ARTICLE AD BOX
தமிழ்நாடு போலவே, இந்தியா முழுவதும் நடந்த மொழி காக்கும் போராட்டங்கள் பற்றி தெரியுமா?

பட மூலாதாரம், Getty Images
- எழுதியவர், முரளிதரன் காசிவிஸ்வநாதன்
- பதவி, பிபிசி தமிழ்
- ஒரு நிமிடத்துக்கு முன்னர்
இந்தியாவில் குறிப்பிடத்தக்க மொழிப் போராக தமிழ்நாட்டில் நடந்த இந்தி திணிப்பு எதிர்ப்புப் போராட்டம் கருதப்படுகிறது. ஆனால், பல மாநிலங்களில் தத்தம் மொழிகளைக் காப்பாற்ற நீண்ட, வலுவான போராட்டங்கள் நடந்திருக்கின்றன.
இந்தியாவில் தன்னுடைய மொழியைக் காக்கவும் வேறொரு மொழி தங்கள் மீது திணிக்கப்படுவதை எதிர்த்தும் பல மாநிலங்களில் போராட்டங்கள் நடந்திருக்கின்றன. தமிழ்நாட்டில் நடந்த இந்தி திணிப்பு எதிர்ப்புப் போராட்டம் குறிப்பிடத்தக்க ஓர் உதாரணம் என்றாலும், பல மாநிலங்களிலும் இதுபோன்ற போராட்டங்கள் நடந்திருக்கின்றன. தொடர்ந்தும் நடந்து வருகின்றன.
- அமெரிக்காவில் ஸெலன்ஸ்கி நடத்தப்பட்ட விதம் இந்தியாவுக்கு சொல்லும் சேதி என்ன?
- யுக்ரேனுக்கான அமெரிக்க ராணுவ உதவி நிறுத்திவைப்பு - என்ன நடக்கிறது?
- புதினுடன் கைகோர்ப்பாரா டிரம்ப்? வேகமாக மாறும் உலக அரசியலில் என்ன நடக்கிறது?
- யுக்ரேனுக்கு ஆதரவாக திரளும் ஐரோப்பிய நாடுகள் - லண்டன் மாநாட்டில் முடிவான 4 அம்ச செயல் திட்டம் என்ன?

1. தமிழ்நாட்டில் இந்தி திணிப்பு எதிர்ப்புப் போராட்டம்
தமிழ்நாட்டில் இந்தி திணிப்பு எதிர்ப்புப் போராட்டத்திற்கு என ஒரு நீண்ட வரலாறு இருக்கிறது. வெவ்வேறு விதங்களில் இந்தி தமிழ்நாட்டின் மீது திணிக்கப்படுவதை எதிர்த்து, போராட்டங்கள் நடந்திருக்கின்றன. 1937லிலும் 1947-50வரையிலும் பள்ளிக்கூடங்களில் இந்தியை கட்டாயமாக கற்பிக்கும் முடிவை எதிர்த்து போராட்டங்கள் நடைபெற்றன.
அதற்குப் பிறகு 1965-ல் மத்திய அரசின் அலுவல் மொழிச் சட்டத்தை எதிர்த்தும் 1967-68ல் மும்மொழிக் கொள்கையை எதிர்த்தும் தமிழ்நாட்டில் போராட்டங்கள் நடைபெற்றன. இதன் விளைவாக, இந்தியாவின் அலுவல் மொழியாக இந்தியுடன் ஆங்கிலமும் நீடிக்கிறது. அதேபோல, தமிழ்நாட்டின் பள்ளிக்கூடங்களில் மூன்று மொழிகளைக் கற்பிக்கும் கொள்கைக்குப் பதிலாக, இரு மொழிக் கொள்கையே நீடிக்கிறது.

