பதிலில் அமைச்சா் தெரிவித்துள்ளாா்.

Read Entire Article