ARTICLE AD BOX
ஈரோடு மாவட்டத்தில் தேர்தல் பரப்புரையின் போது நாம் தமிழர் கட்சியினர் மற்றும் தந்தை பெரியார் திராவிட கழகத்தினர் இடையே கடும் மோதல் ஏற்பட்டது.
ஈரோடு கிழக்கு தொகுதியின் சட்டமன்ற உறுப்பினராக காங்கிரஸ் கட்சியின் திருமகன் ஈவெரா கடந்த 2021-ஆம் ஆண்டு தேர்வு செய்யப்பட்ட நிலையில், மாரடைப்பு காரணமாக திடீரென உயிரிழந்தார். இதைத் தொடர்ந்து, கடந்த 2023-ஆம் ஆண்டு நடந்த இடைத்தேர்தலில் காங்கிரஸ் மூத்த நிர்வாகியான ஈ.வி.கே.எஸ் இளங்கோவன் போட்டியிட்டு வெற்றி பெற்றார்.
ஈ.வி.கே.எஸ் இளங்கோவனும் உடல்நல பாதிப்பால் கடந்த ஆண்டு உயிரிழந்தார். இதனால், ஈரோடு கிழக்கு தொகுதிக்கு மீண்டும் இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டது. அதன்படி, பிப்ரவரி 5-ஆம் தேதி அத்தொகுதிக்கு இடைத்தேர்தல் நடைபெறும் என தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.
எனினும், இந்த முறை காங்கிரஸ் கட்சிக்கு பதிலாக தி.மு.க வேட்பாளர் தேர்தலில் போட்டியிடுவார் என தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகை அறிவித்தார். அந்த வகையில், தி.மு.க சார்பில் வி.சி. சந்திரகுமார் போட்டியிடுவார் என ஸ்டாலின் அறிவித்தார்.
அ.தி.மு.க, தே.மு.தி.க மற்றும் பா.ஜ.க ஆகிய கட்சிகள் ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிப்பதாக அறிவித்தன. இதைத் தொடர்ந்து, நாம் தமிழர் கட்சி சார்பாக சீதாலட்சுமி போட்டியிடுவார் என சீமான் அறிவித்தார். அதன்பேரில், ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலை முன்னிட்டு நாம் தமிழர் கட்சியினர் சார்பில் தீவிர பரப்புரை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
இதனிடையே, பெரியார் குறித்து சீமான் சர்ச்சைக்குரிய வகையில் பேசி வருவதால், அவருக்கு எதிராக பலத்த எதிர்ப்பு கிளம்பியுள்ளது. அண்மையில், அவர் பரப்புரை மேற்கொண்ட போது தி.மு.க மற்றும் காங்கிரஸ் கட்சியினர் இணைந்து, சீமானுக்கு எதிராக கோஷங்கள் எழுப்பினர். இந்நிலையில், இன்றைய தினம் நாம் தமிழர் கட்சியினர் மற்றும் தந்தை பெரியார் திராவிட கழகத்தினர் இடையே கடும் மோதல் ஏற்பட்டது.
அதன்படி, பரப்புரையின் போது நாம் தமிழர் கட்சியினருக்கு எதிராக அச்சிடப்பட்ட பிரசுரங்களை தந்தை பெரியார் திராவிட கழகத்தினர் விநியோகித்ததாக கூறப்படுகிறது. இதனால், நாம் தமிழர் கட்சியினர் தாக்குதலில் ஈடுபட்டனர். அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்ட நிலையில், சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார், நிலைமையை கட்டுக்குள் கொண்டு வந்தனர்.
இதையடுத்து, தந்தை பெரியார் திராவிட கழக நிர்வாகி செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது, "பல்வேறு விதமான வழக்குகளை நாங்கள் சந்தித்து விட்டோம். இது போன்ற செயல்களில் சீமான் தொடர்ந்து ஈடுபட்டு வந்தால், தமிழ்நாட்டில் எங்குமே அவர் நடமாட முடியாது" எனக் கூறினார்.