ARTICLE AD BOX
திடீரென டெக் நிறுவன தலைவர்களை சந்தித்து பேசிய சீன அதிபர்.. என்ன திட்டமா இருக்கும்?
பெய்ஜிங் , சீனா: சர்வதேச அளவில் ஏஐ தொழில்நுட்பத்தில் அமெரிக்காவுக்கும் சீனாவுக்கும் இடையே கடுமையான போட்டி ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் சீன அதிபர் ஸீ ஜின்பிங் தனியார் டெக் நிறுவனங்களின் தலைவர்களை சந்தித்து பேசினார். இது டெக் உலகில் பரபரப்பாக பேசப்படும் விஷயமாக மாறி இருக்கிறது.
சீன அதிபர் ஸீ ஜின்பிங் கடந்த 17ஆம் தேதி தங்கள் நாட்டில் செயல்படும் தனியார் டெக் நிறுவனங்களின் தலைவர்களை சந்தித்து ஆலோசனை நடத்தினார். இந்த கூட்டத்தில் அலிபாபா நிறுவன தலைவர் ஜாக் மா கலந்து கொண்டது தான் இந்த விஷயம் பெரியதாக பேசப்படுவதற்கு காரணம்.

சீன அரசாங்கத்தை பொறுத்தவரை தனியார் நிறுவனங்கள் குறிப்பாக டெக் நிறுவனங்களை சுதந்திரமாக செயல்பட விடாது. 2020ஆம் ஆண்டு சீன அரசு பல்வேறு டெக் நிறுவனங்களுக்கும் கடுமையான விதிமுறைகளை கொண்டு வந்தது. இதனால் சில டெக் நிறுவனங்கள் காணாமல் போயின. இதில் முக்கியமாக ஜாக் மாவின் அலிபாபா குழுமம் வெளியிட இருந்த ஐபிஓ தள்ளி போனது, பல்வேறு நிறுவனங்களும் வெளியில் இருந்து முதலீடு பெறுவது தடுக்கப்பட்டது. இதனால் ஜாக் மா சில காலம் பொதுவெளிக்கே வராமல் மாயமாகி போனார்.
சீன அரசு தனியார் டெக் நிறுவனங்களின் சுதந்திரத்திற்கு கடிவாளம் போட்டதால் அவற்றின் பங்கு மதிப்புகள் குறைய தொடங்கின. சீன பங்கு சந்தை 2 ட்ரில்லியன் டாலர்களை இழந்தது. இதனால் வெளிநாட்டு நிறுவனங்கள் சீன நிறுவனங்களை நம்பி முதலீடு செய்வது கணிசமான அளவு குறைந்தது. சீன பொருளாதாரம் பெரிய அளவில் ஆட்டம் கண்டது.
இது ஒருபுறம் இருக்க அமெரிக்க அரசு சீன பொருட்களுக்கும் தொழில்நுட்பத்துக்கும் கடும் கட்டுப்பாடுகளை விதித்து வருகிறது. எனவே பொருளாதார ரீதியாகவும் நவீன தொழில்நுட்பங்கள் ரீதியாகவும் சீனா அமெரிக்காவுடன் கடுமையாக போட்டி போட வேண்டிய சூழல் நிலவுகிறது. எனவே தான் சீன அரசு நிதி சார்ந்த தொழில்நுட்ப நிறுவனங்கள், டெக் நிறுவனங்கள் மற்றும் ஏஐ சம்பந்தப்பட்ட நிறுவனங்களை ஊக்குவிக்க முன் வந்துள்ளது.
அண்மையில் சீனாவை சேர்ந்த நிறுவனம் டீப் சீக் என்ற செயலியை அறிமுகம் செய்து அமெரிக்க டெக் நிறுவனங்களை அதிர செய்தது. எனவே டெக் நிறுவனங்கள் மீது நம்பிக்கை அதிகரித்துள்ளதால் சீன தலைமை அதன் தலைவர்களை சந்தித்து பேசியுள்ளது. டெக் நிறுவனங்கள் தான் தங்கள் பொருளாதாரத்தை மீட்டெடுக்க உதவும் என்ற நம்பிக்கை பிறந்திருப்பதும் இதற்கு ஒரு காரணம்.
அலிபாபா நிறுவனர் ஜாக் மா இதில் கலந்து கொண்டிருப்பதால் மீண்டும் சீன தொழில் உலகில் அவர் ஆதிக்கம் செலுத்துவார் என சொல்லப்படுகிறது. இந்த கூட்டத்தில் தனியார் டெக் நிறுவனங்களுக்கு தேவையான அனைத்து உதவிகளையும் வழங்கி அரசாங்கம் உறுதுணையாக நிற்கும் என அதிபர் ஜின்பிங் உறுதி அளித்ததாக தகவல் வெளியாகியுள்ளது. வரும் மார்ச் மாதம் சீன அரசு பொருளாதார கொள்கையை வெளியிட உள்ளது. அதில் தனியார் நிறுவனங்களை ஊக்குவிக்கும் வகையிலான அறிவிப்புகள் இடம்பெறும் என சொல்லப்படுகிறது.
story written : Devika