பட மூலாதாரம், DMK
2. கன்னட முதன்மைக்கான போராட்டம் (கோகக் போராட்டம்)
இந்தியா சுதந்திரம் பெற்று, மொழிவழி மாநிலங்கள் வந்த பிறகு கர்நாடக மாநிலத்தில் மும்மொழிக் கொள்கை கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது. பள்ளிக்கூடங்களில் சமஸ்கிருதத்திற்கு கூடுதலான முக்கியத்துவமும் அளிக்கப்பட்டுவந்தது. இதற்கு தொடர்ந்து எதிர்ப்புகள் எழுந்துவந்த நிலையில், ஆர். குண்டு ராவ் (1980 - 83) தலைமையிலான காங்கிரஸ் அரசு பேராசிரியர் விநாயக் கிருஷ்ண கோகக் தலைமையில் இந்த விவகாரம் குறித்து ஆராய ஒரு கமிட்டியை அமைத்தது. அந்த கமிட்டி, கர்நாடக மாநிலத்தில் கன்னடத்தை முதன்மை மொழியாக்க 1981-ல் பரிந்துரைத்தது. ஆனால், இந்தப் பரிந்துரைகளுக்கு சில தரப்புகளில் இருந்து வந்த எதிர்ப்பின் காரணமாக, இவற்றை நிறைவேற்றுவதில் கர்நாடக அரசு ஆர்வம் காட்டவில்லை.
ஆனால், இந்தப் பரிந்துரைகளை நிறைவேற்ற வேண்டுமெனக் கோரி, இலக்கியவாதிகள், கலாசார செயல்பாட்டாளர்கள் தொடர்ந்து குரல் கொடுத்து வந்தனர். இருந்தாலும், பொதுமக்கள் மத்தியில் இந்த விவகாரம் பெரிய அளவில் ஆர்வம் எதையும் ஏற்படுத்தவில்லை. அப்போது கன்னட சூப்பர் ஸ்டாராக இருந்த டாக்டர் ராஜ்குமாரை அணுகிய கன்னட ஆதரவாளர்கள், இந்த விவகாரத்தில் குரல் கொடுக்கும்படி அவரிடம் கோரினர்.
ராஜ்குமார் இதனை ஏற்றுக்கொண்டு, அந்தப் பரிந்துரைகளை நிறைவேற்றும்படி குரல் கொடுத்தார். இதையடுத்து ஒட்டுமொத்த கன்னட திரைத்துறையும் இதற்கு ஆதரவாக குரல் கொடுத்தனர். இதற்குப் பிறகு, இந்த உணர்வு பொதுமக்களிடமும் பரவி, மிகப் பெரிய போராட்டமாக வெடித்தது. இந்தப் போராட்டம், விநாயக் கிருஷ்ண கோகக் பரிந்துரைகளைச் செயல்படுத்த வேண்டும் எனக் கோரி நடந்ததால், இந்தப் போராட்டம் 'கோகக் போராட்டம்' என்றும் குறிப்பிடப்படுகிறது. இந்தப் போராட்டங்களில் சுமார் 7 பேர் வரை கொல்லப்பட்டனர்.
இதற்குப் பிறகு நடந்த நிகழ்வுகளை 'லாங்குவேஜ் இன் இந்தியா' இணையதளத்தில் எழுதப்பட்ட கட்டுரை விரிவாகத் தருகிறது.
- ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி அரையிறுதி: இந்தியாவை சரிவிலிருந்து மீட்பாரா விராத் கோலி?9 மணி நேரங்களுக்கு முன்னர்

பட மூலாதாரம், Getty Images
கன்னடத்திற்கு ஆதரவாக நடந்த பெரும் போராட்டத்திற்குப் பிறகு, கன்னடத்தை பள்ளிக்கூடங்களில் முதன்மை மொழியாகவும் ஆரம்பப் பள்ளிகளில் கட்டாயப் பாடமாகவும் 1982ல் கர்நாடக அரசு அறிவித்தது. ஆனால், சில மொழிச் சிறுபான்மையினரும் தனியார் கல்வி நிறுவனங்களும் இதனை எதிர்த்து நீதிமன்றத்திற்குச் சென்றன. 1990களின் துவக்கத்தில் உச்ச நீதிமன்றம் இந்த விவகாரத்தில் தீர்ப்பளித்தது. அதன்படி பள்ளிக்கூடங்களுக்கான மொழிக் கொள்கையை கர்நாடக அரசு வகுத்தது. இதன்படி, உயர்நிலைப் பள்ளி மட்டத்தில் மூன்று மொழிகளில் ஒரு மொழியாக கன்னடத்தை கண்டிப்பாக தேர்வுசெய்து படிக்க வேண்டும்.
