ARTICLE AD BOX
சென்னையில் உள்ள புகழ்பெற்ற உதயம் திரையரங்கத்தை இடிக்கும் பணிகள் இன்று தொடங்கப்பட இருப்பதால் அந்த தியேட்டரை பற்றிய தங்கள் நினைவுகளை நெட்டிசன்கள் பகிர்ந்து வருகின்றனர்.
படம் பார்ப்பது நிறைய பேரும் ரொம்ப பிடித்தமான விஷயம். அந்த இரண்டு மணி நேரத்துல நம்மை வேறொரு உலகத்துக்கு கொண்டு செல்லும் பவர் சினிமாவுக்கு உண்டு. தொழில்நுட்ப வளர்ச்சியின் காரணமாக தற்போது டிவி, தியேட்டர் தாண்டி ஓடிடி தளங்களும் விஸ்வரூப வளர்ச்சி கண்டுள்ளன. என்னதான் ஓடிடியின் வளர்ச்சி இருந்தாலும் திரையரங்குகளில் ஒரு படத்தை பார்க்கும் அனுபவமே வேற... சென்னையில் 1990-களில் நிறைய தியேட்டர்கள் உருவாகி, மக்களோட விருப்பமான இடமாக இருந்து வந்தது.
ரஜினி, கமல், அஜித், விஜய் என முன்னணி நடிகர்களின் படங்கள் தியேட்டரில் ரிலீஸ் ஆனால் அதை திருவிழா போல் ரசிகர்கள் கொண்டாடி மகிழ்ந்தனர். அதிலும் குறிப்பாக சாந்தி, உதயம், பிராத்தனா, மோட்சம், அகஸ்தியா, தேவி, ஆனந்த் ஆகிய தியேட்டர்கள் மக்களின் பேவரைட் ஸ்பாட்டாக இருந்தது என்றே சொல்லலாம். காலம் செல்ல செல்ல... மல்டிபிளக்ஸ் தியேட்டர்களின் வருகையால் சிங்கிள் ஸ்கிரீன் தியேட்டர்களுக்கு மக்களின் வருகை குறைய ஆரம்பித்ததால் அந்த தியேட்டர்கள் படிப்படியாக மூடும் நிலைக்கு தள்ளப்பட்டன.
இதையும் படியுங்கள்... நயன்தாராவுக்கு இரட்டை பெண் குழந்தைகள்; சர்ப்ரைஸ் கொடுத்த விக்னேஷ் சிவன்!
சமீபத்தில் சாந்தி, மேகலா, பிராத்தனா, அபிராமி, சன் பிளாசா, காமதேனு, சித்ரா, அகஸ்தியா, உமா உள்ளிட்ட பல தியேட்டர்கள் நிரந்தரமாக மூடப்பட்டது. இந்த வரிசையில் தற்போது சென்னையின் முக்கிய அடையாளமாக திகழ்ந்து வந்த உதயம் தியேட்டரும் மூடப்பட்டு இருக்கிறது. ‘உதயம் தியேட்டருல என் இதயத்த தொலைச்சேன்’ என சினிமாவில் பாடல் இடம்பெறும் அளவுக்கு பேமஸ் ஆக இருந்து வந்த இந்த தியேட்டருக்கு வயது 42.
உதயம் தியேட்டர் 1983-ம் ஆண்டு கட்டப்பட்டது. உதயம், மினி உதயம், சந்திரன், சூரியன் என மொத்தம் நான்கு திரைகளுடன் இந்த தியேட்டர் இயங்கி வந்தது. இந்த தியேட்டரில் முதன்முதலில் விற்கப்பட்ட டிக்கெட் விலை 2 ரூபாய் 95 பைசா தானாம். சென்னைக்கு வந்த நிறைய பேர் இந்த தியேட்டர்ல தான் முதன்முதலா படம் பார்த்ததாக சொல்கிறார்கள். சிலரோ கல்யாணம் ஆகி முதன்முதலா மனைவியை இங்க தான் படம் பார்க்க கூட்டிட்டு வந்ததாக சொல்லி இருக்கிறார்கள். தற்போது இந்த தியேட்டர் இடித்து தரைமட்டமாக்கப்படும் தகவல் அறிந்ததும் அதன் நினைவுகளை சுமந்தபடி வந்து தியேட்டர் முன் ரசிகர்கள் செல்பி எடுத்து செல்கின்றனர்.
உதயம் தியேட்டர் உள்ள இடத்தை ஒரு தனியார் கட்டுமான நிறுவனம் வாங்கி உள்ளது. தற்போது தியேட்டர் இடிக்கப்பட்டு அங்கு அடுக்குமாடி குடியிருப்பு கட்டப்பட உள்ளது. இன்றுமுதல் தியேட்டரை இடிப்பதற்கான பணிகள் தொடங்கப்படுவதால் அந்த தியேட்டரில் படம் பார்த்த அனுபவத்தை பகிர்ந்து கண்ணீர் சிந்தி வருகிறார்கள் இணையவாசிகள்.
இதையும் படியுங்கள்... 'ஜன நாயகன்' படத்தின் முதல் சிங்கிள் பாடல் ரிலீஸ் எப்போது? தீயாக பரவும் தகவல்!