ARTICLE AD BOX
தான தர்மங்கள் அளிப்பது பெருமையின் அடையாளமா? சிறுமையின் குறியீடா?
பொதுவாகவே நம்மிடையே இருக்கும் பல்வேறு நற்பண்புகளில் பிறருக்கு உதவி செய்யும் கொடை பண்பு மிகுந்த முக்கியத்துவம் வாய்ந்த ஒன்று. நம்முடைய இலக்கியங்களிலும் இதிகாசங்களிலும் கொடைப் பண்பு பல்வேறு இடங்களில் மேன்மைப்படுத்தி பாடப்பட்டுள்ளன. 'ஈவது விலக்கேல்' என அவ்வையார் மொழி தொடங்கி 'கொடை வள்ளல் கர்ணன்' என்பது வரை கொடை பண்புக்கு பல்வேறு சிறப்புகள் நம்முடைய இலக்கியங்களில் உண்டு.
அந்த வகையில் கிருஷ்ணர் ஒருமுறை தருமனுக்கு புகட்டிய பாடம் கொடைப்பண்பை குறித்து புதியதொரு சிந்தனையை புகட்டும் வகையில் அமைந்துள்ளது. அதைப் பற்றி இங்கு தெரிந்து கொள்ளலாம்.
தன்னை நாடி வருபவருக்கு பல்வேறு செல்வங்களை கொடுத்து தான தர்மம் செய்வதில் மிகவும் புகழ்பெற்றவராக விளங்கினார் தர்மர். நாளாக நாளாக அவரின் கொடை பண்பு மிகவும் நீண்டு கொண்டே சென்றது. ஒரு குறிப்பிட்ட காலங்கள் சென்ற பின் தருமருக்கே தன்னுடைய கொடைத்திறனை நினைத்து ஒரு கர்வம் ஏற்பட்டது. அத்தகைய நிலையில் கிருஷ்ணர் தர்மனின் மனநிலையை நன்கு கவனித்து வந்தார். 'தர்மனின் மனநிலை இவ்வாறாக சென்றால் அது அவருக்கு தேவையற்ற பிரச்சினைகளை ஏற்படுத்தக் கூடும். எனவே அவருடைய தலைக்கனத்தை உடைக்கும்படியாக அவருக்கு ஒரு சரியான பாடம் புகட்ட வேண்டும்' என்று விரும்பினார் கிருஷ்ணர்.
அதன் அடிப்படையில் ஒரு நாள் கிருஷ்ணர் தர்மனை பார்க்கச் சென்றார். கிருஷ்ணரை வரவேற்ற தருமன் அவரை நன்கு உபசரித்து மகிழ்ந்தான். பின் இருவரும் சிறிது நேரம் உலாவி விட்டு வரலாம் என்று தங்களுடைய இருப்பிடத்தை விட்டு குதிரையில் செல்லத் தொடங்கினர். போகும் வழியில் கிருஷ்ணர் தர்மனிடம் "இதோ, இந்த நாடு மிகவும் செல்வ செழிப்பாக இருக்கிறது. உன்னைப் போலவே இங்கும் தான தர்மங்களில் மிகவும் சிறந்து விளங்க கூடிய ஒரு அரசன் இருக்கிறார். அவருடைய பெயர் மகாபலி. வாருங்கள், உங்களுக்கு அவரை அறிமுகம் செய்து வைக்கிறேன்!" எனக் கூறி, தர்மரை அருகில் உள்ள நாட்டிற்கு அழைத்துச் சென்றார் கிருஷ்ணர்.
மகாபலியின் அரண்மனைக்குச் சென்றவுடன் கிருஷ்ணர் மகாபலியை நோக்கி, "இதோ, இவர் பெயர் தான் தர்மர்! தான தர்மங்கள் செய்வதில் மிகவும் விருப்பம் உடையவர். குறைந்தது ஒரு நாளைக்கு 500 பேருக்காவது அன்னதானம் செய்து விடுவார். இவரது கொடை பண்பும் சிறப்பும் நாடு முழுவதும் பரவிக் கிடக்கிறது" என்று தர்மனை மகாபலிக்கு அறிமுகம் செய்தார்.
ஆனால் கிருஷ்ணர் பேச ஆரம்பித்ததும் மகாபலி, தன்னுடைய இரண்டு காதுகளையும் பொத்திக் கொண்டார். "என்னிடம் எதுவும் சொல்லாதீர்கள்! நான் எதையும் கேட்க விரும்பவில்லை!" என்று கூறி, தன்னுடைய இரு காதுகளையும் பொத்திக்கொண்டு கடைசி வரை கிருஷ்ணர் என்ன சொல்ல வருகிறார் என்பதை மகாபலி முழுமையாக கேட்கவில்லை. இருப்பினும் கிருஷ்ணர் கூறிய அனைத்தும் மகாபலியின் காதுகளில் விழுந்து விட்டது.
பின்னர் கிருஷ்ணர் பேசுவதை நிறுத்தியவுடன் மகாபலி கிருஷ்ணரிடம், "எனக்கும் தான தர்மங்கள் செய்வதில் மிகவும் விருப்பமுண்டு. நானும் அனைவருக்கும் தர்மம் செய்யவே விரும்புகிறேன். ஆனால் என்னால் என்னுடைய நாட்டில் இருக்கும் ஒருவருக்கு கூட தர்மம் செய்ய முடியவில்லை. ஏனெனில் என்னுடைய தருமத்தை பெற்றுக் கொள்ளும் அளவுக்கு என்னுடைய நாட்டில் ஒருவரும் வறியவராக இருக்கவில்லை. ஆனால் தர்மருக்கு எவ்வளவு பெரும் பாக்கியம் கிட்டியுள்ளது. ஒரு நாளைக்கு அவரால் 500 பேருக்கு அன்னதானம் செய்ய முடிகிறது. அவர் எவ்வளவு பாக்கியம் பெற்றவர். 500 பேர் தினமும் அன்னதானம் பெறுகிறார்கள் என்றால் அவருடைய நாட்டில் உள்ள மக்கள் எவ்வளவு வறுமையால் வாடக்கூடும்!" என்று கூறினார் மன்னன் மகாபலி.
அதைக் கேட்ட தர்மர் கூனி குறுகிப் போனார். அவரிடம் உள்ள அகந்தையும் தலைக்கனமும் அழிந்து போனது.
தர்மம் என்பது பெருமையின் அடையாளம் மட்டும் அல்ல! அது வறுமையின் அடையாளமும் கூட! என்பதை மகாபலியின் வார்த்தைகள் மூலம் உணர்ந்து கொண்ட தர்மர், வெட்கித் தலை குனிந்தார். அன்று முதல் தன் நாட்டில் உள்ள அனைத்து மக்களின் வளர்ச்சியிலும் கவனம் செலுத்த தொடங்கினார் தர்மர். மேலும் தனக்கு சரியான நேரத்தில் பாடம் புகட்டிய கிருஷ்ணருக்கும் தன்னுடைய நெஞ்சார்ந்த நன்றியை தெரிவித்தார் தர்மர்.
உண்மைதானே மக்களே!
நாட்டில் உள்ள செல்வங்கள் அனைத்தும் அனைவருக்கும் பொதுவாக பகிர்ந்து அளிக்கப்படுமாயின் கொடுக்க வேண்டிய தேவையும் இல்லை! பெற்றுக் கொள்ள வேண்டிய தேவையும் இல்லை தானே!