1984ல் வேலை வாய்ப்புகளில் கன்னடம் பேசும் மக்களுக்கு வாய்ப்பு அளிப்பது குறித்து ஆராய, சரோஜினி மஹிஷி என்பவர் தலைமையில் குழு ஒன்று அமைக்கப்பட்டது. இந்தக் குழு, மாநில அரசு வேலைவாய்ப்புகளில் 100 சதவீத வேலை வாய்ப்புகளை கன்னடம் பேசும் மக்களுக்கு அளிக்க வேண்டும் என வலியுறுத்தியது. இந்தக் குழுவின் பரிந்துரைகளை அமல்படுத்த வேண்டுமென இப்போதும் அவ்வப்போது போராட்டங்கள் நடந்துவருகின்றன.
இதற்குப் பிறகு, 2017, 2019லும் இந்திக்கு எதிராக கர்நாடக மாநிலத்தில் சில போராட்டங்கள் நடந்திருக்கின்றன. 2017-ல் பெங்களூரின் மெட்ரோ ரயில் நிலையங்களில் பெயர்ப் பலகைகளில் கன்னடம், ஆங்கிலம் ஆகியவற்றுடன் இந்தி மொழியும் பயன்படுத்தப்பட்டது. இந்தத் திட்டத்திற்கான பெரும்பகுதி முதலீட்டை கர்நாடக மாநில அரசு செய்திருக்கும் நிலையில், பெயர்ப் பலகைகளில் இந்தியும் பயன்படுத்தப்பட்டது ஏன் என பலர் கேள்வியெழுப்பினர். சில மெட்ரோ ரயில் நிலையங்களுக்கு வெளியில் போராட்டங்களையும் நடத்தினர். மேலும் ட்விட்டரிலும் இது தொடர்பான பிரசாரங்கள் முன்னெடுக்கப்பட்டன.
இதற்குப் பிறகு, 2020-ல் கர்நாடக மாநிலத்தில் 'ஹிந்தி திவஸ்' கொண்டாடப்பட கடும் எதிர்ப்பு எழுந்தது. எக்ஸ் தளத்தில் பலர் கடுமையான எதிர்ப்பை வெளிப்படுத்தினர். கர்நாடக ரக்ஷன வேதிகே அமைப்பு போராட்டங்களில் இறங்கியது. சில பெயர்ப் பலகைகளில் இருந்த இந்தி எழுத்துகள் அழிக்கப்பட்டன.
- ஜோர்டானில் சுட்டுக் கொல்லப்பட்ட கேரள நபர்- வேலை தேடி சென்றவருக்கு நடந்தது என்ன?33 நிமிடங்களுக்கு முன்னர்

பட மூலாதாரம், https://allindiakonkaniparishad.com/
3. கொங்கணி மொழிப் போராட்டம்
தமிழ்நாடு, கர்நாடகா போன்ற மாநிலங்களில் இந்தி திணிப்புக்கு எதிராக போராட்டங்கள் நடந்தன என்றால், கோவாவில் மராத்திக்கு மாற்றாக தங்கள் மொழியை பயன்படுத்த வேண்டும் எனக் கோரி போராட்டங்கள் நடைபெற்றன.
கோவாவில் கொங்கணி மொழி பல நூற்றாண்டுகளாகவே, அரசு ஆதரவைப் பெற்ற மொழியாக இருக்கவில்லை. போர்ச்சுக்கீசியர் வருகைக்குப் பிறகு, போர்ச்சுகீசிய மொழிக்கே முக்கியத்துவம் அளிக்கப்பட்டுவந்தது. இந்த நிலையில், போர்ச்சுக்கீசியர் பிடியிலிருந்து கோவா 1961-ல் விடுதலை பெற்ற பிறகு, அலுவல் மொழியாக ஆங்கிலம் உருவெடுத்தது. அந்தத் தருணத்தில் கொங்கணி என்பது மாராட்டிய மொழியின் மற்றொரு பேச்சு வழக்கு என்று பலர் குறிப்பிட்டு வந்தனர். கொங்கணியைத் தனி மொழியாக அங்கீகரிக்க வேண்டும் என சாகித்ய அகாதெமிக்கு அகில இந்திய கொங்கணி பரிஷத் 1962-ல் கோரிக்கை விடுத்தது.
