தமிழ்நாடு பொதுத்தேர்வு 2024-25: விடைத்தாள் முறைகேட்டை தடுக்க புதிய நடைமுறை அறிமுகம்

1 day ago
ARTICLE AD BOX

தமிழகத்தில் மாநில பாடத்திட்டத்தின் கீழ் இயங்கும் அரசு, அரசு உதவி பெற்ற பள்ளிகள் மற்றும் தனியார் பள்ளிகளில் 10, 11, 12ம் வகுப்பு பொதுத்தேர்வு ஒவ்வொரு ஆண்டும் மார்ச் மற்றும் ஏப்ரல் மாதங்களில் நடத்தப்பட்டு வருகிறது. இதற்கான அட்டவணை வெளியிடப்பட்டு, தேர்வுக்கான ஏற்பாடுகளை அரசு தேர்வு இயக்ககம் தீவிரமாக முன்னெடுத்து வருகிறது. இந்நிலையில், பொதுத்தேர்வில் முறைகேடுகள் நடப்பதை தடுக்கும் வகையில், அரசு தேர்வு இயக்ககம் புதிய நடைமுறையை அமல்படுத்த திட்டமிட்டுள்ளது.

Advertisment

தமிழகத்தில் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு மார்ச் 3 ஆம் தேதி தொடங்கி மார்ச் 25 ஆம் தேதி வரை பொதுத்தேர்வு நடைபெறுகிறது. 11 ஆம் வகுப்பு பொதுத் தேர்வு மார்ச் 5 ஆம் தேதி முதல் தொடங்கி மார்ச் 27 ஆம் தேதி வரை நடைபெறுகிறது. இதேபோல் 10 ஆம் வகுப்பு பொதுத் தேர்வு மார்ச் 28 ஆம் தேதி முதல் ஏப்ரல் 15 ஆம் தேதி வரை நடைபெற உள்ளது.

இந்த ஆண்டு, தமிழ்நாட்டில் 10, 11 மற்றும் 12-ம் வகுப்புகளை சேர்த்து மொத்தமாக 25,57,354 பேர் பொதுத் தேர்வு எழுத உள்ளனர். 12-ம் வகுப்பு தேர்வை 3,78,545 மாணவர்கள், 4,24,023 மாணவிகள், 18,344 தனித்தேர்வர்கள், 145 கைதிகள் என மொத்தம் 8,21,057 பேர் எழுதுகின்றனர். 11-ம் வகுப்பு தேர்வை 3,89,423 மாணவர்கள், 4,28,946 மாணவிகள், 4,755 தனித்தேர்வர்கள், 137 கைதிகள் என மொத்தம் 8,23,261 பேர் எழுதவுள்ளனர். 10-ம் வகுப்பு தேர்வை 4,46,411 மாணவர்கள், 4,40,465 மாணவிகள், 25,888 தனித்தேர்வர்கள், 272 கைதிகள் என 9,13,036 பேர் எழுதுகின்றனர்.

11 மற்றும் 12-ம் வகுப்பு பொதுத் தேர்வுகளுக்கு 3,316 மையங்களும், 10-ம் வகுப்பு பொதுத் தேர்விற்கு 4,113 மையங்களும் அமைக்கப்பட உள்ளன. இவை தவிர, தேர்வு கண்காணிப்பு சிறப்பு படைகள், தேர்வறை கண்காணிப்பாளர்கள் விவரங்களையும் தேர்வுத் துறை வெளியிட்டுள்ளது.

Advertisment
Advertisement

இந்நிலையில், பொதுத்தேர்வில் முறைகேடுகள் நடப்பதை தடுக்கும் வகையில், அரசு தேர்வு இயக்ககம் புதிய நடைமுறையை அமல்படுத்த திட்டமிட்டுள்ளது.

பொதுத்தேர்வில் மாணவர்களுக்கு விடைத்தாள்கள் ஒன்றாக இணைக்கப்பட்டு புத்தக வடிவில் வழங்கப்படும். அதேநேரம் மாணவர்களுக்கு கூடுதல் விடைத்தாள் தேவைப்பட்டாலும் வழங்கப்படும். இவற்றில் முதலில் வழங்கப்படும் புத்தக வடிவ விடைத்தாளில் முகப்பு பக்கம் (முதல் பக்கம்) தனியாக பிரிக்கும் வகையில் அமைக்கப்பட்டு இருக்கும். அதில் மாணவர்களின் விவரங்கள் இடம்பெற்று இருக்கும். 

இந்தநிலையில் கடந்த 2023 ஆம் ஆண்டு மதுரையில் ஒரு பள்ளியில் 12-ம் வகுப்பு பொதுத் தேர்வின்போது, மாணவர் ஒருவர் அவரின் விடைத்தாளில் முதல் பக்கத்தை மாற்றி தேர்வில் முறைகேடு செய்தது கண்டறியப்பட்டது. அதனைத்தொடர்ந்து, இந்த வகை முறைகேட்டை தடுக்க பொதுத்தேர்வை நடத்தும் அரசு தேர்வுகள் இயக்ககம் புதிய நடைமுறையை அறிமுகப்படுத்த உள்ளதாக கூறப்படுகிறது. 

