ARTICLE AD BOX
சென்னை,
தமிழ்நாடு சட்டசபையில் பட்ஜெட் மீதான 2வது நாள் விவாதம் தொடங்கி நடைபெற்று வருகிறது. முக்கிய பிரச்சினைகள் தொடர்பாக உறுப்பினர்கள் எழுப்பும் கேள்விகளுக்கு அமைச்சர்கள் பதில் அளித்து வருகின்றனர்.
இதனிடையே டாஸ்மாக் முறைகேடு விவகாரம் குறித்து கேள்வி எழுப்ப எதிர்க்கட்சிகள் திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.
முன்னதாக வரும் நிதி ஆண்டுக்கான தமிழ்நாடு அரசின் பட்ஜெட் கடந்த 14-ம் தேதியும், வேளாண்மைக்கான பட்ஜெட் அறிக்கை 15-ம்தேதியும் தாக்கல் செய்யப்பட்டன. தொடர்ந்து ஞாயிற்றுக்கிழமை விடுமுறை தினம் என்பதால் நேற்று சட்டசபை மீண்டும் கூடியது.
அப்போது தமிழக சட்டசபை சபாநாயகர் அப்பாவுவை, அந்த பதவியில் இருந்து நீக்க வேண்டும் என்று கூறி அ.தி.மு.க. எதிர்க்கட்சி துணைத்தலைவர் ஆர்.பி.உதயகுமார் உள்பட 16 அ.தி.மு.க. உறுப்பினர்கள் தீர்மானம் ஒன்று கொண்டு வந்திருந்தனர். இந்த தீர்மானம், நேற்று சட்டசபையில் விவாதத்திற்கு எடுத்து கொள்ளப்படும் என்று அறிவிக்கப்பட்டு இருந்தது.
அதன்படி நேற்று கேள்வி நேரம் முடிந்ததும், சபாநாயகர் அப்பாவு இந்த தீர்மானத்தை அவையில் எடுத்து கொள்வதாக கூறினார். அதனைத்தொடர்ந்து அவர் சபை மரபுப்படி தனது இருக்கையில் இருந்து எழுந்து சட்டசபையில் இருந்து வெளியேறினார்.
பின்னர் சபாநாயகர் இருக்கையில், துணை சபாநாயகர் பிச்சாண்டி வந்து அமர்ந்து சபையை நடத்த தொடங்கினார். அப்போது அவர், முதலில் இந்த தீர்மானத்தை சபையில் எடுத்துக்கொண்டு விவாதிப்பதற்கு ஆதரவு இருக்கிறதா என்றார். உடனே அ.தி.மு.க. உறுப்பினர்கள் அனைவரும் எழுந்து நின்று ஆம் என்றனர். அப்போது துணை சபாநாயகர் பிச்சாண்டி, சபையில் 35-க்கும் மேற்பட்ட உறுப்பினர்கள் ஆதரவு இருப்பதால் விவாதத்திற்கு எடுத்துக்கொள்வதாக கூறினார்.
பின்னர் 6 டிவிஷன்களாக நடத்தப்பட்டு இறுதியாக முடிவுகளை துணை சபாநாயகர் பிச்சாண்டி அறிவித்தார். அவர், சபாநாயகரை நீக்கக்கோரும் அ.தி.மு.க. தீர்மானத்துக்கு ஆதரவாக 63 பேரும், எதிராக 154 பேரும் இருப்பதாகவும், அதனால் இந்த தீர்மானம் தோல்வி அடைந்ததாகவும் அறிவித்தார்.
அதன்பின் மீண்டும் சபாநாயகர் அப்பாவு சபைக்கு வந்து தனது இருக்கையில் அமர்ந்தார். பின்னர் அவர் இந்த தீர்மானம் தோற்கப்பட்டதற்கு முதல்-அமைச்சர் மற்றும் உறுப்பினர்களுக்கு நன்றி தெரிவித்து பேசினார். அப்போது அவர், சபையை ஜனநாயக முறைப்படி நடத்துவதில் உறுதியாக இருக்கிறேன். சபையில் கவர்னருக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தில் தி.மு.க. உறுப்பினர்கள் 6.30 மணி நேரம் பேசினர். ஆனால் அ.தி.மு.க. உறுப்பினர்கள் 12 மணி நேரத்திற்கு மேலாக பேசினார்கள் என்றார்.