கோவா இந்தியாவில் இணைக்கப்பட்ட பிறகு நடந்த முதல் தேர்தலில் மகாராஷ்ட்ரவாடி கோமாண்டக் கட்சி ஆட்சிக்கு வந்தது. முதலமைச்சராக இருந்த தயானந்த் பந்தோத்கர் கோவாவை மகாராஷ்டிராவுடன் இணைக்க விரும்பினார். ஆனால், ஐக்கிய கோவா கட்சி இது தொடர்பாக பொது வாக்கெடுப்பு நடத்தவேண்டும் எனக் கூறியது. இதையடுத்து 1967-ல் மகாராஷ்டிராவுடன் கோவாவை இணைப்பதா, வேண்டாமா என்பது குறித்து பொது வாக்கெடுப்பு 1967ஆம் ஆண்டு ஜனவரி மாதம் நடத்தப்பட்டது. அதில் சுமார் 54 சதவீதம் பேர் கோவா, தனித்தே இருக்க வேண்டுமென வாக்களித்தனர். இதற்குப் பிறகு 1970ல் தேவநகரி எழுத்தில் எழுதப்படும் கொங்கணி, மராத்தியுடன் சேர்ந்து கோவாவின் அலுவல் மொழியாக அங்கீகரிக்கப்பட்டது.
ஆனால், இதற்குப் பிறகு சசிகலா ககோட்கர் முதல்வராக இருந்தபோது கோவாவில் உள்ள பள்ளிகளில் மராத்தி கட்டாயப் பாடமாக்கப்பட்டது. இதற்கு கொங்கணி அமைப்புகள் கடும் எதிர்ப்புத் தெரிவித்தன. காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால் கொங்கணி அலுவல் மொழியாக்கப்பட்டு, அரசமைப்புச் சட்டத்தின் எட்டாவது பிரிவில் சேர்க்கப்படும் என வாக்குறுதி அளிக்கப்பட்டது. 1980-ல் காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தபோதும் அது நடக்கவில்லை. இதற்குப் பிறகு, கொங்கணியை ஆட்சி மொழியாக்கக் கோரி 1986ல் 'கொங்கணி பிரஜஸ்டோ ஆவாஸ்' என்ற மிகப் பெரிய போராட்டம் துவங்கியது. இதையடுத்து கலவரம் வெடித்தது. 7 பேர் கொல்லப்பட்டனர். கலகத்தை அடக்க ராணுவம் வரவழைக்கப்பட்டது. முடிவில், 1987 பிப்ரவரி 4ஆம் தேதி கோவா யூனியன் பிரதேசத்தின் ஒரே அலுவல் மொழியாக கொங்கணி அங்கீகரிக்கப்பட்டது.

பட மூலாதாரம், Jharkhand Bhasa Bachao Sangharsh Samiti
4. ஜார்க்கண்ட் மொழிப் போராட்டம்
வழக்கமாக மொழிக்காக நடக்கும் போராட்டங்கள், பெரிய ஆதிக்க மொழிக்கு எதிராக நடத்தப்பட்டும். ஆனால், ஜார்க்கண்ட் மாநிலத்தின் ஒரு பகுதியில் நடந்த மொழிப் போராட்டம் வித்தியாசமானது. ஜார்க்கண்ட் மாநிலத்தின் தான்பாத், பொகாரோ ஆகிய மாவட்டங்களில் போஜ்புரி, மகஹி மொழிகளை, இம்மாவட்டங்களின் உள்ளூர் மொழிகளாக அங்கீகரித்ததை எதிர்த்து ஒரு போராட்டம் நடைபெற்றது.
2021ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் இம்மாநில நிர்வாக சீர்திருத்தத்துறை ஒரு அறிவிப்பை வெளியிட்டது. அதன்படி, ஜார்கண்ட் மாநில பணியாளர் தேர்வாணயம் நடத்தும் தேர்வுகளில் மாவட்ட அளவிலான பதவிகளுக்கு போஜ்புரி, மகஹி மொழிகளை மெட்ரிக் மட்டத்தில் அறிந்திருப்பவர்களும் விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டது.