அந்த வகையில், விடைத்தாளின் முதல் பக்கத்தை இணைக்கும் பணியை இனி அரசு தேர்வுகள் இயக்ககமே நேரடியாக மேற்கொள்ள உள்ளதாக கூறப்படுகிறது. இதற்கு முன்னர் பள்ளிகளின் தலைமை ஆசிரியர்கள் இந்த பணியை செய்து வந்தனர். பொதுத்தேர்வு அடுத்த மாதம் தொடக்க உள்ள நிலையில், விடைத்தாளுடன் முகப்பு பக்கம் தனியாக எடுக்கப்படாத வகையில், அனைத்து பக்கங்களும் இணைக்கப்பட்டு மாணவர்களுக்கு வழங்கப்பட உள்ளதாக கூறப்படுகிறது. இதற்காக ஒவ்வொரு மாவட்டத்திலும் மையம் அமைத்து தேர்வுகள் இயக்ககத்தின் கண்காணிப்பில் விடைத்தாள்கள் இணைக்கப்பட நடவடிக்கை மேற்கொண்டுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

மேலும், மாணவர்களின் விடைத்தாள் முகப்பு தாள் தைப்பதற்கும் அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளது. அதில், முகப்புத் தாள்கள் தைக்கும் பணிக்கென ஒதுக்கீடு செய்யப்பட்ட பள்ளியானது 10, 11, 12-ம் வகுப்பு பொதுத் தேர்வுகளுக்கும் ஒரே பள்ளியாக தேர்வு செய்யப்பட்டிருப்பின், தேர்வெழுதுப் பொருட்கள் பாட வாரியாக மூன்று அறைகளில் பிரித்து அடுக்கி வைத்துக் கொள்ள வேண்டும். மழை நீர் மற்றும் கரையான் போன்றவற்றினால் சேதமடையாதவாறு பாதுகாப்பான முறையில் இருப்பதை உறுதி செய்து கொள்ள வேண்டும். வெற்று விடைத்தாள்கள் பாதுகாக்கப்படும் அறைகள் இரு சாவி கொண்ட பூட்டு கொண்டு பூட்டப்பட வேண்டும். விடைத்தாள் கட்டுக்காப்பாளராக நியமிக்கப்பட்டுள்ள பள்ளித் தலைமையாசிரியரிடம் ஒரு சாவியும். மற்றொரு சாவி தேர்வுத்துறை உதவி இயக்குநரிடம் இருத்தல் வேண்டும்.

விடைத்தாள் தைக்கும் முகாம்களில் ஒரு தையல் பணியாளர் குறைந்தபட்சம் 1000 எண்ணிக்கையில் முகப்புத்தாள்களை முதன்மை விடைத்தாள்களுடன் இணைத்து தைக்க வேண்டும். 12, 11, 10-ம் வகுப்பு என அந்தந்த தேர்வுகளுக்குரிய முதன்மை விடைத்தாள்கள் கவனமாக வழங்கப்பட வேண்டும். அவ்வாறு முதன்மை விடைத்தாள்கள் மாற்றப்படும் நிகழ்வில் அந்தந்த உதவி இயக்குநர் பொறுப்பேற்க நேரிடும். உயிரியல் பாடத்திற்கு முதலில் முகப்புத்தாள் வைக்கப்பட வேண்டும். அதன் கீழ் உயிரி தாவரவியல். அதன் கீழ் உயிரி விலங்கியல் பாடத்திற்கென பயன்படுத்திக் கொள்ள வேண்டிய கோடிடப்படாத வகையிலான 4 பக்கங்கள் கொண்ட ஒரே ஒரு கூடுதல் விடைத்தாள் தைக்கப்பட வேண்டும். தேர்வு மையங்களிலிருந்து வரும் பணியாளர்கள் தமக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ள தையல் பணியாளருக்கு தமது தேர்வு மையத்தின் முகப்புத்தாள்களை வெற்று விடைத்தாளுடன் தேர்வு நாள், பாட வாரியாக சேர்த்து தைப்பதற்கு ஏதுவாக பொருத்தி உதவி இயக்குநர்கள் வழங்கிட வேண்டும்.

சேதமடைந்த முகப்புத்தாள்கள், முதன்மை விடைத்தாள்கள், தேவையற்ற முகப்புத்தாள் பிரதிகள் (Duplicate Print) இருப்பின் அவற்றை முறையாக பதிவேட்டில் பதிந்து, தனியாக சேகரித்து வைக்க வேண்டும். தேர்வு மையங்களுக்கு விநியோகிக்க வேண்டிய கூடுதல் விடைத்தாள்களையும் மற்றும் துணிவேய்ந்த அகல காகித உறைகளையும், முகப்புதாள்களுடன் இணைத்து தைக்கப்பட்ட முதன்மை விடைத்தாள்களுடன் சேர்த்து வழங்கப்பட வேண்டும். தைக்கப்பட்ட விடைத்தாள்கள் மற்றும் எழுதுப்பொருட்களை பாதுகாப்பாக கொண்டுச் செல்வதை உறுதி செய்ய வேண்டும். கொண்டு செல்லும் விடைத்தாள் எண்ணிக்கைக்கு ஏற்ப, பாட வாரியாக பட்டியல் தயாரிக்கப்பட வேண்டும். முகப்புத்தாள் சேதம் அடைந்தால் அது குறித்து அரசுத் தேர்வுத்துறை உதவி இயக்குனரிடம் கூறி, புதிய முகப்புத்தாள் பெற்றுக் கொள்ளலாம். சேதமடைந்த விடைத்தாளில் தேர்வு எழுதினால் அந்த விடைத்தாள் திருத்தப்படாது. இந்த முறையை இந்த ஆண்டு பொதுத்தேர்வில் அரசுத் தேர்வுத்துறை அறிமுகம் செய்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Read Entire Article