ARTICLE AD BOX
தமிழ்நாட்டில் கப்பல் கட்டும் நிலையம்.. இந்த 2 மாவட்டங்களில் அமைய வாய்ப்பு..
சென்னை: தென்கொரியாவை சேர்ந்த கப்பல் கட்டும் நிறுவனமான ஹெச்டி ஹூண்டாய் ஹெவி இண்டஸ்ட்ரீஸ் நிறுவனம் இந்தியாவில் குறிப்பாக தமிழ்நாட்டில் தங்களுடைய கப்பல் கட்டும் நிலையத்தை அமைக்க இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது.
ஹூண்டாய் நிறுவனம் தென்கொரியாவில் செயல்படக்கூடிய மிகப்பெரிய கப்பல் கட்டுமான நிறுவனம் ஆகும். இந்த நிறுவனம் இந்தியாவில் தன்னுடைய கப்பல் கட்டும் தளத்தை அமைப்பதற்கு நீண்ட காலமாகவே திட்டமிட்டு வருகிறது. தற்போது இந்த திட்டத்தை தீவிரப்படுத்தி இருக்கும் ஹூண்டாய் நிறுவனம் இந்தியாவில் எந்த பகுதிகளில் எல்லாம் கப்பல் கட்டும் நிலையத்தை அமைப்பதற்கு சாதகமான இடங்கள் இருக்கின்றன என்பது குறித்து ஆய்வு செய்து வருகிறது.

இதற்காக ஹூண்டாய் ஹெவி இண்டஸ்ட்ரீஸ் நிறுவனத்தை சேர்ந்த பிரதிநிதிகள் அண்மையில் இந்தியாவிற்கு வருகை தந்திருந்தனர். இவர்கள் தமிழ்நாட்டில் கடலூர் மற்றும் தூத்துக்குடி ஆகிய பகுதிகளில் கப்பல் கட்டும் நிலையத்தை அமைப்பதற்கான வசதிகள் இருக்கிறதா என்பது குறித்து நேரில் சென்று ஆய்வு நடத்தியுள்ளனர்.
தற்போதைக்கு இந்தியாவில் எல்&டி நிறுவனம் தான் காட்டுப்பள்ளி பகுதியில் கப்பல்களை கட்டமைப்பது மற்றும் சீரமைப்பதற்கான நிலையத்தை அமைத்து செயல்படுத்தி வருகிறது. ஹூண்டாய் நிறுவனம் முதல் கட்டமாக எல்&டி நிறுவனத்தோடு ஒரு கூட்டு ஒப்பந்தத்தை ஏற்படுத்திக் கொண்டு முதல் கப்பல் கட்டும் தளத்தை அமைக்க இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது.
சர்வதேச அளவில் கப்பல் கட்டுமானத்தில் 10 சதவீத பங்கினை ஹுண்டாய் நிறுவனம் தான் வைத்திருக்கிறது. இந்த நிறுவனம் தமிழ்நாட்டில் இரண்டு இடங்களை நேரில் சென்று பார்வையிட்டுள்ளது. தமிழ்நாடு தவிர ஆந்திரா, மகாராஷ்டிரா ஆகிய மாநிலங்களிலும் கப்பல் கட்டும் நிலையத்தை அமைப்பதற்கான இடங்களை ஆய்வு செய்து வருகிறது. தற்போதைக்கு இந்தியாவில் கப்பல் கட்டும் நிலையங்கள் எண்ணிக்கை மிக மிக குறைவாக இருக்கிறது. சர்வதேச அளவில் இந்த கப்பல் கட்டும் பிரிவில் இந்தியாவின் பங்கு ஒரு சதவீதத்திற்கும் கீழ் தான் இருக்கிறது. 2030-ம் ஆண்டுக்குள் இந்த நிலையை மாற்ற வேண்டுமென அரசு திட்டமிட்டுள்ளது.
2023 ஆம் ஆண்டு மத்திய துறைமுக மற்றும் கப்பல் போக்குவரத்து துறை அமைச்சகத்தின் செயலாளர் ராமச்சந்திரன் தலைமையிலான குழுவினர் தென்கொரியாவிற்கு சென்று அங்கே இயங்கி வரக்கூடிய கப்பல் கட்டுமான நிறுவனங்களுளை சந்தித்து இந்தியாவில் நிலையத்தை அமைக்க அழைப்பு விடுத்தனர்.
சர்வதேச அளவில் தற்போது சுற்றுச்சூழல் சார்ந்து பல்வேறு நாடுகளும் கடுமையான விதிமுறைகளை வகுத்திருக்கின்றன. இதனால் கப்பல் வழியே சரக்கு போக்குவரத்துக்கான தேவை அதிகரித்து இருக்கிறது.
Story written by: Devika