ஜார்க்கண்ட் மாநிலத்தில் இணைப்பு மொழியாக இந்தியே இருந்து வந்தாலும் 15க்கும் மேற்பட்ட மொழிகளுக்கு அலுவல் மொழி அந்தஸ்து வழங்கப்பட்டிருக்கிறது. இந்த நிலையில்தான், இந்த இரு மாவட்டங்களிலும் போஜ்புரி, மகஹி மொழிகளை வட்டார மொழிகளாக அங்கீகரிப்பது, வேறு மாநிலத்தினர் தங்கள் பகுதியில் குடியேறி, தங்கள் வேலை வாய்ப்புகளை பறிக்க வழி வகுக்கும் என இந்த மாவட்டங்களைச் சேர்ந்தவர்கள் கருதினார்கள்.
இதையடுத்து, ஜார்க்கண்ட் பாஷா பச்சாவோ சங்கர்ஷ் சமிதி (Jharkhand Bhasa Bachao Sangharsh Samiti) என்ற அமைப்பின் கீழ் போராட்டங்கள் வெடித்தன. 2022 ஜனவரி 30ஆம் தேதி பொகாரோவில் மிகப் பெரிய மனிதச் சங்கிலி போராட்டம் நடைபெற்றது. மாநில கல்வி அமைச்சரே இந்தப் போராட்டங்களை ஆதரித்தார். பிறகு ஒரு வழியாக, அதே ஆண்டு பிப்ரவரி 19ஆம் தேதி இந்த அறிவிப்பைத் திரும்பப் பெற்றது மாநில அரசு.

பட மூலாதாரம், instagram/banglapokkho
5. மேற்கு வங்கத்தில் இந்தித் திணிப்பு எதிர்ப்புப் போராட்டம்
மேற்கு வங்கத்தில் வங்க மொழியைப் பாதுகாக்க அமர பங்காலி என்ற இயக்கம் 1980களில் செயல்பட்டு வந்தது. ஆனால், அந்த இயக்கத்திற்கு மாநிலம் தழுவிய அளவில் செல்வாக்கு இல்லை. தற்போது 'பங்ளா போக்கோ' என்ற அமைப்பு இந்தித் திணிப்பிற்கு எதிராக குரல் கொடுத்து வருகிறது. இந்த அமைப்பு நடத்திய போராட்டங்களின் காரணமாக, மேற்கு வங்க மாநில அரசுப் பணிகளுக்கான தேர்வில், வங்க மொழியில் குறிப்பிடத்தக்க மதிப்பெண்களை எடுப்பது கட்டாயமாக்கப்பட்டிருக்கிறது.
மேலும், மேற்கு வங்க மெட்ரோ ரயில் அட்டையில், இந்தியும் ஆங்கிலமும் மட்டுமே இடம்பெற்றிருந்ததை எதிர்த்து இந்த அமைப்பு போராட்டம் நடத்தியது. இதையடுத்து வங்க மொழியும் இந்த அட்டையில் இடம்பெற்றது.
'நான்கில் மூன்று பங்கு மொழிகள் அழியும் நிலையில் உள்ளன'
மொழிகளின் ஆயுட்காலம் குறித்து கடந்த இருபது ஆண்டுகளுக்கு மேலாக நடந்துவரும் ஆய்வுகளின் அடிப்படையில் பார்த்தால், மிகப் பெரும் எண்ணிக்கையில் மனித குலம் தனது மொழிகளை இழந்துவருவதாகத் தெரிகிறது என்கிறார் இந்தியாவில் மொழிப் பரவல் குறித்த ஆய்வாளரும் இது தொடர்பான நூல்களை எழுதி வருபவருமான ஜி.என். தேவி.
"உலகில் தற்போதுள்ள மொழிகளில் நான்கில் மூன்று பங்கு மொழிகள் அழியும் நிலையில் இருக்கின்றன. உலகின் மொழிப் பாரம்பரியத்தில் ஏற்படும் இழப்பு மனித குலத்தின் சிந்தனை மற்றும் நாகரிகத்தில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தும். அரசுகளும் கல்வியை ஒழுங்குபடுத்தும் அமைப்புகளும் மொழி தொடர்பாக எடுக்கும் முடிவுகள், சரியானவையாகவோ நிதர்சனத்தை ஒட்டியோ இருப்பதில்லை." என தன்னுடைய INDIA: A Linguistic Civilization நூலில் குறிப்பிடுகிறார் ஜி.என். தேவி.
- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு.
(சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ் (டிவிட்டர்) மற்றும் யூட்யூப் பக்கங்கள் மூலம் எங்களுடன் இணைந்திருங்கள்.)