தமிழ்நாட்டின் தலைநகரான சென்னையில் சுமார் 1 கோடி அளவிலான மக்கள் வசித்து வருகின்றனர். கல்வி, வேலைவாய்ப்பு, தொழில் என பல விஷயங்களுக்காக தினசரி பல்லாயிரக்கணக்கான மக்கள் சென்னை வருகின்றனர். கோயம்பேட்டில் இருந்தே வெளி மாவட்டங்களுக்கு பேருந்துகள் இயக்கப்பட்டு வந்தது.

கிளாம்பாக்கம்:

கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு சென்னை நகரில் போக்குவரத்து நெரிசலை தவிர்க்கும் பொருட்டு கிளாம்பாக்கத்தில் இருந்து பேருந்துகள் இயக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது. இதையடுத்து, தற்போது சென்னையில் இருந்து திருச்சி, நெல்லை, மதுரை, கன்னியாகுமரி, தூத்துக்குடி, புதுக்கோட்டை, திருச்செந்தூர், ராமநாதபுரம், திருவண்ணாமலை என வெளி மாவட்டங்களுக்கு கிளாம்பாக்கத்தில் இருந்து பேருந்துகள் இயக்கப்பட்டு வருகிறது.

இனி தாம்பரத்திற்கு நோ பஸ்:

கிளாம்பாக்கத்திற்கு நேரடியாக மின்சார ரயில், மெட்ரோ ரயில் இல்லாத நிலையில் அரசு இந்த முடிவை எடுத்ததால் பொதுமக்கள் கடும் அதிருப்தி அடைந்தனர். இந்த நிலையில், தென்மாவட்டங்களான திருநெல்வேலி, மதுரை, திருச்செந்தூர், தூத்துக்குடி உள்ளிட்ட சில இடங்களில் இருந்து இயக்கப்படும் பேருந்துகள் கிளாம்பாக்கம் தாண்டி தாம்பரம் வரை இயக்கப்பட்டு வருகிறது.

இந்த சூழலில், போக்குவரத்து காவல்துறை அளித்த பரிந்துரையின்படி தென்மாவட்டங்களில் இருந்து தாம்பரம் வரை இயக்கப்பட்டு வந்த பேருந்துகள் இனி இயக்கப்படாது என்று தமிழ்நாடு அரசுப் போக்குவரத்து கழகம் அறிவித்தது. இதன்படி, நாளை முதல் தென்மாவட்டங்களில் இருந்து தாம்பரத்திற்கு பேருந்துகள் இனி இயக்கப்படாது. தென்மாவட்டங்களில் இருந்து இயக்கப்படும் பேருந்துகளின் கடைசி நிறுத்தம் இனி கிளாம்பாக்கமாக மட்டுமே இருக்கும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

தென்மாவட்ட பயணிகள்:

தமிழக அரசின் இந்த முடிவால் தென்மாவட்ட பயணிகள் மிகுந்த அதிர்ச்சி அடைந்துள்ளனர். மதுரை, திருநெல்வேலி, தூத்துக்குடி, கன்னியாகுமரி போன்ற தென் மாவட்டங்களில் இருந்து சென்னைக்கு வருவதற்கு குறைந்தது 10 மணி முதல் 12 மணி நேரம் வரை ஆகிறது.

முன்பு கோயம்பேடு பேருந்து நிலையம் கடைசி நிறுத்தமாக இருந்ததால் பெரும்பாலான பயணிகள் பெருங்களத்தூர், தாம்பரம், ஆலந்தூர், கிண்டி, அசோக் பில்லர் போன்ற இடங்களில் வழியில் இறங்கிக் கொள்வார்கள். மேலும், விமான நிலையம் முதலே மெட்ரோ ரயிலும், பெருங்களத்தூரில் இருந்து மின்சார ரயிலும் இருப்பதால் பயணிகள் பெரிதும் சிரமமின்றி பயணித்தனர்.

அப்செட்:

ஆனால், கிளாம்பாக்கம் பேருந்து நிலையம் பயன்பாட்டிற்கு வந்த பிறகு சென்னையில் இருந்து கிளாம்பாக்கம் பேருந்து நிலையம் செல்வதற்கே பயணிகள் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகி வருகின்றனர். ஏனென்றால், கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்திற்கு நேரடியாக மெட்ரோ மற்றும் மின்சார ரயில் சேவைகள் கிடையாது. பேருந்து சேவை மட்டுமே உள்ளது.

அதேபோல, வெளியூர்களில் இருந்து கிளாம்பாக்கத்திற்கு வரும் பயணிகள் அங்கிருந்து சென்னையின் உள்ளே வருவதற்கு மீண்டும் பேருந்துகளைப் பிடித்து உள்ளே வர வேண்டிய சூழல் உள்ளது. இதனால், பயணிகள் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர். இந்த சூழலில் தாம்பரத்திற்கு வரும் பேருந்துகளில் பயணித்தால் பயண அலைச்சல் பயணிகளுக்கு குறைந்து இருந்தது. ஆனால். தற்போது அதையும் போக்குவரத்து கழகமும் நிறுத்தி விட்டதால் தற்போது பயணிகள் அதிருப்தி அடைந்துள்ளனர்.

பயணிகளின் சிரமத்தை குறைக்கும் விதத்தில் மாநகர பேருந்துகளை கூடுதலாக இயக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக சென்னை மாநகர போக்குவரத்து கழகம் அறிவித்துள்ளது. அதேசமயம், தென் மாவட்டங்களில் இருந்து ஆவடி, திருவான்மியூர் மற்றும் பாரிசுக்கு இயக்கப்படும் பேருந்துகள் வழக்கம்போல இயக்கப்படும்.

ALSO READ | SETC Bus Timings: கிளாம்பாக்கம் போக வேண்டாம்.. விரைவு பஸ்களில் இனிமேல் தென் மாவட்டத்துக்கு ஈசியா போகலாம்.. முழு விவரம்