ARTICLE AD BOX
தனது ஜனசேனா கட்சியின் நிறுவன தினத்தின் போது பேசிய ஆந்திரப் பிரதேச துணை முதல்வர் பவன் கல்யாண், மொழிப் பிரச்சனைகளில் தமிழக அரசியல் தலைவர்கள் பாசாங்குத்தனம் காட்டுவதாக தனது நிலைப்பாட்டை எடுத்து வைத்துள்ளார். தென்னிந்திய அரசியலில் ஒரு முக்கிய நபரான பவன் கல்யாண், மொழி மற்றும் வருமானம் ஈட்டுவதில் தமிழ்நாட்டின் அணுகுமுறையில் உள்ள முரண்பாடுகள் குறித்து கேள்விகளை எழுப்பி உள்ளார். இந்தி மொழியை ஏற்பதில் தமிழக அரசியல் தலைவர்கள் கடுமையாக எதிர்க்கும் அதே வேளையில், தமிழ் திரைப்படங்களை இந்தியில் மொழிமாற்றம் செய்ய அனுமதிப்பது முரண்பாடாக இருப்பதை அவர் சுட்டிக்காட்டினார்.
பாலிவுட்டில் இருந்து வரும் வருமானம் மட்டும் இவர்களுக்கு வேண்டும், ஆனால் அந்த மொழி மட்டும் வேண்டாம் என்ற பாகுபாடு சரியானது இல்லை என்று பவன் கல்யாண் எடுத்துரைத்துள்ளார். இந்தி பேசும் தனிநபர்கள் மீதான தமிழ்நாட்டின் அணுகுமுறையில் உள்ள முரண்பாடுகளை பாவம் கல்யாண் மேலும் வலியுறுத்தினார். உத்தரப்பிரதேசம் மற்றும் பீகார் போன்ற ஹிந்தி பேசும் பகுதிகளிலிருந்து வரும் புலம் பெயர்ந்த தொழிலாளர்களை தமிழகம் வேலைக்கு அமர்த்துகிறது. ஆனால் அதே நேரத்தில் இந்தி மொழியையே நிராகரிக்கிறது என்று அவர் குறிப்பிட்டார். இந்த வேறுபாடு தமிழ்நாட்டின் மொழி பெருமை மற்றும் இருமொழிக் கொள்கையில் இருக்கும் பாசாங்குத்தனத்தை விளக்குகிறது என்று தெரிவித்துள்ளார்.
மும்மொழி கொள்கை பிரச்சனை
பாஜக தலைமையிலான மத்திய அரசுக்கும், திமுக அரசுக்கும் இடையே, புதிய கல்விக் கொள்கை தொடர்பாக உச்சகட்ட பதற்றம் நிலவி வரும் நேரத்தில், பவன் கல்யாணின் இந்த கருத்துக்கள் வந்துள்ளன. மும்மொழி கொள்கையை ஏற்காததால் தமிழகத்துக்கு ஒதுக்கப்பட்ட ரூ. 2,152 கோடி நிதியையும் மத்திய அரசு நிறுத்தி வைத்துள்ளது அரசியல் சூழலை மேலும் தீவிரப்படுத்தியுள்ளது. பவன் கல்யாணின் இந்த கருத்துக்கள் இந்தியாவில் உள்ள மொழி அரசியலின் சிக்கல்களை உயர்த்திக் காட்டுகிறது.
"இந்தியா மொழியியல் பன்முகத்தன்மை கொண்ட நாடு ஆகும். இங்கு தமிழ் உட்பட பல மொழிகள் தேசிய ஒருமைப்பாடு மற்றும் ஒற்றுமையை மேம்படுத்துவதில் முக்கிய பங்கு வகிக்கின்றன. நாட்டில் உள்ள வளமான மொழியியல் நிலப்பரப்பு அதன் வரலாறு, கலாச்சாரம் மற்றும் மரபுகளை பிரதிபலிக்கிறது, இந்த பன்முகத்தன்மையைக் குறைப்பதற்குப் பதிலாக அதை ஏற்றுக்கொள்வது அவசியம். சமஸ்கிருதம் மொழியை தமிழ்நாட்டைச் சேர்ந்த அரசியல்வாதிகள் ஏன் எதிர்க்கிறார்கள் என்று புரியவில்லை. அதே நேரத்தில் இந்தி-டப்பிங் படங்களின் வணிக வெற்றியை கொண்டாடுகின்றனர். இந்த முரண்பாடு இந்தியாவில் மொழி அரசியலின் சிக்கலான தன்மைகளை எடுத்துக் காட்டுகிறது" என்று பவன் கல்யாண் மேலும் தெரிவித்துள்ளார்.
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